Wednesday, 29 July 2015

கால்நடை மருத்துவத்துல வேம்பின் பயன்கள்

சினை பிடிக்காத மாடுகளுக்கு அரை கிலோ வேப்பம்பிண்ணாக்கு தண்ணீரில் ஊர வைத்து மறுநாள் வடிகட்டிய தண்ணீரை மாட்டுக்கு கொடுக்கணும். இதே மாதிரி 2-3 நாள் கொடுக்கலாம்.
இப்பிடி கொடுத்தமுன்னா கருப்பையில் புண்ணு இருந்தாலும், நோய்த் தொற்று இருந்தாலும் சரியாயிடும். அதுக்குப் பிறகு சினை ஊசி போட்டமுன்னா சினை பிடிக்கும்.
ஆடு மாடுகளுக்கு கழிச்சல் இருந்தா வேப்ப கொழுந்து, மாதுள கொழுந்து ஒவ்வொண்ணையும் ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து சேர்த்து நல்லா அரச்சு கால்நடைகளுக்கு கொடுத்தமுன்னா கழிச்சல் நிக்கும்.
வேப்ப இலையை பொடி பண்ணி வெச்சுக்கிட்டு தினமும் 20கிராம் அளவுல கன்னுக்குட்டிகளுக்கு கொடுத்துக்கிட்டு வந்தமுன்னா கல்லீரல் பாதிப்பால் வரக்கூடிய பசியின்மை, சோர்வு, மற்றும் எடை குறைவு எல்லாம் குணமாகும். அதோட கல்லீரல் இயக்கமும் உடல் நலமும் சீரா இருக்கும்.


Friday, 17 July 2015

சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்

பால்... அதிக பால்... என ஆசைப்பட்டு, வெளிநாட்டு இனப் பசுக்களையும்... கலப்பினப் பசுக்களையும் தேடி ஒட ஆரம்பித்ததில், நம் நாட்டு இனப் பசுக்களை பலரும் மறந்தே விட்டார்கள். தற்போது, இயற்கை விவசாயம் மீது உள்ள ஆர்வத்தால், பெரும்பாலானோர் நாட்டுப் பசுக்களைத் தேடி வாங்கி வளர்க்க ஆரம்பித்துள்ளனர். அவர்களில் ஒருவராக... கரூர் நகரைச் சேர்ந்த தொழிலதிபர் கணேசன்... தமிழகத்தைச் சேர்ந்தப் பாரம்பரிய பசுக்களோடு, வடமாநில இனங்களான சாஹிவால், தார்பார்க்கர், கிர், காங்கிரேஜ்... போன்ற பசுக்களையும், முர்ரா ரக எருமைகளையும் வளர்த்து வருகிறார்.
கரூர்-தாராபுரம் சாலையில் 15-வது கிலோ மீட்டரில் இருக்கிறது, செல்லாண்டிப்பாளையம். பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் பிரியும் மண்சாலையில், இரண்டு கிலோ மீட்டர் தூரம் பயணித்தால்... கணேசனின் பண்ணை. மண்சாலையில் இரண்டு பக்கமும் உயிர்வேலியாக நீண்டு கிடக்கின்றன, கிளுவைச் செடிகள். அதில், பிரண்டையும், கோவைக் கொடியும் படர்ந்து கிடக்கின்றன. பண்ணையில் இருந்த கணேசனிடம் அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேசத் தொடங்கினார்.
''இது எங்க பூர்வீக இடம். மொத்தம் 32 ஏக்கர். இதுல 17 ஏக்கர் மானாவாரி மேய்ச்சல் நிலம். 10 ஏக்கர்ல மாடுகளுக்குத் தேவையான பசுந்தீவனம் இருக்கு. 5 ஏக்கர்ல தென்னை இருக்கு. முழுக்க முழுக்க கிணத்துப் பாசனம்தான். பக்கத்துல அமராவதி ஆறு இருக்கு. அரசு அனுமதியோட ஆத்துத் தண்ணியையும் கொண்டு வந்து பாசனம் செய்றதால... தண்ணி பிரச்னை கிடையாது.
தொழிலிருந்து தோட்டத்துக்கு!
சின்ன வயசுலேயே கரூர் போயிட்டேன். இருந்தாலும், அடிக்கடி ஊருக்கு வந்து பூர்வீக மண்ணைப் பார்க்கும்போது... பாட்டன், பூட்டன் செஞ்ச விவசாயத்தை நாமளும் செய்யணும்கிற ஆசை... மனசுக்குள்ள வந்து உக்கார்ந்துக்கும். இன்னிக்கு பரபரப்பான தொழிலதிபரா இருந்தாலும், விவசாய ஆர்வம் என்னை விடல. ஒரு கட்டத்துல கம்பெனிய பசங்ககிட்ட ஒப்படைச்சுட்டு, முழுநேர விவசாயியா மாறிட்டேன். பரம்பரையா எங்க தோட்டத்துல காங்கேயம் மாடுகளதான் வளர்ப்போம். நான் விவசாயத்துல இறங்கினதும், வேலாயுதம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் கூட்டத்துல எதேச்சையா கலந்துகிட்டேன்.


அந்தப் பயிற்சியில, 'இயற்கை விவசாயம்தான் மண்ணுக்கும் மனுஷனுக்கும் ஏத்து’னு தெரிஞ்சுட்டேன். பிறகு, திண்டுக்கல்ல நடந்த சுபாஷ் பாலேக்கரோட 'ஜீரோ பட்ஜெட்’ பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். அங்கதான், நாட்டுமாடுகளோட மகிமையையும், இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கற முறைகளையும் தெரிஞ்சுக்கிட்டேன்.
தீவனம் இல்லாமல் மாடு வாங்கக் கூடாது!
ஆரம்பத்துல, பயிர்களுக்குத் தேவையான இடுபொருள் தயாரிக்கறதுக்காகத்தான் நாட்டு மாடுகளை வளர்க்கலாம்னு முடிவெடுத்தேன். அதுக்காக, 10 ஏக்கர்ல பசுந்தீவன சாகுபடியை ஆரம்பிச்சேன். ஒரே ரகமா இல்லாம.... கோ-4, வேலிமசால், கோ.எஃப்.எஸ்-29, கிளரிசீடியா, சவண்டல் (சுபாபுல்), மல்பெரி, முயல் மசால்னு பல ரகமா இருக்குற மாதிரி பாத்துக்கிட்டேன். அதுக்கப்பறம்தான், மாடுகளை வாங்க ஆரம்பிச்சேன்.
'வெறுமனே இடுபொருளுக்காக மட்டும் இல்லாம, பால் விற்பனையும் செஞ்சா லாபகரமா இருக்குமே’னு தோணுச்சு. காங்கேயம்  பசுக்களை மட்டும் வெச்சு பால் உற்பத்தியை அதிகப்படுத்த முடியாது. அதே நேரத்துல, கலப்பினப் பசுக்களை வாங்கி பால் வியாபாரியா மாறவும் எனக்கு மனசில்லை. 'என்ன பண்ணலாம்?’னு ரொம்பத் தீவிரமா யோசிச்சுக்கிட்டிருந்தேன். அந்த சமயத்துலதான், 'வாழப்பாடி’ மணிசேகர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர்தான், 'கலப்பினப் பசுக்களைப் போலவே அதிகம் பால் கறக்குற நாட்டுப் பசுக்களும் இருக்கு’னு சொன்னாரு. உடனடியா அலைஞ்சு திரிஞ்சு அந்த இன மாடுகளை வாங்குனேன்'' என்ற கணேசன், மாட்டுத் தொழுவத்துக்கு நம்மை அழைத்துச் சென்றார்.
எருமை எதையும் கழிக்காது!
நல்ல காற்றோட்டத்துடன் சிமெண்ட் தரைதளத்துடன் இருந்த தொழுவத்தில் ஒரு வரிசையில் பசுமாடுகளும் எதிர் வரிசையில் எருமை மாடுகளும் கட்டப்பட்டிருந்தன. தொழுவத்தில் நடந்து கொண்டே பேச ஆரம்பித்தவர், 'தொழுவத்தை 60 அடி நீளம், 30 அடி அகலம், 20 அடி உயரத்துல அமைச்சுருக்கேன்.
ஆரம்பத்துல பசு மாடுகளை மட்டும்தான் வாங்கலாம்னு இருந்தேன். சிலர், 'எருமைப்பால்ல கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும். அதனால பாலுக்கு நல்ல விலை கிடைக்கும்’னு சொன்னாங்க. அதனால எருமைகளையும் வாங்க ஆரம்பிச்சேன். எருமை மாடு, பசுந்தீவனம், அடர்தீவனம் எல்லாத்தையும் கழிக்காமத் திங்கும். அதுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கறதால, மருத்துவச் செலவும் குறையுது. இப்போ... என்கிட்ட 7 காங்கேயம், 6 கிர், 4 தார்பார்க்கர், 4 காங்கிரேஜ், 4 சாஹிவால், 25 முர்ரா எருமைகள்னு மொத்தம் 50 உருப்படிக இருக்கு'' என்றவர், வருமானத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினார்.
ஒரே ஈத்துல எடுத்துடலாம்!
'வடமாநில மாடுகளோட விலை அதிகமா இருந்தாலும், போட்ட பணத்தை ஒரே ஈத்துல எடுத்துடலாம். உதாரணமா... சாஹிவால் பசுவை 75 ஆயிரம் கொடுத்து வாங்கினேன். இது, வருஷத்துக்கு 305 நாள் பால் கறக்குது. சராசரியா ஒரு மாட்டுல இருந்து 4 ஆயிரம் லிட்டர் பால் ஒரு வருஷத்துல கிடைக்குது.
நேரடியா நுகர்வோருக்கு ஒரு லிட்டர் 30 ரூபாய்னு விக்கிறேன். 4 ஆயிரம் லிட்டர் பால் மூலமா, ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வருமானமா கிடைக்குது. இதுல தீவனம், பராமரிப்புச் செலவு போக,
75 ஆயிரம் ரூபாய் லாபம். ஆக, ஒரு ஈத்து முடிஞ்சதுமே... மாடும், கன்னும் லாபக் கணக்குல சேர்ந்துடுது. இதேமாதிரி அம்பது மாட்டுக்கு கணக்குப் போட்டுக்கோங்க...'' என்ற கணேசன் நிறைவாக,
'ஜீவாமிர்தம் மாதிரியான இடுபொருட்கள் பயன்பாட்டுக்காக காங்கேயம் பசுக்களையும் வளக்குறேன். இதுல பால் மூலமா வருமானம் இல்லைன்னாலும், கன்று விற்பனை மூலமா வருஷத்துக்கு ஒரு தொகை கிடைச்சுடுது. ஆக மொத்தத்துல நாட்டு மாட்டு இனங்களைக் கலந்து வளத்தா... நிச்சயம் நல்ல லாபம் பார்க்கலாம். ஆரம்பத்துல எல்லா இனத்திலும் ஒவ்வொரு மாட்டை மட்டும்தான் விலை கொடுத்து வாங்கினேன். இடையில் சில கன்றுகளை வித்தது போக இப்ப, கிட்டத்தட்ட 20 லட்சம் ரூபாய் மதிப்புக்கு 50 மாடுக இருக்கு.
இப்போ, நாட்டுப் பசுக்களோட பாலுக்கு அதிக தேவை இருக்கறதால... நாட்டு மாடுகளை வளத்து பாலை நேரடி விற்பனை செஞ்சா கண்டிப்பா நல்ல லாபம் பாக்க முடியும்'' என்று நம்பிக்கையூட்டி விடை கொடுத்தார்.
பண்ணையில் கிடைக்கும் சாணத்தை வைத்து, சாண எரிவாயு தயாரிக்கிறார் கணேசன். ''சாண எரிவாயுத் தயாரிப்புக்காக 25 கன மீட்டர் அளவு கொண்ட தொட்டியை அமைச்சுருக்கேன். இதிலிருந்து வெளியேறுற எரிவாயுவைப் பயன்படுத்தித்தான், பண்ணையில் தங்கி வேலை செய்யுற அஞ்சு குடும்பங்களுக்கு உணவு தயாரிக்கிறோம். இதிலிருந்து வெளிவர்ற சாணக் கழிவுகளை (ஸ்லர்ரி) சிமென்ட் தொட்டிகள்ல நிரப்பி, ஜீவாமிர்தமா மாத்தி, பாசனத் தண்ணியில கலந்து 10 ஏக்கர் பசுந்தீவனப் பயிர்களுக்கும், 7 ஏக்கர் தென்னைக்கும் தொடர்ந்து கொடுத்துட்டு வர்றேன். சாண எரிவாயுவைப் பயன்படுத்தி ஆயில் இன்ஜினை இயக்குற முயற்சியிலயும் இருக்கேன்'' என்று சொன்னார் கணேசன்.
தொடர்புக்கு, சி. கணேசன்,
செல்போன்: 98652-09217.




Thursday, 16 July 2015

எருமை வளர்ப்பு!

பால்பண்ணை, பால்மாடு என்றாலே... கலப்பினப் பசுக்கள்தான் நினைவுக்கு வரும். அந்தளவுக்கு நம் நாட்டு பாரம்பர்ய பசு மற்றும் நாட்டு எருமை ஆகியவற்றை ஓரங்கட்டி, நமக்குள் வியாபித்துக் கிடக்கின்றன வெளிநாடுகளைச் சேர்ந்த ஜெர்சி, சிந்து, ஃபிரீசிஸியன் போன்ற கலப்பின மாடுகள்! அதற்குக் காரணம்... 'இந்த வகையான மாடுகளுக்கு அதிகப் பராமரிப்புத் தேவைப்பட்டாலும், ஒரு எருமை சாப்பிடும் தீவனத்தைவிடக் குறைவாகச் சாப்பிட்டு, ஐந்து எருமை கொடுக்கும் அளவுக்கு அதிக பால் கொடுக்கும் என்பதுதான்!
இதுபோன்ற காரணங்களால் நாட்டுப் பசு மற்றும் எருமை போன்றவற்றின் வளர்ப்பு குறைந்து கொண்டே இருக்கிறது. என்றாலும், தயிர், தேநீர் போன்ற உபயோகங்களுக்குப் பலராலும் இன்றளவும் எருமைப் பால் விரும்பப்படுகிறது. எருமை, குறைவாகப் பால் கொடுத்தாலும், அதிலிருக்கும் கொழுப்புச் சத்தின் அளவு மிகவும் அதிகம் என்பதும் அந்தப் பால் விரும்பப்படுவதற்கு ஒரு காரணம். இப்படிப்பட்டோரை மனதில் வைத்து... பல கிராமங்களில் எருமை வளர்ப்பு ஓரளவுக்கு நடந்து கொண்டுதானிருக்கிறது. அந்த மாதிரியான 'எருமை வளர்க்கும்' கிராமங்களில் ஒன்று... தேனி மாவட்டம், சங்கராபுரம் அருகில் இருக்கும் வடமலைராஜபுரம்.
எருமை வளர்ப்பில் கரை கண்ட இந்த ஊர்க்காரர்களில் ஒருவரான கருப்பையா, அதைப் பற்றி இங்கே பேசுகிறார். 'நான் பெருசா ஒண்ணும் படிக்கல. அதனால எனக்கு எந்த வேலையும் கிடைக்கல. இருந்த தோட்டத்துல கொஞ்சம் விவசாயத்தைப் பாத்துக்கிட்டே விவசாயக் கூலி வேலையையும் செஞ்சுட்டுருந்தேன். அப்போவெல்லாம் கிராமங்கள்ல எல்லா வீட்டுலயும் பாலுக்காக எருமை மாடு வளப்பாங்க. அதனால நானும் ஒரு எருமை வாங்கலாம்னு ஆசைப்பட்டேன். 83\ம் வருஷம், கையில இருந்த காசையெல்லாம் புரட்டிப் போட்டு முன்னூறு ரூபாய்க்கு ஒரு எருமைக் கன்னு வாங்கினேன். நாய்க்குட்டி மாதிரி அந்த எருமைக் கன்னு என்கூடவே அலைஞ்சு மேய்ஞ்சு வளர்ந்துச்சு. இன்னிக்கு என்கிட்ட இருக்குற எருமைகளெல்லாமே அதோட வாரிசுகள்தான்.
இப்போ மொத்தம் எட்டு ஈத்துவழி எருமைக, ஏழு கிடேரிக, ஒரு பொலிகாளைனு வெச்சுருக்கேன். இதில்லாம அப்பப்ப ஏகப்பட்ட எருமைகளை வித்துருக்கேன். ஒரேயரு எருமை கன்னுக்குட்டியிலதான் என்னோட வாழ்க்கை மேலே உசர ஆரம்பிச்சுது. வீடுகட்டி, பிள்ளைகளைப் படிக்க வெச்சு வெளிநாட்டு வேலைக்கு அனுப்பினு இன்னிக்கு வரைக்கும் என்னோட இந்த மொத்த வாழ்க்கையுமே அந்த ஒரு எருமை ஆரம்பிச்சு வெச்சதுதான்'' என்று தன் நினைவுகளை அசை போட்டவர், எருமை வளர்ப்புப் பற்றி சொன்னவற்றை தொகுத்திருக்கிறோம் பாடமாக!
மேய்ச்சல் நிலம்... தண்ணீர் அவசியம்!
''எருமை வளர்க்க கட்டாயம் மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அவை காலாற சுற்றி வந்து மேய்ந்து, வயிறு நிறைய சாப்பிட்டால்தான் நன்கு வளரும். காலையில் தண்ணீர் காட்டி மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெள்ளாடு, பசுக்களைப் போல் இல்லாமல், ஒரே இடத்தில் நின்று கொண்டே செடிகளைச் சாப்பிடும். அந்த இடத்தில் தீர்ந்தால்தான் அடுத்த இடத்துக்குப் போகும். காலை பத்து மணியளவில் ஏதாவது குளம், குட்டையில் கொஞ்ச நேரம் இருக்கவிட வேண்டும். குளங்களில் தண்ணீர் இல்லாத சமயங்களில், பம்பு செட் மூலமாவது தண்ணீர் பாய்ச்சி எருமைகளைக் குளுமைப்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது இப்படிச் செய்ய வேண்டும். அதிக வெயிலில் எருமைகளைக் கட்டிப் போடக் கூடாது. உச்சிவெயில் நேரங்களில், தானாகவே அவையெல்லாம் நிழலைத் தேடிப் போய் விடும்.
கொட்டகையெல்லாம் தேவையில்லை!
மதியம் மூன்று மணி வாக்கில் பால் கறந்துவிட்டு, மீண்டும் தண்ணீர் காட்டி மேயவிட வேண்டும். சாயங்காலம் ஆறு மணி சுமாருக்கு அழைத்து வந்து மீண்டும் தண்ணீர் காட்டி கட்டி வைத்தால் போதும். இதற்காக தனிக் கொட்டகையெல்லாம் அமைக்க வேண்டியதில்லை. ஏதாவது மர நிழலில் கட்டி வைத்தால் போதும். மழையோ, பனியோ எதுவாக இருந்தாலும் எருமைக்கு எந்த பாதிப்பும் வராது. இன்னும் சொல்லப் போனால், மழையில் நனைந்தால் பாலின் அளவு கூடும். இரவில் வைக்கோலைத் தீவனமாகக் கொடுக்கலாம். காலையில் மூன்று மணிவாக்கில் பால் கறந்து விடலாம்.
சினை மாட்டுக்கும், பால் கறக்கும் மாட்டுக்கும், தண்ணீர்த் தொட்டியில், கம்பு மாவு, சோளமாவு, புண்ணாக்கு, தவிடு ஆகியவற்றை அதிகமாகக் கலந்துவிட வேண்டும். அதன் மூலம்தான் எருமை நன்கு பளபளப்பாகும், பாலின் அளவும் கூடும். பால் கறப்பதை நிறுத்தும் நிலையில் இருக்கும் மாட்டுக்கு, மேற்கண்ட தீவன அளவுகளைக் குறைத்துக் கொள்ளலாம்.
பருவம் சொல்லும் பல்!
எருமைகள் இரண்டு பல் முளைத்த பிறகுதான் பருவத்துக்கு வரும். சினைப் பருவத்துக்கு வந்த எருமைகள், கீழ் வரிசைப் பல்லைக் காட்டி கத்தும். விட்டு விட்டு சிறுநீர் கழிக்கும். இதை வைத்துக் கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் என்பதால், கூடவே ஒரு பொலி எருமைக் கிடாவையும் வளர்த்தால்... அது பருவத்துக்கு வந்த எருமைகளை விரட்டும். அதை வைத்து எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். அதன் பிறகு நேரடியாகவோ, செயற்கை முறையிலோ கருவூட்டல் செய்து கொள்ளலாம். கன்று போட்ட மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகுதான் மீண்டும் எருமைகள் பருவத்துக்கு வரும்.
எருக்கு இலை பழுப்பதேன்... எருமைக் கன்று சாவதேன்?
கன்றுகள் பிறந்ததிலிருந்து நாற்பது நாட்கள் வரை வயிறாரப் பால் குடிக்க அனுமதிக்க வேண்டும். இல்லாவிட்டால், கன்றுகள் இறந்துபோக வாய்ப்பிருக்கிறது. இதை மனதில் வைத்துதான் கிராமங்களில் 'எருக்கிலை பழுப்பதேன்? எருமைக் கன்று சாவதேன்?' என்று ஒரு விடுகதை போடுவார்கள். அதன் விடை 'பால் இல்லாமல்' என்பதாகும்.
பிறந்த அன்றே கன்றுகளுக்கு குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கன்றுப் பருவத்தில் முடியை மழித்துவிட வேண்டும். இல்லாவிடில் பேன் பிடித்து அரிப்பெடுக்கும். அரிப்பெடுத்த இடத்தை நக்கும்போது, முடி வயிற்றுக்குள் சென்று விடும். இதைச் சரியாகக் கடைபிடித்து விட்டால், கன்றுகளை இறப்பிலிருந்து தடுத்து விடலாம்.
தடுப்பூசிகள் அவசியம்!
எருமைக்குப் பெரும்பாலும் அதிகமாகக் காணை நோய்தான் வரும். காணை தாக்கினால், வாயிலும், கால் குளம்பிலும் புண் வந்து, எச்சில் ஒழுகும். தடுப்பூசி மூலம் காணை நோயைத் தவிர்க்கலாம். பால் முழுவதையும் கறந்தாலோ, அல்லது கன்று குடித்தாலோ மடி நோய் வரும். அதேபோல பால் கறப்பவர்கள் கைகளில் நகம் இருக்கக் கூடாது. சுத்தமாகக் கழுவியபின்தான் கறக்க வேண்டும். சுண்ணாம்புச் சத்து குறைவு காரணமாக, சமயங்களில் மாடு படுத்துக் கொண்டே இருக்கும். அதுமாதிரியான சமயங்களில் தெளிந்த சுண்ணாம்பு நீரைக் குடிநீரோடு கலந்து கொடுக்க வேண்டும். தடுப்பூசிகளையும் தவறாமல் போட்டுவிட வேண்டும்''
பரமாரிப்புக் குறிப்புகளைச் சொல்லி முடித்த கருப்பையா... ''கன்னு போட்டதுல இருந்து மூணு மாசம் வரைக்கும் ஒரு நாளைக்கு ஒரு எருமை அதிகபட்சம் 10 லிட்டர் பால் கொடுக்கும். அடுத்த ரெண்டு மாசம் 3 லிட்டராகும். அடுத்த 3 மாசம் 5 லிட்டர் ஆகும். பாலின் அளவுல இப்படி ஏற்ற இறக்கம் இருக்கும். அதுக்கப்புறம் பால் வத்திடும். பசுந்தீவனம் நிறைய சாப்பிட்டா, பால் கூடும். கோடையில கொஞ்சம் கம்மியாத்தான் பால் கறக்கும்.எருமைப்பால் கொழுப்பு அதிகமா, கெட்டியா இருக்குறதாலதான் நல்ல விலை கிடைக்குது. எவ்வளவு வருமானம் வருதோ... அதுல பாதியை மாட்டுக்குச் செலவழிக்கணும்னு சொல்வாங்க. அதாவது, அந்தளவுக்கு தவிடு, புண்ணாக்கு வாங்கிப் போடணும்'' என்றவர்,
''எருமையைப் பொறுத்தவரைக்கும் பராமரிப்புக்காக ரொம்ப கவலைப்படத் தேவையில்ல. ஆனா, மேலே சொன்ன மாதிரி குறைந்தபட்ச விஷயங்களையெல்லாம் முறைப்படி பராமரிச்சோம்னா... எருமை மூலமாவே போதுமான லாபம் பார்க்கலாம்.