Saturday, 27 September 2014

சத்தான பால் இருக்கு... சந்தையும் காத்திருக்கு!

தார்பார்க்கர் பண்ணைக்குள் ஓர் உற்சாக உலா



அதிசயம், ஆனால் நம்ப முடியவில்லை' என்கிற மாதிரி... 'பத்து லிட்டர் பால் கறக்கும் நாட்டுமாடு; கலப்பின மாடுகளை மிஞ்சும் கிர் மாடுகள்' என்பது போன்ற செய்திகளை சில நேரங்களில் கேள்விப்படுவது உண்டு. ஆனால், இதை எங்கே போய் உறுதிப்படுத்திக் கொள்வது என்பதுதான் தலைசுற்றல் விஷயமாக இருக்கும்.
"நாட்டுரக மாடுகள் விஷயத்தைப் பொறுத் தவரை தலைசுற்றலே தேவையில்லை. சொல்லப் படுவது அத்தனையும் உண்மையே... இதை உறுதிப்படுத்திக் கொள்ள வேறு எங்கும் அலைய வேண்டாம். நேரடியாக என் பண்ணைக்கு வந்தால் போதும்" என்று அழைக்கிறார் செங்கல்பட்டு விவசாயி முகுந்தன்.
செங்கல்பட்டு அருகே ஓடிக்கொண்டிருக்கும் பாலாற்றின் கரையில் இருக்கும் சின்னஞ்சிறு சிறிய கிராமம் சிதண்டிமண்டபம். இங்கேதான் இருக்கிறது முகுந்தனுடைய பண்ணை. இங்கே நூற்றுக்கும் மேற்பட்ட தார்பார்க்கர் மாடுகள் சுதந்திரமாக மேய்ந்து கொண்டிருக்க... கன்றுக் குட்டிகளைத் தடவி கொடுத்தபடியே தொடர்ந்தார் முகுந்தன்.
"பரம்பரையாக விவசாயம் செய்து வரும் குடும்பம்தான் எங்களுடையது. அதேபோல மாடுகளையும் வளர்த்து வருகி றோம். முன்பு நிறைய மாடுகள் இருந்தன. பிறகு ஒன்றிரண்டு மாடுகள் எனச் சுருங்கிவிட்டன. நாட்டு மாடு மற்றும் ஜெர்ஸி மாடு கலந்து பிறந்த கலப்பின மாடுகளைத்தான் பெரும்பாலும் வளர்த்தோம். ஒரு நாளைக்கு 6 முதல் 8 லிட்டர் வரை பால் கிடைத்தது. அதுவே எங்களுக்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், வேறு பல தொல்லைகள் வந்தன. கலப்பின மாடுகள் அடிக்கடி நோய்வாய்ப் பட்டன. இரண்டாம் தலைமுறை மாடுகள் சரியான காலத்தில் கருத்தரிக்க முடியாமல் கஷ்டப்பட்டன.
இயற்கை விவசாயத் தேடலில் சிக்கிய தார்பார்க்கர்!
இந்தச் சமயத்தில்தான் பெரிய அளவில் இயற்கை வழியில் காய்கறி சாகுபடி செய்யும் முயற் சிகளில் நான் இறங்கியிருந்தேன். அதனால், இயற்கை உரங்களுக்காக மாட்டுப் பண்ணை ஒன்றையும் உருவாக்க நினைத்தேன். என்ன மாதிரியான மாடுகளை வளர்ப்பது என்கிற கேள்வி எழுந்ததும் பல வகையான மாடுகளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தென்னிந் தியாவில் காணப்படும் பல வகை நாட்டுரக மாடுகள் உழவு மாடுகள்தான். அவை நிறைய பால் கொடுக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால், நிலத்தை உயிர்ப்போடு வைத்திருக்க அந்த மாடுகள் மிகவும் உதவும். பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் முன்னோர்கள் இந்த நாட்டு மாடுகளை வளர்த்துதான் நிலத்தை உயிர்ப்போடு வைத்திருந்தனர்.
ஆனால், வடநாட்டு மாடுகளான சிந்தி, கிர், தார்பார்க்கர், சாகியவால் போன்றவை சிறந்த உழவு மாடுகள் மட்டுமல்ல, அதிக அளவில் பால் கொடுக்கவும் செய்யும். கிர் மாடுகளில் சில, 25 லிட்டர் பால்கூட கறக்கும் என்கிறார்கள். இந்த ரகங்களில் இன்னொரு சிறப்பம்சம், பாலில் கொழுப்புச்சத்து 4.5% அளவுக்கும் குறைவில்லாமல் இருக்கும். கருத்தரிப்பதில் பிரச்னை என்கிற பேச்சே பெரும்பாலும் வராது. வெளிநாட்டு மாடுகளைப் போல ஏ.ஸி, பேன் என்று நவீன வசதிகளை செய்து கொடுக்க வேண்டியதில்லை. 108 டிகிரி வெயில் அடித்தாலும் தார்பார்க்கர் மாடுகள் சளைக்காமல் மேய்ந்துகொண்டிருக்கும். நாள் கணக்கில் மழை பெய்தாலும் அப்படியே கிடக்கும். இந்தப் புல்லைத்தான் சாப்பிடுவேன், அந்த இடத்தில்தான் மேய்வேன் என்றெல்லாம் அடம் பிடிக்காது. கொடுத்ததைச் சாப்பிட்டுவிட்டு நிறைய பால் கொடுக்கும். எல்லாவற்றும் மேலாக அடிக்கடி நோய்வாய்ப்படுதல் என்கிற பிரச்னை இல்லவே இல்லை.
இதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு, 'இத்தனைச் சிறப்புகள் கொண்ட தார்பார்க்கர் மாடுகளை நாம் ஏன் வளர்க்கக்கூடாது?' என்று நினைத்தேன். இந்த ரக மாடுகளை ஏற்கெனவே வாங்கி வளர்த்த அனுபவம் கொண்ட என் நண்பர் மணிசேகர் உதவியோடு ராஜஸ்தானுக்குப் போய், தார்பார்க்கர் மாடுகளை வாங்கி வந்தேன். அவற்றை வளர்க்க ஆரம்பித்தபிறகு, அந்த மாடுகள் பற்றி சொல்லப்பட்டவை அனைத்தும் உண்மை என்பதை நானே நேரடியாக உணர்ந்துகொண்டேன். இன்று நூற்றுக்கும் அதிகமான தார்பார்க்கர் மாடுகள் என்னிடம் இருக்கின்றன. இதில் நாற்பது பசு, மற்றதெல்லாம் காளைகள்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சில மாடுகள் குரல் கொடுக்க... அவற்றுக் கெல்லாம் புல்லை அள்ளிப் போட்டபடியே தொடர்ந்தார் முகுந்தன்.
இரண்டு லிட்டர் கறந்தாலே போதும்!
"நான் வாங்கி வந்த மாடுகள் முதல் தடவை கன்று ஈன்ற பிறகு 12 லிட்டருக்கும் அதிகமாக பாலைக் கொடுத்தன. இரண்டாம் ஈத்துக்குப் பிறகு பாலின் அளவு கொஞ்சம் குறைந்தது. அதேசமயம் தரத்தில் எந்தக் குறையும் இல்லை. என்னிடம் இருக்கும் மாடுகள் சராசரியாக 8 லிட்டர் பால் கறக்கின்றன. 2 லிட்டர் பாலை கன்றுக்குட்டி குடிக்க விட்டுவிடுகிறோம்.
நாங்கள் வளர்க்கும் மாடுகளுக்கு நிறைய தீனி கொடுக்கிறோம் என்று சொல்ல முடியாது. கம்பு, சோளம், வைக்கோல், புல் என ஒரு மாட்டுக்கு ஒரு நாளைக்கு 40 முதல் 50 ரூபாய் வரை செலவு செய்கிறோம். எங்களைப் பொறுத்தவரை ஒரு நாளைக்கு 2 லிட்டர் பால் கறந்தாலே அந்தச் செலவை ஈடுகட்டிவிடும். ஒரு லிட்டர் பால் 20 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். அதுபோக அந்த மாட்டிடம் இருந்து கிடைக்கும் சாணம், சிறுநீர் போன்றவையெல்லாம் எங்களுக்கு லாபம் தான். பால் மூலம் கிடைக்கும் வருமானம் போனஸ்தான். அதைவிட பெரிய வருமானம்.... இயற்கை உரம். அதை வைத்துதான் இத்தனை பெரிய தோட்டத்தில் காய்கறி சாகுபடி நடக்கிறது. சாணம், சிறுநீர் போன்றவற்றை அப்படியே சேமித்து, பாசன நீருடன் வயலுக்குப் பாய்ச்சிவிடு கிறேன். இதன் காரணமாக காய்கறித் தோட்டம் செழிப்பாக இருக்கிறது" என்றார் பெருமிதமாக!
30 மாடு... 20 ஏக்கர் காடு!
அடுத்து, தார்பார்க்கர் மாடுகளை வளர்த்தெடுப் பது பற்றி விவரித்தார் முகுந்தன். "இந்த மாடுகள் கும்பலாக அலைந்து திரிந்து இரை தேடிச் சாப்பிட வேண்டுமென்று நினைப்பவை. எனவே, கொட்டில் முறையைவிட மேய்ச்சல் முறையே சிறந்தது. தார்பார்க்கர் மாடுகளை வளர்க்க நினைத்தால், உங்களிடம் நிறைய இடம் இருக்க வேண்டும். 30 மாடுகள் வளர்க்க, 20 ஏக்கர் நிலமாவது வேண்டும். மாடுகள் மீது நன்றாக சூரிய வெளிச்சம் பட வேண்டும். அப்போதுதான் மாடுகளுக்கு எந்த நோயும் வராது. மாடுகளுக்கென நீங்கள் ஒதுக்கும் இடத்தில் உங்கள் மாட்டுக்குத் தேவையான தீவனப் புற்களை வளர்த்துக் கொள்ளலாம். அப்படி வளர்ப்பதன் மூலமே மாடுகளுக்கு ஆகும் செலவை உங்களால் கணி சமாகக் குறைக்க முடியும். மாட்டுக்குத் தேவையான எல்லாவற்றையும் வெளியிலிருந்து வாங்கினால், நீங்கள் இதில் நிச்சயம் வெற்றி காண முடியாது. கம்பு, சோளம், பிண்ணாக்கு போன்றவற்றை மட்டுமே மற்றவர்களிடமிருந்து வாங்கிக் கொள் ளலாம். மேய்ச்சலுக்குத் தேவையான இடமில் லாதவர்கள் தார்பார்க்கர் மாடுகளை வளர்க்க நினைப்பது பற்றி யோசிக்ககூட வேண்டாம்" என்று கண்டிப்பான குரலில் சொன்னவர், பால் விற்பனை பற்றியும் சொன்னார்.
"தார்பார்க்கர் மாடுகள் தரும் பால் மிகவும் சுவை நிறைந்ததாக இருக்கும். சென்னையில் எனக்குத் தெரிந்த சிலரிடம் இந்தப் பாலை ஒருமுறை கொடுத்தேன். தொடர்ந்து அந்தப் பால் வேண்டும் என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பால், பெரும்பாலும் சென்னையில் உள்ளவர் களுக்குத்தான் போகிறது. ஆனால், கேட்கிற எல்லோருக்கும் கொடுக்க முடிவதில்லை.
இந்தப் பாலில் தயாராகும் தயிரின் சுவையும் அற்புதமாக இருக்கும். செங்கல்பட்டில் உள்ள ஒரு ஓட்டலில் எங்கள் தயிரைத்தான் தினசரி வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்கிறார்கள். அதற்கு பெரும் ரசிகர் கூட்டமே இருப்பதாக ஓட்டல் உரிமையாளர் சொல்லியிருக்கிறார்" என்று சொல்லும் முகுந்தன், தார்பார்க்கர் மாடு வளர்க்க நினைப்பவர்களுக்கு சில யோசனை களையும் முன் வைத்தார்.
கூட்டுறவுச் சங்கத்திடம் விற்காதீர்கள்!
"உங்கள் பண்ணையில் உற்பத்தியாகும் பாலை கூட்டுறவுச் சங்கங்களுக்குக் கொடுப்பதற்கு பதிலாக, நேரடியாக மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா என்று பாருங்கள். நான் இப்படிச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது. ஒன்று, நேரடியாக விற்பனை செய்வதன் மூலம் உங்களுக்கு நல்ல விலை கிடைக்கும். உடனுக்குடன் பணமும் கிடைக்கும். தவிர, உங்கள் பால் வேறு மாடுகளின் பாலோடு சேர்ந்து தனித்தன்மையை இழக்காமல் இருக்கவும் இது உதவும்.
பிளாஸ்ட்டிக் பால் பாக்கெட்டுகளின் ஆதிக்கம் பட்டி தொட்டிகளில் எல்லாம் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் நம்மிடம் யார் பால் வாங்குவார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. தமிழ்நாட்டில் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள். நிறைய புதிய குடியிருப்புகள் உருவாகியுள்ளன. சத்தான, நல்ல பால் வேண்டும் என்று மக்களும் ஏங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். பாலின் தரத்தில் மட்டும் எந்தக் குறையும் இல்லாமல் உங்களால் கொடுக்க முடியும் எனில், 100 லிட்டர் பாலைக்கூட உங்களால் நிச்சயம் விற்க முடியும். பால் மட்டுமல்ல, நீங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளையும் விற்க இது ஒரு நல்ல வாய்ப்பு" என்று தன்னுடைய அனுபவத்திலிருந்து எடுத்து வைத்தார் முகுந்தன்.
'பாலை பெருக்குகிறேன் பேர்வழி' என்று அந்நிய நாட்டு மாடுகளை இறக்குமதி செய்வதற்கு அளவில்லாத உதவிகளைச் செய்யும் அரசு, பரந்துவிரிந்த பாரத தேசத்துக்குள்ளேயே இருக்கும் இத்தகைய நாட்டுமாடுகளை கொஞ்சம் ஏறெடுத்துப் பார்க்கலாமே!


40 ஆண்டுகள் நிற்கும் கொட்டகை!
மாட்டுப் பண்ணையை பெரும்பாலும் கீற்று மற்றும் வைக்கோல் வேயப்பட்ட கொட்டகையில்தான் அமைப்பார்கள். அல்லது "ஆஸ்பெஸ்டாஸ் ஷீட்' எனப்படும் கல்நார்ப் பலகை கொண்டு மைத்திருப் பார்கள். முகுந்தனோ கொஞ்சம் வித்தியாசமாக ஃபெரோ சிமென்ட் (Ferrocement) பயன்படுத்தி மாட்டுக் கொட்டகையை அமைத் திருக்கிறார்.
"அது என்ன ஃபெரோ சிமென்ட்?' என்று அவரிடம் கேட்டோம்.
ஃபெரோ சிமென்ட் என்பது இரும்பு மற்றும் சிமென்ட் கொண்டு உருவாக்கப்படும் பலகை தான். ஆனால், ஆஸ்பெஸ்டாஸில் உள்ள தீமை தரும் விஷயம் இதில் இல்லை. பல வெளிநாடுகளில் ஆஸ்பெஸ்டாஸைத் தடை செய்திருக்கிறார்கள். ஃபெரோ சிமென்ட்டுக்கு அப்படித் தடை ஏதும் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் பலகையின் விலை ஒரு சதுர அடி 10 ரூபாய். ஃபெரோ சிமென்ட் பலகை 30 ரூபாய். விலை அதிகம்தான் என்றாலும், குறுக்குவாட்டில் தாங்கி நிற்க எந்த முட்டும் கொடுக்காமல் இந்தப் பலகையை நிறுத்த முடியும். ஆஸ்பெஸ்டாஸ் பலகையை அப்படி நிறுத்த முடியாது. இன்னொரு முக்கியமான விஷயம், ஆஸ்பெஸ்டாஸ் 5 ஆண்டு காலம் மட்டுமே பயன் தரக் கூடியது. ஃபெரோ சிமெண்ட் பலகையோ 40 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கக் கூடியது பராமரிப்புச் செலவு ஏறக்குறைய பூஜ்யம் என்றுதான் சொல்லவேண்டும். ஃபெரோ சிமெண்ட் பலகையைக் கொண்டு செட் அமைப்பது குறித்து பாண்டிச்சேரி அருகேயுள்ள ஆரோவில்லில் பயிற்சி கொடுக்கிறார்கள்’’ என்றார் முகுந்தன்.


நன்றி: பசுமை விகடன்

Sunday, 7 September 2014

என்ன தெளிக்கலாம், எப்படி தெளிக்கலாம்?

இங்கே நான் சொல்லும் கணக்குகள் எல்லாமே ஒரு ஏக்கர் அளவில் விதைக்கப்பட்டிருக்கும் பயிர்களுக்கானவை. ஜீவாமிர்தம் தெளிக்கவேண்டிய காலம் மற்றும் அளவுகள் பற்றி இப்போது பார்ப்போம்.
உளுந்து, பச்சைப்பயறு, கம்பு, தட்டைப்பயறு, சோயா போன்ற 90 நாட்கள் வயது கொண்ட பயிர்களுக்கு,
முதல் தெளிப்பு, விதைப்புச் செய்த 21-ம் நாள் செய்யவேண்டும். 100 லிட்டர் நீரில், 5 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும். அடுத்து, 21 நாட்கள் கழித்து இரண்டாவது தெளிப்பு. 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்திலும், மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்கிற விகிதத்திலும் கலந்து தெளிக்கவேண்டும்.
நான்காவது தெளிப்பு, பயிர் பால் பிடிக்கும் தருணத்தில் செய்யப்பட வேண்டும். 200 லிட்டர் நீருடன், பசு அல்லது எருமை மாட்டின் மோர் 5 லிட்டர் கலந்து தெளிக்கவேண்டும். இப்படிச் செய்வதால் பயிர்களுக்கு ஊட்டச் சத்துக் கிடைக்கிறது. இதனால் பயிர் வேகமாக வளர்ந்து நல்ல பலன் கொடுக்கும்.
நெல், கோதுமை, கேழ்வரகு, காய்கறி என 90 முதல் 120 நாட்கள் வயது கொண்ட பயிர் வகைகள் மற்றும் மலர்ச் செடிகளுக்கு
நடவு செய்த ஒரு மாதத்துக்கு பிறகு, முதல் தெளிப்பு தெளிக்க வேண்டும். 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிக்க வேண்டும். அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது தெளிப்பு, 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம். மூன்றாவது தெளிப்பு 200 லிட்டர் நீம்அஸ்திரா (இந்தத் தருணத்தில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும். அதைத்தடுக்க நீம்அஸ்திரா மட்டும் தெளிக்கவேண்டும்). நான்காவது தெளிப்பு, 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.
கடைசித் தெளிப்பு, பால் பிடிக்கும் நேரத்தில் 200 லிட்டர் நீருடன் 5 லிட்டர் புளித்த மோர் கலந்து தெளிக்கவேண்டும். மலர்ச் செடிகளைப் பொறுத்தவரை, மொட்டுப் பருவத்தில் இத்தெளிப்பைச் செய்யவேண்டும்.
உளுந்து, சோளம், காய்கறி, கொண்டைக்கடலை, நிலக்கடலை, எள் போன்ற 120 முதல் 150 நாட்கள் வயது கொண்ட பயிர்களுக்கு விதைப்பு செய்த ஒரு மாதம் கழித்து 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். இரண்டாவது தெளிப்பு தொடங்கி, அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ள வேண்டும். இரண்டாவது தெளிப்பு, 150 லிட்டர் நீருடன் 10 லிட்டர் ஜீவாமிர்தம். மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீம்அஸ்திரா(இந்தத் தருணத்தில் பூச்சி, நோய் தாக்குதல் ஏற்படும். அதைத்தடுக்க நீம்அஸ்திரா மட்டும் தெளிக்கவேண்டும்). நான்காவது தெளிப்பு, 200 லிட்டர் நீர் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஐந்தாவது தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 5 லிட்டர் மோர். ஆறாவது தெளிப்பு 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும்.
பருத்தி, மிளகாய், துவரை, இஞ்சி, ஆமணக்கு, கொடிபூசணி, அவரை, பாகல் போன்ற 150 முதல் 210 நாட்கள் வயது கொண்ட பயிர் களுக்கு விதைப்புச் செய்த ஒரு மாதம் கழித்து 100 லிட்டர் நீருடன் 5 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்க வேண்டும். இரண்டாவது தெளிப்பு, ஒரு மாத இடைவெளியில் 150 லிட்டர் நீருடன், 10 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். அடுத்தடுத்த தெளிப்புகளை 21 நாட்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளவேண்டும். மூன்றாவது தெளிப்பு, 200 லிட்டர் நீம் அஸ்திரா. நான்காம் தெளிப்பு, 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஐந்தாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 6 லிட்டர் பிரமாஸ்திரம் (இந்த நேரத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், வண்டுகள், காயை குடையும் புழுக்கள் போன்றவற்றால் பாதிப்பு வருவதைத் தடுக்கவே பிரமாஸ்திரம்). ஆறாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 20 லிட்டர் ஜீவாமிர்தம். ஏழாவது தெளிப்புக்கு 200 லிட்டர் நீருடன் 6 லிட்டர் அக்னி அஸ்திரா (காய்ப்புழு, தண்டு துளைப் பான் போன்ற புழுக்கள் கட்டுப்படும்) என்ற விகிதங்களில் கலந்து தெளிக்க வேண்டும்.
எட்டாவது தெளிப்புக்கு சுக்கு அஸ்திரா (பூஞ்சானக் கொல்லி) 200 லிட்டர் தெளிக் கலாம். ஒன்பதாவது தெளிப்பின்போது பச்சைப் பயறு, தட்டைப்பயறு, கொள்ளு, கொண்டைக் கடலை, துவரை பயறு ஆகியவற்றுடன் எள் மற்றும் கேழ்வரகு என ஏழு தானியங்களை அரைத்து மாவாக்கித் தெளிக்கவேண்டும். தானியங்களை தலா 100 கிராம் வீதம் எடுத்து நீரில் ஊற வைத்து, பின்பு பருத்தித் துணியில் கட்டி வைக்கவேண்டும். முளை கட்டியதும் எள் உட்பட எல்லாவற்றையும் அம்மி அல்லது உரலில் போட்டு ஆட்டி மாவாக எடுத்துக் கொள்ளவும். இந்த மாவினை 200 லிட்டர் நீரில் கலந்து, அதனுடன் 10 லிட்டர் மாட்டுச் சிறுநீர் கலந்து 24 மணி நேரம் நிழலில் வைத்தி ருக்கவும். பின்பு இதைப் பயிர்களுக்குத் தெளிக் கலாம். இதனுடன் 2 லிட்டர் தேங்காய் (இளநீர் அல்ல) தண்ணீரை கலந்து தெளிப்பது பயிர் வளர்ச்சிக்கு கூடுதல் உதவியாக இருக்கும்.
கரும்பு, வாழை... போன்ற ஓராண்டு பயிர் களுக்கு முதல் 5 மாதம் வரை கடலை, நெல் போன்றவற்றுக்கு தெளிப்பது போலவே தொழில் நுட்பங்களைக் கடைப்பிடிக்கலாம்.
6 மற்றும் 8-ம் மாதங்களில் 200 லிட்டர் நீரில் 20 லிட்டர் ஜீவாமிர்தம் கலந்து தெளிக்கவேண்டும். 9-ம் மாதம் ஏழு வகை தானியங்களை மாவாக்கி (பருத்தி மற்றும் துவரை போன்றவற்றுக்குச் சொல்லப்பட்டது போல) தெளிக்கவேண்டும்.
தென்னை, மா, கொய்யா... போன்ற பல ஆண்டு பயிர்களுக்கும் இதே முறையை பின்பற்றி தெளிக்கலாம்'' என்று விரிவாகச் சொன்ன பாலேக்கர்,
பயிர்கள் ஆரோக்கியமாக வளர வேண்டும் என்றால் விதை பழுதில்லாமல் இருக்க வேண்டும். தரமான விதை களுக்கான தொழில்நுட்பம், ஒரு பயிர் எந்தளவுக்கு மண்ணில் இருந்து சத்துக்களை எடுத்துக் கொள்கிறது என்பது பற்றியெல்லாம் பேசினார். அவை...

பிரம்மாஸ்திரா
மூன்று கிலோ அளவிலான வேப்பங்குச்சிகளை விழுதாக அரைக்கவேண்டும். இதனுடன் சீத்தா, புங்கன், ஆமணக்கு, பப்பாளி, கொய்யா, ஊமத்தை, கருவேலம், பாகல் ஆகியவற்றின் இலைகளை தலா இரண்டு கிலோ வீதம் சேர்த்து அரைக்கவேண்டும் (ஏதாவது ஐந்து இலைகள் இருந்தால் கூட போதும். இலைகளை அப்படியே போட்டால், பிரம்மாஸ்திரம் தயாராவதற்கு நாள் பிடிக்கும்). இவற்றைப் பத்து லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கலந்து அடுப்பில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும். பின்பு 48 மணி நேரம் குளிர வைத்து, வடிகட்டி, பயிர்களுக்கு தெளிக்கலாம். இந்தக் கரைசலை ஆறு மாதம் வரை சேமித்து வைத்திருக்கலாம்.
அக்னி அஸ்திரம்
புகையிலை அரை கிலோ, பச்சை மிளகாய் அரை கிலோ, பூண்டு அரை கிலோ, வேம்பு இலை 5 கிலோ ஆகியவற்றை அரைத்து, 15 லிட்டர் பசுமாட்டு சிறுநீரில் கரைக்கவேண்டும். இதை நான்கு முறை கொதிக்கவைத்து இறக்கிக் கொள்ளவும். 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டி பயிர்களுக்கு தெளிக்கலாம். இக்கரைசலை 3 மாதம் வரை பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.
சுக்கு அஸ்திரா
சுக்குத் தூள் 200 கிராம் எடுத்து, 2 லிட்டர் நீரில் கலந்து பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். பின்பு குளிர வைக்கவும். பசு அல்லது எருமைப் பால் 5 லிட்டர் எடுத்து, தாமிரம் தவிர்த்த பிற பாத்திரங்களில் கொதிக்க வைக்கவும். படிந்திருக்கும் ஆடையை எடுத்து விடவும். ஆறிய பிறகு இதனுடன் 200 லிட்டர் நீர் மற்றும் சுக்கு கலந்த நீர் ஆகியவற்றைக் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம். இது சிறந்த பூஞ்சானக் கொல்லியாகும். இதை 21 நாட்கள் வரை சேமித்து வைக்கலாம்.
தயாரிப்பது எப்படி?
பீஜாமிர்தம்
தண்ணீர் 20 லிட்டர், பசு மாட்டுச் சாணம் 5 கிலோ, கோமியம் 5 லிட்டர், நல்ல நுண்ணுயிரிகள் இருக்கும் மண் ஒரு கைப்பிடி அளவு. இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக கலக்கவேண்டும். மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நன்றாக ஊறவிட வேண்டும். இதுதான் பீஜாமிர்தம். அதன் பிறகு சுத்தமானச் சுண்ணாம்பு 50 கிராம் போட்டு அதைக் கலக்கவேண்டும். அதன்பிறகே விதையை அந்தக் கரைசலில் நனையவிட்டு, விதைக்கவேண்டும். கரைசலில் சுமார் 2 மணிநேரம் விதைகளை நனையவிட்டால் போதும். பயிர்களைத் தாக்கும் வேர் அழுகல், வேர்க் கரையான், வேர்ப்புழு நோய்கள் தடுக்கப்படுகின்றன.
ஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 10 கிலோ, கோமியம் 10 லிட்டர், வெல்லம் 2 கிலோ, பயறு மாவு (உளுந்து, துவரை ஏதாவது ஒன்று) 2 கிலோ, தண்ணீர் 200 லிட்டர் இதனுடன் ஒரு கைப்பிடி உங்கள் நிலத்தின் மண் சேர்த்து பிளாஸ்டிக் கேனில் 48 மணி நேரம், அதாவது இரண்டு நாட்கள் வைத்திருக்கவேண்டும். பிளாஸ்டிக் கேனை மரத்தின் நிழலில் வைப்பது முக்கியம். காலை, மதியம், மாலை என்று மூன்று முறை கடிகாரச் சுற்றுப்படி குச்சி வைத்து இதைக் கலக்கி விட்டு வந்தால் ஜீவாமிர்தம் தயார். இது ஒரு ஏக்கருக்கான அளவு. பாசன நீரிலேயே கலந்து விடலாம்.
கனஜீவாமிர்தம்
பசுஞ்சாணம் 100 கிலோ, 2 கிலோ வெல்லம், 2 கிலோ பயறு மாவு போதும். இதை எல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளுங்கள் கூடவே உப்புமா பதம் வருவதற்கு எவ்வளவு தேவையோ அந்தளவுக்கு கோமியத்தைக் கலந்தால் போதும்.
நீம் அஸ்திரா!
நாட்டுமாட்டுச் சாணம் இரண்டு கிலோ, நாட்டுமாட்டுச் சிறுநீர் 10 லிட்டர், வேப்பங்குச்சிகள் மற்றும் இலை 10 கிலோ இவற்றை பெரிய பாத்திரத்தில் போட்டு, 200 லிட்டர் நீரையும் ஊற்றி 48 மணி நேரம் ஊற வைக்கவேண்டும். மூடி போட்டு மூடக்கூடாது. இதை கடிகாரச்சுற்றுக்கு எதிர்திசையில் மூன்று தடவைக் கலக்கிவிடவேண்டும். பின்பு வடிகட்டி, பயிர்களுக்குத் தெளிக்கலாம்.

கால்நடைகளைக் காப்போம்.... விவசாயத்தை மீட்போம்!

கால்நடைகளைக் காப்போம்....விவசாயத்தை மீட்போம்!"





மகால்நடை பல்கலைக்கழக துணைவேந்தர் 'சுளீர்'பேட்டி!
‘‘விவசாயம் பொய்த்துப் போனாலும், ஆடு, மாடுகள் விவசாயிகளுக்குச் சோறு போடும். விவசாயத்தையும், கால்நடையையும் பிரித்துப் பார்க்கவே முடியாது. இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, கால்நடைகளை புறக்கணிக்க தொடங்கியதால்தான் விவசாயத்தில் தேக்கம் ஏற்பட்டிருக்கிறது''
-இப்படிச் சொல்வது 'இயற்கை வேளாண் விஞ்ஞானி' நம்மாழ்வாரோ... அல்லது 'வேளாண் வித்தகர்' சுபாஷ் பாலேக்கரோ அல்ல... கிராமிய மணம் கமழ இப்படிச் சொல்பவர் டாக்டர்.ப. தங்கராஜு. இவர், சென்னையிலிருக்கும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தர்.
பால் வாசம் 'கமகம'க்க வரிசையாக பால் வண்டிகள் வரிசைக் கட்டி நிற்கின்றன... ம்ம்மா.. என்று மாடுகள் கோஷ்டி கானம் பாடுகின்றன... 'ம்மே' என்று ஆடுகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன... இத்தனையும் சென்னையை உரசிக்கொண்டிருக்கும் மாதவரம் பால்பண்ணை வளாகத்தில்தான். இதற்குள்தான் இருக்கிறது கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம்.
'ஆர்கானிக் விவசாயம்' எனப்படும் இயற்கை வேளாண்மை இன்று பரபரப்பாக பேசப்படுகிறது. விவசாயி களால் பரவலாக மேற்கொள்ளப்படும் ஒன்றாகவும் இருக்கிறது. அதேபோல 'ஆர்கானிக் பால்', 'ஆர்கானிக் முட்டை' போன்ற பேச்சுக்களும் இன்னொரு பக்கம் றெக்கை கட்ட ஆரம்பித்திருக்கிறது. 'இதெல்லாம் எந்த அளவுக்கு இங்கே சாத்தியம்... கால்நடைத்துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது? என்பது போன்ற கேள்விகளுடன் துணைவேந்தர் தங்கராஜுவைச் சந்தித்தோம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவு இப்போது உற்பத்தி செய்யப்படும் பால், ஆர்கானிக் தரத்தில்தான் இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள எந்த விவசாயியும் அதிக பால் வேண்டும் என்று 'ஹார்மோன்' ஊசியைப் போடுவதில்லை. கடையில் விற்கும் தீவனங்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. பசுந்தீவனங்கள், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைக் கொடுத்தே வளர்த்து வருகிறார்கள். ஆகையால், இப்போது கிடைக்கும் பாலில் நஞ்சு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேசமயம், ஆர்கானிக் பால் என்று பிரித்துப் பார்த்தால், அது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தீவனத்தில் இருந்தே தொடங்குகிறது. நிலத்தில் ரசாயனம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் போட்டு பசுந்தீவனங்களை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுத்தால், அது நூறு சதவிகித 'ஆர்கானிக் பால்' என்று சொல்லலாம். இதை தமிழ கத்தில் எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால், ஆர்கானிக் பால் விஷயத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும்.''
''ஜெர்சி போன்ற வெளிநாட்டு இன மாடுகளை வளர்க்கச் சொல்லியே விவசாயிகளை அரசு தூண்டுகிறது. இதனால் நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''
''இங்கே முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம் மண்ணுக்குரிய மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட நம்நாட்டு இனங்களை அரசு கால்நடைத்துறை பாதுகாத்து வளர்த்து வருகிறது.''
''வெளிநாட்டு மாடுகளான ஜெர்சி, பிரிசியன் போன்ற வைகளை வளர்க்க வேண்டாம். இதனால் நஷ்டம்தான் ஏற்படும். நாட்டுமாடுகளே போதும் என்கிறார்களே?''
''ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெர்சி போன்ற மாடுகள் குளிர் பிரதேசத்தில் இருந்தவை. அவை, நம்நாட்டின் வெப்பச் சூழலை தாங்கி வளரமுடியவில்லை. உதாரணத்துக்கு, நமது மாடுகளில் வெப்பத்தை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் உண்டு. இதில், பத்தில் ஒரு பங்குதான் வெளிநாட்டு மாடுகளிடம் இருக்கிறது. எனவேதான் அவைகளால் பெரும்பாலும் நம் சூழ்நிலைக்குத் தாக்குபிடிக்க முடியவில்லை.
தமிழ்நாட்டைப் பொறுத்தளவு இப்போது உற்பத்தி செய்யப்படும் பால், ஆர்கானிக் தரத்தில்தான் இருக்கிறது. கிராமப்புறத்தில் உள்ள எந்த விவசாயியும் அதிக பால் வேண்டும் என்று 'ஹார்மோன்' ஊசியைப் போடுவதில்லை. கடையில் விற்கும் தீவனங்களை பெரும்பாலும் வாங்குவதில்லை. பசுந்தீவனங்கள், தவிடு, புண்ணாக்கு போன்றவற்றைக் கொடுத்தே வளர்த்து வருகிறார்கள். ஆகையால், இப்போது கிடைக்கும் பாலில் நஞ்சு இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேசமயம், ஆர்கானிக் பால் என்று பிரித்துப் பார்த்தால், அது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பசுந்தீவனத்தில் இருந்தே தொடங்குகிறது. நிலத்தில் ரசாயனம், பூச்சி மருந்துகள் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களைப் போட்டு பசுந்தீவனங்களை வளர்த்து, மாடுகளுக்குக் கொடுத்தால், அது நூறு சதவிகித 'ஆர்கானிக் பால்' என்று சொல்லலாம். இதை தமிழ கத்தில் எல்லோரும் கடைபிடிக்க ஆரம்பித்து விட்டால், ஆர்கானிக் பால் விஷயத்தில் தமிழ்நாடு முன்னிலை வகிக்கும்.''
''ஜெர்சி போன்ற வெளிநாட்டு இன மாடுகளை வளர்க்கச் சொல்லியே விவசாயிகளை அரசு தூண்டுகிறது. இதனால் நாட்டு மாடுகள் அழிந்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?''
''இங்கே முக்கியமான விஷயம் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நம் மண்ணுக்குரிய மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே காங்கேயம், உம்பளச்சேரி உள்ளிட்ட நம்நாட்டு இனங்களை அரசு கால்நடைத்துறை பாதுகாத்து வளர்த்து வருகிறது.''
''வெளிநாட்டு மாடுகளான ஜெர்சி, பிரிசியன் போன்ற வைகளை வளர்க்க வேண்டாம். இதனால் நஷ்டம்தான் ஏற்படும். நாட்டுமாடுகளே போதும் என்கிறார்களே?''
''ஓரளவு இதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது. ஜெர்சி போன்ற மாடுகள் குளிர் பிரதேசத்தில் இருந்தவை. அவை, நம்நாட்டின் வெப்பச் சூழலை தாங்கி வளரமுடியவில்லை. உதாரணத்துக்கு, நமது மாடுகளில் வெப்பத்தை வெளியேற்ற வியர்வை சுரப்பிகள் உண்டு. இதில், பத்தில் ஒரு பங்குதான் வெளிநாட்டு மாடுகளிடம் இருக்கிறது. எனவேதான் அவைகளால் பெரும்பாலும் நம் சூழ்நிலைக்குத் தாக்குபிடிக்க முடியவில்லை.
நம் நாட்டுமாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றபடி உருவாகியுள்ளன. சேற்று உழவு செய்ய உம்பளச்சேரி (சோழ மண்டலம்), கடின வேலைகளுக்கு காங்கேயம் (கொங்கு மண்டலம்) என வகை வகையாக இங்கேயே இருக்கின்றன.
'உம்பளச்சேரி மாடு' என்பது குட்டையான கால்களுடன் இருக்கும். அதனால்தான் வயல் சேற்றில் கால் புதைந்து போகாமல் அவை நன்றாக உழவு செய்கின்றன. அந்த மாடுகள் சுமார் 8 மணி நேரம் சோர்வு அடையாமல் வயலில் வேலை செய்யும் என்பது ஆச்சர்யமூட்டும் செய்தி.
காங்கேயம் ரக மாடுகள் அசராமல் உழைக்கும். விவசாயிகளுடன் போட்டிப்போட்டுக் கொண்டு வேலை செய்யும்.
ஆக, நாட்டுமாடுகள் நம் விவசாயிகளுக்கும், விவசாயத்துக்கும் ஏற்றவைதான் அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம். நாட்டு மாடுகள் குறைந்து போனதற்கு விவசாயிகளும் ஒரு காரணம். அதிக அளவில் இயந்திரங்கள் வந்ததும், மாடுகளை ஓரங்கட்டிவிட்டனர். அதனிடம் இருந்து இயற்கை உரங்கள் கிடைக்கும் என்பதற்காகவாவது அவற்றை வைத்திருக் கலாமே!''
''நாட்டு மாடுகள் அதிகம் பால் கொடுக்காது. அதை வளர்த்தால் நஷ்டம்தான் ஏற்படும் என்றும் ஒரு கருத்து உள்ளதே?''
''நம் முன்னோர்கள் மிகுந்த புத்திசாலிகள். ஒவ்வொன்றையும் தனித்தனியாக பிரித்து வைத்துள்ளார்கள். வேலைகளை செய்ய ஒரு மாடு, பால் கொடுக்க ஒரு மாடு, உரம் கொடுக்க மற்றொரு மாடு என்று வகைப் படுத்தி வைத்துள்ளார்கள். வேலை செய்யும் மாட்டிடம், பால் உற்பத்தி அதன் கன்றுக்குத் தேவையான அளவுதான் இருக்கும். அதாவது, ஒன்று அல்லது இரண்டு லிட்டர் மட்டுமே இருக்கும்.
நாட்டு மாடுகளிலும் அதிக பால் கொடுக்கும் திறன் கொண்ட ரகங்கள் உள்ளன. சாகியவால், சிந்தி, தார்பார்க்கர் போன்றவை 5 முதல் 10 லிட்டர் வரை பால் கொடுக்கும் திறன் கொண்டவை. நமது நாட்டு இனங்களிலேயே அதிக பால் தரும் இப்படிப்பட்ட இனங்களை தேர்ந்தெடுத்து வளர்க்கலாம். நம்நாட்டு மாடுகளின் பலத்தை அறிந்த பிரேசில் விஞ்ஞானிகள், நம்முடைய ஒங்கோல் மாட்டை தங்களது நாட்டுக்கு எடுத்துச் சென்று, இறைச்சிக்காக வளர்க்கிறார்கள். கென்ய நாட்டினர், நம்முடைய சாகியவால் இனத்தை எடுத்துச்சென்று பால் உற்பத்திக்கு முயற்சித்து வருகிறார்கள். நம்முடைய தார்பார்க்கர், சாகிய வால் போன்ற ரகங்களை ஆஸ்திரேலியாவுக்குக் கொண்டு சென்று, 'ஆஸ்திரேலியன் ஜீபு' என்ற பெயரில் புதுரகம் உருவாக்கியுள்ளனர். நம்முடையது நோய் எதிர்ப்புச் சக்தி மிக்கது என்பதற்காகவே ஆஸ்திரேலியர்கள் கொண்டு சென்றுள்ளனர். இப்படி உலக அளவில் இந்திய மாட்டு இனங்கள் மீது ஒரு கண் உண்டு. அந்தளவுக்கு நம் நாட்டு இனங்களிடம் வளங்கள் நிறைந்து கிடக்கின்றன.''
''நாட்டு மாடுகளை பாதுகாப்பதற்காக அரசிடம் ஏதாவது திட்டம் இருக்கிறதா?''
''தேசிய கால்நடை மரபியல் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டு, நாடு முழுக்கவுள்ள நாட்டு இனங்கள் குறித்த கணக்கெடுப்பு ஏற்கெனவே நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத் தவரை காங்கேயம் இனத்தில் இரண்டரை லட்சம், உம்பளச்சேரி இனத்தில் இரண்டு லட்சம் மாடுகள் உள்ளதாக தெரிய வந்திருக்கிறது. ஆலம் பாடி எனப்படும் வண்டி இழுக்கும் மாடுகளின் எண்ணிக்கை மிகவும் கவலை தரும் விதத்தில் இருக்கிறது. மொத்தமே ஆயிரத்துக்குள்தான் இருக்கின்றன.
தமிழகத்தில் எட்டு செம்மறியாட்டு இனங்கள் உள்ளன. திருநெல்வேலிப் பகுதிகளில் வளர்க்கப் பட்டு வந்த கீழக்கரிசல் செம்மறி ஆடு மொத்தம் 5 ஆயிரம்தான் இருக்கிறது. இது மிக மிகச் சிறந்த ரகம். இதைக் காக்கத் தவறிவிட்டோம். நீலகிரியில் தோடா எருமை மாடுகள் 5 ஆயிரம்தான் உள்ளன. இது மிகவும் அரிய இனம். இப்போது அருகிய இனமாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.
நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காகத்தான் கணக்கெடுப்பும் நடத்தப்பட்டது. அதேசமயம், ஒவ்வொரு விவசாயியும் தன்னுடைய நிலத்தைப் பேணிக் காப்பதுபோல நாட்டு மாடுகளை வளர்க்க வேண்டும். அது அவர்களது கடமை.
காங்கேயம் இனத்தை பாதுகாக்க ஒரு சங்கம் ஈரோடு பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது. 'குரங்கு ஆடு' என்கிற ரக ஆடுகளை மதுரையிலிருக்கும் சேவா சங்கம் பாதுகாத்து வருகிறது. இதேபோல உம்பளாச்சேரி, பர்கூர், ஆலம்பாடி இனங்களை பாதுகாக்கவும் சங்கம் அமைக்கவும் விவசாயிகள் முன் வரவேண்டும். அவர் களுக்கு தேவையான வழிக்காட்டுதலை அரசும், பல்கலைக்கழகமும் செய்யத் தயாராக இருக்கின்றன.
பிரதமரின் அவசரகால நிவாரண நிதியைப்போல, நாட்டு மாடுகளை பாதுகாக்கவும் நிதி உதவி திட்டத்தை தொடங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் ஒரு பக்கம் நடந்து வருகின்றன.''
''கால்நடை வளர்ப்பவர்களைப் பொறுத்தவரை, அரசுத்துறைகளிடம் இருந்து தொழில்நுட்ப அறிவுரைகள் பெறுவதில் சிரமம் இருப்பதாகச் சொல்கிறார்களே?''
''இன்றைக்கு விவசாயத்தைக் காட்டிலும் அதிக வருவாய் கொடுக்கக் கூடியதாக கால்நடை வளர்ப்பு இருக்கிறது. அவற்றை அறிவியல் பூர்வமாக செய்தால் கூடுதல் லாபம் பெற முடியும். பல்கலைக்கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுக்க கால்நடை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையங்கள்-17, உழவர் பயிற்சி மையங்கள்-3, வேளாண் அறிவியல் நிலையங்கள்- 3 செயல்பட்டு வருகின்றன. மாதம்தோறும் விவசாயிகளுக்கு வேண்டிய தொழில்நுட்ப அறிவுரைகளும், பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள தொலைநிலைக் கல்வி இயக்கம் மூலம் கறவை மாடு, ஆடு, கோழி, மீன் போன்றவை குறித்து அஞ்சல் வழியில் சான்றிதழ் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் சேர்ந்தும் விவசாயிகள் கால்நடைத் தொழில் நுட்பங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்பல்கலைக்கழகமே விவசாயிகளுக்காகத்தான் செயல்பட்டு வருகிறது. அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய எங்கள் விஞ்ஞானிகள் தயாராக உள்ளனர். உரிய உதவிகள் கிடைக்காவிட்டால் எனது அலுவலகத்தை விவசாயிகள் தொடர்பு கொள்ளலாம். உடனே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்று உறுதியான குரலில் சொன்னார்.
தொடர்புக்கு துணைவேந்தர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை வளாகம், சென்னை-600051, தொலைபேசி 044-25551574.


நன்றி: பசுமை விகடன்

Tuesday, 2 September 2014

ஆடு, மாடு கடிக்காத உயிர் வேலி

‘‘கிளுவை, கிளா, கள்ளி என்று ஒவ்வொரு பகுதிக்கும் தக்கவாறு உயிர்வேலிகள் நிறையவே இருந்தன. ஆனால், பல பகுதிகளில் இதன் பயன் தெரியாமல் கைவிட்டுவிட்டனர். விவரம் தெரியாமல் அழித்துவிட்டு, கடன் வாங்கி கம்பி வேலி போடுபவர்களும் உண்டு.
எங்கள் மாவட்டத்தில் கிளுவை மரச்செடியைத்தான் இப்போதும் கூட பரவலாக பயன்படுத்தி வருகிறோம். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை பகுதியிலும் பரவலாக இதைப் பார்க்க முடியும். சிவகங்கை உள்ளிட்ட சில பகுதிகளில் கள்ளி வேலியை பார்க்கலாம்.
கிளுவையைப் பொறுத்தவரை குறிப்பாக மானாவாரி நிலத்தில் இது அருமையாக வளரும். தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய நிலத்தில் வளராது. இதை நடவு செய்வதற்கு ஆடி, ஆவணி மாதங்கள் ஏற்றது. பருவமழைக் காலத்தில் நடவு செய்தால் உடனே வேர் பிடிக்கும். ஆடு, மாடுகள் கடிக்காது (வெள்ளாடு மட்டும் கடிக்கும்). மண் அரிப்பைத் தடுக்கும், நிரந்தர வேலியாகவும் இருக்கும். தூதுவளை, கோவைக்காய், சிறுகோவை போன்றவற்றை இதன் மீது படரவிட்டு, வருமானம் பார்க்கலாம்.
கம்பி வேலி, கல்வேலி என்று செலவு பிடிக்கும் சமாச்சாரங்களைக் காட்டிலும், கிளுவை போன்ற உயிர் வேலிகளே மிகச் சிறந்தவை.
கிளுவைக் குச்சிக்காக பெரிதாக அலையத்தேவையில்லை. அக்கம் பக்கத்தில் கூட விசாரித்தால் யாராவது ஒரு விவசாயி அதைக் கடைபிடித்துக்கொண்டிருப்பார். அவரிடமே கூட விதைக்குச்சிகளைக் கேட்டுப் பெறமுடியும். உங்கள் பகுதியில்தான் இருக்கிறது பட்டுக்கோட்டை. அங்கேயும் முயற்சிக்கலாம். எங்கும் கிடைக்காத பட்சத்தில் என்னைத் தொடர்பு கொள்ளவும்.'' அலைபேசி 98947-55626.

நன்றி: பசுமை விகடன்

Monday, 1 September 2014

காய்கறி வாங்க கடைக்கு போறதில்லை!









‘எவ்வளவு சீக்கிரம் முடியுமோ... அவ்வளவு சீக்கிரம் வந்துடுங்க. சூரிய உதயத்துக்கு முன்னாடியே செடிகளைப் பார்த்தாதான் அதுங்களோட அழகை முழுமையா உணர முடியும்’’- இப்படி குழந்தையின் குதூகலத்தோடு தொலைபேசியில் நமக்கு அழைப்பு வைத்தார் இந்திரகுமார்.
நூறு ஏக்கர்... இரு நூறு ஏக்கர் என்று பயிர் செய்பவரல்ல இந்த இந்திரகுமார். கிடைக்கும் இடம் அரை அடியோ... ஒரு அடியோ... அல்லது வீசி எறிவதற்காக நகரத்து வீடுகளில் இருக்கும் ஒரு கொட்டாங்குச்சி கிடைத்தால் கூட, அதையே தன்னுடைய நிலமாக்கிக் கொண்டு பயிர்களை வளர்த்து அறுவடை செய்யும் அற்புத வித்தையைக் கற்று வைத்திருக்கும்... கற்றுக்கொடுக்கும் மனிதர்!
சென்னையிலிருந்து தெற்கு நோக்கி விரியும் சாலையில், பல்லாவரத்தை ஒட்டிக்கொண் டிருக்கும் பம்மலில்தான் அவருடைய வீடு. சென்னைக்குச் சற்றும் இளைக்காமல், இண்டு இடுக்கெல்லாம் வீடுகள் முளைத்துவிட்ட கான்கிரீட் காடுகளில் ஒன்றுதான் பம்மல். அந்த கான்கிரீட் காடுகளுக்கு ஈடுகொடுத்து செடி, கொடிகளை வளர்த்துக் கொண்டிருப்பவர் இந்திரகுமார். இவர், எக்ஸ்னோராவின் துணை அமைப்பான 'இல்ல எக்ஸ்னோரா' என்பதன் தலைவர் பதவியையும் வகித்து வருகிறார்
ஒரு நாள் காலை வேளையில் அவருடைய வீட்டில் நாம் ஆஜரானோம். வீட்டுத் தோட்டம் முழுக்க பலன் தரும் பழ மரங்கள்... மொட்டை மாடிக்கு பச்சைத் தொப்பிப் போட்டது போல, திரும்பிய பக்கமெல்லாம் காய்கறிச் செடிகள்... மாடிப்படிகளில் கீரைகள்... ஜன்ன லோரத்தில் ரோஜாக்கள்... என்று விதம்விதமாக நம்மை பரவசப்படுத்தின. சற்று உணர்ச்சிவசப்பட்டவராகவே பேசத் தொடங்கினார் இந்திரகுமார். ‘‘மெக்கானிக்கல் இன்ஜினீயராக வாழ்க்கையைத் தொடங்கின நான், இன்னிக்கு இயற்கை இன்ஜினீயரா மாறிட்டேன். இதுக்குக் காரணம் ஒரு செடிதான். ஆனா, அது என்னோட எதிரிச் செடி. அதுவும் அன்பான எதிரி. அதோ, எதிர்ல புதரா மண்டிக்கிடக்கே பார்த்தீனியச் செடி. அதுதான் அந்த எதிரி. பல வருஷங்களுக்கு முன்னாடி அமெரிக்காவிலிருந்து கோதுமையோட சேர்ந்து இந்தியாவுக்கு வந்த விருந்தாளிதான் பார்த்தீனியம். இதோட பேரைக்கேட்டாலே பலரும் அலறித்துடிப்பாங்க. அந்த அளவுக்கு ஒரு அபாயகர மானச் செடி.
2001-ம் ஆண்டுல இந்தப் பகுதியில இருக்கற குளத்தை 'எக்ஸ்னோரா' அமைப்பு மூலமா தூர் வார முடிவு செஞ்சோம். அந்த இடத்துல முளைச்சி கிடந்த பார்த்தீனியத்தை ஆளாளுக்குப் புடுங்கிப் போட்டோம். அவ்வளவுதான் அன்னிக்கு ராத்திரியே உடம்பு நடுங்க ஆரம்பிச்சிருச்சி. உடம்பு முழுக்க சின்னதும், பெருசுமான கட்டிகள் வேற வந்துடுச்சி. உயிர் பொழைக்கிறதே கஷ்டங்கிற நிலைமை. அலோபதி மருந்துகளைக் காட்டிலும் சித்தமருந்து கள்தான் இதுக்கு நிவாரணம் கொடுக்கும்னு சிலர் சொன்னாங்க. அதன்படியேச் சாப்பிட்டேன். கொஞ்சம், கொஞ்சமா ஆரோக்கியமான நிலைக்குத் திரும்பினேன். நான் வேலை பார்த்துக்கிட்டிருந்த கம்பெனியில இருந்து விருப்ப ஓய்வு வாங்கிக்கிட்டு வெளியே வந்தவன்தான்... இன்னிக்கு வரைக்கும் இயற்கையோட வாழ்க்கை நடத்திக்கிட்டிருக்கேன்’’ என்று நிறுத்தியவர்,
''எனக்குனு இருந்த 3,200 சதுர அடி நிலத்துல 600 சதுர அடிக்கு சின்னதா வீடு கட்டியிருக்கேன். மீதி நிலத்துல பிற்காலத்துல தோட்டம் போடலாம்னு முடிவு செஞ்சி ஒதுக்கி வெச்சேன். என்னோட உயிரை எடுக்கப் பார்த்தது ஒரு செடிதான்; உயிரைக் கொடுத்ததும் இன்னொரு செடிதான் (மூலிகை). அதனால செடிகளையே நண்பன்னு முடிவு செஞ்சேன். அதுக்கப்புறம் வீட்டுல இருக்கற இடம் பூராவும் மா, கொய்யா, சப்போட்டா, பாதாம், சீத்தா, ராம் சீத்தா, ஆல்ஸ்பைசஸ், பாக்கு, பப்பாளி அப்படினு மர வகைகளையும்... 
எட்டு வகையான மல்லிகை, விதம்விதமான ரோஜா, மனசை மயக்குற மனோரஞ்சிதம், சம்பங்கி, கோழி சம்பங்கி, காகிதப்பூ, செம்பருத்தி, நித்திய கல்யாணினு நம்ம ஊரு பூக்களையும், லில்லி, லிச்சினு வெளிநாட்டு வகை பூக்களையும் தோட்டத்துல பயிர் செய்திருக்கேன்.
இதையெல்லாம் நான் ஆரம்பிச்சது சென்னையே தண்ணீர் பஞ்சத்தால தள்ளாடிக்கிட்டு இருந்த நேரத்துலதான். இதைப் பார்த்துட்டு, 'மனுஷனே காசுக்கு தண்ணி வாங்கி குடிக்கும்போது, எங்கே இருந்து இந்த ஆளு செடிகளுக்குத் தண்ணி கொடுக்க போறார்'னு அக்கம் பக்கத்துல பேசுனாங்க. மழைத் தண்ணிதான் செடியைக் காப்பாத்தும்னு எனக்குத் தோணுச்சி. முதல் வேலையா மழை நீர் சேகரிக்கத் தொட்டிக் கட்டினேன். எதிர்பார்த்தபடியே மழைநீர் நிறைய கிடைச்சி, நிலத்துல சேர்ந்துது. அந்தக் காலக்கட்டத்துல ஆளாளுக்கு போர் போட்டு பூமியில இருந்த தண்ணியை உறிஞ்சு எடுத்தாங்க. ஆனா, நான் இன்னிய தேதி வரைக்கும் போர் போடல. அதே 23 அடி கிணத்துல இருந்துதான் தண்ணி எடுத்துக் குடிச்சிக்கிட்டு இருக்கோம். மழை நீர் சேகரிப்பு மூலமா மரம், செடிகளுக்கும் தண்ணி கிடைச்சுடுது'' என்று சொன்னவர், அடுத்தபடியாக மாடித்தோட்டத்துக்கு வந்தார்.
''ரெண்டு பொண்ணு, ஒரு பையன், அன்பான மனைவினு அஞ்சு பேர் கொண்ட என் குடும்பத்துக்கு தேவையான காய்கறி, மூலிகைகளை வளர்க்க நினைச்சேன். வீட்டைச் சுற்றி இருந்த இடத்துல பலவகையான மரங்களை நடவு செஞ்சிட்டதால... காய்கறி செடிகளுக்கு இடமில்ல. ஒரு நாள் மொட்டை மாடியைப் பார்த்தப்ப, ஆகா நிலம் கிடைச்சாச்சினு எனக்குள்ள ஒரு மின்னல். உடனே தோட்டம் போட்டுட்டேன்.
வீட்டுல காய்கறித்தோட்டம் போடறதுன்னதும் பெரிசா இடத்தைத் தேடி அலைய வேண்டாம். மனசு வெச்சாலே போதும். மொட்டை மாடியில காய்கறி; மாடிப்படிகள்ல கீரை; சன்னல் ஓரங்கள்ல ரோஜானு எல்லாவித செடிகளையும் நட்டு பலன் பார்த்திட முடியும். பத்தடி உயரத்துல இருக்கற பைப்புல கூட விதவிதமான காய்கறிச் செடியை பயிர்செய்ய முடியும். தேங்காய்த் துருவினதும் தூக்கி எறியற கொட்டாங்குச்சியில கீரை வளர்க்கலாம். உடைந்த மண்பானையில கத்தரிக்காய் வளர்க்கலாம். எதுல செடி வளர்க்கணும்னாலும் அடிப்படையான சில விஷயங்கள மனசுல வெச்சிக்கிட்டா போதும். நீங்க செடி வளர்க்க நினைக்கற இடத்துல ஒரு பங்கு மண்ணு, ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் இது மூணையும் கலந்து போட்டு அதுல விதைச்சிடலாம். செடி வளர்க்கறதுக்காக நீங்க பயன்படுத்தறது கொட்டாங்குச்சியோ, மண்பானையோ... எதுவா இருந்தாலும் அடியில தண்ணி கசியறதுக்காக சிறுதுளைபோட வேண்டியது அவசியம்!
வெண்டை, கத்தரி, தக்காளி, அவரை, துவரை, மிளகாய், கறுப்பு மிளகாய், கொத்தவரங்காய், கீரைகள்னு விதம்விதமான காய்கறிகள் இங்க விளைஞ்சி கிடக்கு. சீசனுக்கு தகுந்த மாதிரிதான் நான் விளைவிப்பேன். பாரம்பரிய விதைகளை தேடிப்பிடிச்சி வாங்கி வந்து சேகரிச்சி வெச்சிருக்கேன். அதையேதான் மறுபடி மறுபடி விதைச்சி பலன் பார்க்கிறேன்.
சத்தான சமச்சாரம்னு கீரைகளை வாங்கிப் பலரும் சாப்பிடறாங்க. ஆனா, அதுல எந்தளவுக்கு பூச்சி மருந்து தெளிச்சி எடுத்துக்கிட்டு வரறாங்கனு பலருக்கும் தெரியாது. தயவு செஞ்சி கீரையை மட்டுமாவது வீட்டுலயே வளர்த்துச் சாப்பிடுங்க. ஒரு குட்டாங்குச்சி, கொஞ்சம் மண். கொஞ்சம் மணல், கொஞ்சம் இயற்கை உரம், இதோட ஒரு பிடி வெந்தயம் இருந்தா போதும், அடுத்த 20-ம் நாள் தளதளனு வெந்தயக் கீரை வளர்ந்திருக்கும். கொட்டாங்குச்சியில மண்ணையும் மணலையும் நிரப்பி, உரத்தையும் போட்டு தண்ணியை ஊத்தி, வெந்தயத்தைப் போட்டு வெயில் படுற மாதிரியான இடத்துல வெச்சிட்டா போதும். இதே முறையில அரைக்கீரை, முளைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணிக் கீரைனு பல கீரைகளையும் வளர்க்கமுடியும். கொத்தமல்லி, புதினாவையும் கூட இதேபோல வளர்க்கலாம்.
இதோ பாருங்க, இது சாதாரண சிமென்ட் பைப். புகை போக்கியா பயன்படுத்துவாங்க. இது முழுக்க மண், இயற்கை உரம் போட்டு கம்பம் மாதிரி நிக்க வெச்சிருக்கேன். பைப்புல அங்கங்க துளை போட்டு தக்காளி, கத்தரி செடிகளை நட்டிருக்கேன். பயறு விதைகளயும் போட்டிருக்கேன். ஈரம் காயாம தண்ணி ஊத்திக்கிட்டே இருக்கேன். 40-ம் நாள்ல வீட்டுக்கு வேண்டிய காய்கறிங்க இந்த பைப்புல இருந்தே எனக்குக் கிடைச்சுடும். அஞ்சாறு ஆண்டுகளா எங்க வீட்டுக்கு காய்கறி வாங்குற செலவே இல்லை'' என்று சந்தோஷம் பொங்கச் சொன்னவர், மூலிகைத்தண்ணீர் கொஞ்சம் கொடுத்து உபசரித்துவிட்டுத் தொடர்ந்தார்.
''காய்கறிகளையும் பயிர் பண்ண ஆரம்பிச்ச பிறகு அதிகளவுக்கு தண்ணி கொடுக்க வேண்டியதாயிடுச்சி. குளிக்க, துணி துவைக்கனு பயன்படுத்தற தண்ணியெல்லாம் சோப்பு கலந்து வீணாத்தானே போகுது, அதை சுத்திகரிச்சி பயன்படுத்தலாமேனு ஒரு யோசனை. உடனே பயன்படுத்த ஆரம்பிச்சிட்டேன். கல்வாழை, சேப்பக் கிழங்கு இதையெல்லாம் ஜல்லியும் மண்ணும் நிரப்பின ஒரு தொட்டியில நட்டுவெச்சி, அதுல பாத்ரூம் தண்ணியை விட்டு சுத்தப்படுத்துறேன்’’ என்று சொன்னவர், செப்டிக் டேங்க் அருகே இருக்கும் இன்னொரு தொட்டியைக் காண்பித்தார்.
‘‘இந்தத் தொட்டியில இருக்கிற தண்ணிதான், என் செடிகளுக்கு உயிர் கொடுத்துக்கிட்டிருக்குது. காபி கலர்ல இருக்கற இந்தத் தண்ணி எங்க இருந்து வருதுனு பார்க்கறீங்களா... எல்லாம் 'செப்டிக் டேங்க்'னு சொல்ற மனிதக் கழிவுகள் சேருகிற தொட்டித் தண்ணிதான். வழக்கமா செப்டிக் டேங்கைத் திறந்தா ஆளை அடிச்சி போடற மாதிரி விஷவாயு தாக்கும். ஆனா, எந்த ஒரு கெட்ட வாசனையும் இல்லாம இந்தத் தொட்டியை நான் மாத்தி வெச்சிருக்கேன்'' என்று அவர் சொன்னதும் வியப்பால் நம் விழிகள் விரிந்தன. 
''ஆஸ்திரேலியாவில் ஆக்டிசெம் (Actizem) என்கிற பாக்டீரியாவைப் பல விஷயங்களுக்குப் பயன் படுத்தறது பத்தி நண்பர் மூலமா தெரிஞ்சுகிட்டேன். கப்பல், விமானம் இதுல உள்ள கழிவறைகளுக்கு இந்தப் பாக்டீரியாவைததான் பயன்படுத்தறாங்க. 'இந்தப் பாக்டீரியாவை 50 கிராம் அளவுக்கு செப்டிக் டேங்க்ல விட்டா, மனித கழிவுகளை சிதைச்சு தீமை செய்ய கூடிய பாக்டீரியாக்களை எல்லாம் அழிச்சுடும். கழிவுகளை நீர் வடிவமாவும் மாற்றிடும். எந்த விதமான கெட்ட வாசனையும் வீசாது. பக்க விளை வுகளும் இருக்காது'னு சொன்னாங்க. 50 கிராம் பாக்டீரியா 250 ரூபாய்னு வாங்கிட்டு வந்து செப்டிக் டேங்குல போட்டேன். அடுத்த சில வாரங்கள்ல, வெறும் தண்ணி மட்டும்தான் செப்டிக் டேங்க்ல இருந்துச்சு. அந்தத் தண்ணியை மரச்செடிகளுக்கு மட்டும் பாய்ச்சுகிறேன். ரெண்டு மூணு வருஷத்துக்கு ஒரு முறை செப்டிக் டேங்க்கை முழுசா சுத்தம் பண்றதுக்கு உண்டான செலவும் மிச்சமாயிடுச்சி.
ஒருமுறை இந்த பாக்டீரியாவை போட்டாலே போதும். அது பெருகி வளர்ந்துகிட்டே இருக்கும். சுருக்கமா சொல்லணும்னா சம்பளம் வாங்காம செப்டிக் டேங்க்கை சுத்தம் பண்ற வேலையை பாக்குது அந்த பாக்டீரியா’’ என்று சிரித்தபடியே சொன்ன இந்திரகுமார்,
‘‘வீட்டுல இருந்து தண்ணி அதிகமா வெளியேறுற இன்னொரு இடம் சமையல் கட்டு. பாத்திரம் கழுவுற தண்ணி, கஞ்சித் தண்ணி இப்படி பல ரகத்துல தண்ணி வெளியே வரும். அப்படி தண்ணி வெளிய வர்ற இடத்துல ஒரு வேலையை செஞ்சி ரெண்டு விதமான பலனை எடுக்கிறேன். அலங்கார மீன்களுக்கு உணவா ஒருவகையான மண்புழுவைப் போடுவாங்க. குட்டிக்குட்டியா இருக்கிற இந்த மண்புழுவை வாங்கிக்கிட்டு வந்து சமையல் கட்டு தண்ணி வெளியே வர்ற பைப்புக்கு கீழே மண்ணுல விட்டேன். சமையல் கழிவு நீர்ல இருக்கற சத்துக்களை இந்த மண்புழுக்கள் சளைக்காம சாப்பிடுது. அதுக்கு நன்றிக் கடனா என்னோட மரங்களுக்கும், காய்கறி செடிங்களுக்கும் சத்தான மண்புழு உரத்தை மண்ணுக்குமேலே கொண்டுவந்து கொடுக்குதுங்க.
'நல்லதொரு குடும்பம் பல்கலைகழகம்'னு சொல்வாங்க. அதுவும் ஆரோக்கியமான குடும்பமா இருக்கணும். அதுக்கு எங்க வீடு ஒரு எடுத்துக்காட்டா இருக்கு. கிட்டத்தட்ட ஒரு கண்காட்சியாவும் எங்க வீடு இருக்கு. விஷயம் தெரிஞ்ச பலரும் வந்து பார்வையிட்டுப் போறாங்க. வீட்டுக்காக தொடங்கின ஒரு விஷயம், இப்ப நாட்டுல நாலுபேருக்கு பயன் படக்கூடியதாவும் மாறியிருக்கறத நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு'' என்று சொல்லி வழி அனுப்பினார் இந்திரகுமார் (தொலைபேசி: 044-22486494).


  

மினரல் வாட்டர் தயாரிக்குது செம்பு!
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூத்துக் கணக்கான ரூபாய் மிச்சமாகும்!'' என்கிறார் இந்திரகுமார். இதையும் இவரே பரிசோதித்துப் பார்த்திருக்கிறார்.
 ''மைசூர்ல இருக்கற அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவங்க, செம்புப் பாத்திரத்துல தண்ணியை வெச்சி ஒரு ஆராய்ச்சி நடத்தினாங்க. அதோட முடிவுல, 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர் களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை'னு அந்த நிறுவனம் சொல்லியிருக்கு. இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்துல வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கிறோம். எங்கக் கிணத்துல கிடைக்கறத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையா மாறிடுது. செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான். தகட்டைச் சுத்தமா கழுவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி வெச்சி ருந்து குடிக்கறாங்க’’ என்று ஆதாரங்களை எடுத்து வைத்துப்பேசினார்.
உரமாகும் காய்களின் கழிவு!
 வீட்டுத்தோட்டத்துக்கு என்று உரங்களைத் தேடி எங்கேயும் அலைய வேண்டியதில்லை. காய்கறிக் கழிவுகளை வைத்தே அருமையான உரங்களைத் தயாரிக்கிறார் இந்திரகுமார்.
 ‘‘முழுக்க இயற்கையான முறையில விளைவிக்கறதால பூச்சி மருந்துகளை கொஞ்சம் கூட நான் தெளிச்சதே இல்லை. மண்புழு உரம், தொழு உரம் இதை மட்டும்தான் பயன் படுத்தறேன். தினமும் வீட்டுல கிடைக்கற வெங்காயத் தோல், காய்கறித்தோல் இதையெல்லாம் ஒரு சின்னத் தொட்டியில போட்டு வைக்கலாம். ஒவ்வொரு முறையும் காய்கறிக்கழிவை தொட்டியில போடும்போது, காய்ந்த சாணத்தையும் அதோட சேர்த்துப் போடணும். சாணம் கிடைக்காட்டி, மணல் போட்டா. இதுல இருக்கற நுண்ணுயிரிகள் காய்கறிக் கழிவை மட்க வைக்குது. எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரியஓளி படும்படி தொட்டியை வைக்கக்கூடாது. நாற்பது நாளைக்குள்ள தொட்டியில் உள்ள கழிவெல்லாம் உரமாகிடும். இதை எடுத்து அப்படியே செடிகளுக்கு போடலாம்'' என்று உரத்தயாரிப்பை விவரித்தவர்,
 ''பூச்சிகளை கட்டுப்படுத்த ஒரு ஜீவனையும் நான் வளர்க்கிறேன். அதோ திரியுதே சேவல்.. அதுதான் அந்த ஜீவன். செடிகள்ல இருக்கற புழு, பூச்சிகளை அதுவே லபக்கிடும்'' என்று சொல்லி ஆச்சர்யப்படுத்தினார்.

நன்றி: பசுமை விகடன்