Monday, 2 March 2015

வெள்ளாட்டு இனங்கள்

உலகத்தில் சுமார் 500 மிலியன் வெள்ளாடுகள் உள்ளன. இவற்றில் 41% ஆப்பிரிக்காவிலும், 37% இந்தியத் துணைக் கண்டத்திலும் உள்ளன. இந்த விபரமே ஏழைகளின் பசு வெள்ளாடு என்பதனை விளக்கவில்லையா? அடுத்து ஒரு நாட்டில் மக்கள் தொகை அதிகமுள்ள பகுதிகளிலேயே வெள்ளாடுகள் அதிகம் உள்ளன. இது, அவற்றை மேய்ச்சலுக்கு வெளியே அனுப்பாமலே வளர்க்க முடியும் என்பதனை விளக்குகின்றது. வெள்ளாடுகள் மாடுகளைப் போன்ற கொம்புகளை உடையதால், அவை மாடுகளின் குடும்பத்தைச் சார்ந்தவையாகும். விலங்கியல் பகுப்பின்படி, நமது வெள்ளாடுகள் காப்ராகிர்க்ஸ் (Capra hircus) எனப்படும். செம்மறி ஆடுகள் ஓவிஸ் ஏரிஸ் (Ovis aries) எனப்படும். ஆகவே இவை ஒன்றோடொன்று இனச் சேர்க்கையாவதில்லை என்றும் தெரியவரும். வெள்ளாடுகளில் 60 மரபுக் கூறுகள் (Chromosomes) உள்ளன. வெள்ளாடுகளின் பெயரில் சில ஊர்கள் உண்டு. ஒரு தீவு கூட உண்டு. சிதம்பரனார் மாவட்டத்தில் நாலாட்டின்புதூர் என்னும் ஊர் உள்ளது தெரியுமா?.வெள்ளாடுகள் ஏன் ஏழைகளால் பெரிதும் விரும்பி வளர்க்கப்படுகின்றன?
ஒரு மாட்டிற்கு ஆகும் தீவனத்தில் 6-7 வெள்ளாடுகளை வளர்த்து விடலாம்.
இவற்றை வளர்க்கப் பெரிய வசதியான கொட்டகை தேவையில்லை. மழைக் காலத்தில் வீட்டின் தாழ்வாரங்களிலேயே அவை ஒதுங்கிக் கொள்ளும்.
ஆப்பிரிக்க நாட்டவர்களுக்கு நடமாடும் ஆடு, நடமாடும் பணம் போன்றது. நமது நாட்டினருக்கு, மந்தையில் ஆடு முந்தியில் பணம் போன்றது.
முட்செடிகள் உட்பட எல்லா வகைத் தாவரங்களையும் உண்டு வாழக் கூடியவை. உயர்ந்த மலை, பாறைப் பகுதிகளிலும் ஏறி மேயக் கூடியவை.
செம்மறி ஆடுகள் போலன்றித் தாமே மேய்ச்சலுக்குச் சென்று வீட்டிற்குத் திரும்பிவிடும்.
வெள்ளாடுகளில் நோய்ப் பிரச்சனைகள் குறைவு.
இறைச்சி, பால், தோல், எரு ஆகிய நான்கு பயன்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றன. வெள்ளாடுகளுக்கு அசையக்கூடிய உறுதியான மேல் உதடுகள் உள்ளதால் முட்செடிகளையும் உண்ணும் வல்லமை பெற்றவை. மேலும் நெருங்கிய கூரிய கடினமான பற்கள் உள்ளதால், சிறிய தானியங்களையும், கடினமான விதைகளையும் அரைத்து உண்ணவல்லன.
பாலை நிலப் பகுதிகளில் வளர்க்கப்படும் ஆடுகளுக்கு வாரம் மூன்று முறை நீர் வழங்கினால் போதும். கடுமையான பஞ்சம் ஏற்படும்போது ராஜஸ்தான் பகுதியில் ஓர் ஆடும், ஒரு வன்னி மரமும் தம்மைக் காத்துக் கொள்ளும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெள்ளாட்டு இனங்கள்
பள்ளை ஆடு இவை பலவகையான நிறத்துடன் இருக்கும். குட்டையானவை. இவற்றின் சிறப்பு. இவை பல குட்டிகளைப் போடுவதுதான். சில 4, 5 குட்டிகள் – ஏன்? ஒன்றே கூட ஈனும். சில பகுதிகளில் இவை சீனி ஆடுகள் எனப்படும். இவற்றிற்கு மூழிக் காதுகள் உண்டு.
கொடி ஆடு இவை மிக உயரமானவை. பல்வகை நிறங்களுடன் இருக்கும். ஒன்று அல்லது இரு குட்டிகள் மட்டுமே ஈனும். இவை செம்மறி ஆடுகளுக்கு வழி காட்டியாகவும் வைத்துக் கொள்ளப்படுகின்றன.


தமிழ்நாட்டில் பல இனச் செம்மறி ஆடுகள் இருப்பினும் வெள்ளாடுகளில் ஓர் இனம் கூட இல்லாமல் இருப்பது ஒரு குறைபாடே. உலகெங்கும் புதிய இனங்களைத் தேற்றுவித்தவர்கள் தனிப்பட்ட முற்போக்குப் பண்ணையாளர்களே. நமது காங்கேயம் இன மாடுகள் பழைய கோட்டைப் பட்டைக்காரரால் தோற்றுவிக்கப்பட்டன. இவ்வாறே இறைச்சிக்கொன்றும், பாலுக்கொன்றும் வெள்ளாட்டு இனம் நமது வேளாண் குடி மக்களால் தோற்றுவிக்கப்படும் என உறுதியாக நம்புகின்றேன். இப்போது முற்போக்குக் கால்நடை வளர்ப்பபோர் வெள்ளாடு மீது காட்டும் ஆர்வம் நிச்சயமாக ஓர் இனத்தை உருவாக்கும்.
தற்போது சில முக்கிய, வெளி நாட்டு இனங்கள் பற்றிப் பார்க்கலாம்.
வெளி நாட்டு இனங்கள் 
சமுனாபாரி (Jamunapari) இவ்வினம் உத்திரப்பிரதேசத்தைச் சார்ந்தது. இவ்வின ஆடுகள் உயர்ந்த கால்களையும், பெரிய உடலமைப்பையும் கொண்டவை. இவை, பல்வேறு உடல் நிறத்துடன் இருக்கும். வெள்ளை, மஞ்சள் நிறம் கலந்த செம்மை நிறத்துடனோ, செம்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளுடனோ இருக்கும். இவற்றின் சிறப்பு அம்சங்கள் என்னவெனின், இவை நீண்ட, பெரிய, தொங்கும் காதுகளையும், ரோமானிய மூக்கையும் கொண்டிருப்பதாகும்.
கிடாக்கள் 60 முதல் 90 கிலோ எடை இருக்கும். பெட்டை ஆடுகள் 50 முதல் 60 கிலோ எடை இருக்கும். பொதுவாக, ஆண்டிற்கு ஒரு முறை ஒரு குட்டி மட்டும் போடும். இரு குட்டிகள் போடுவதும் உண்டு. தினமும் சராசரியாகக் கொடுக்கும் பாலளவு 2 முதல் 3 கிலோ. சின்ன சேலம், செட்டிநாடு ஆகிய அரசுப் பண்ணைகளில் இவ்வினங்கள் வளர்க்கப்படுகின்றன.
பார்பாரி (Barbari) இது சோமலாய நாட்டைச் சார்ந்தது. தற்போது உத்திரப்பிரதேசப் பகுதிகளில் காணப்படுகின்றது. இவ்வின ஆடுகள் குட்டையான கால்களுடன் காணப்படும். இவை பொதுவாக, வெள்ளை நிறத்துடன் இருக்கும். சிலவற்றிற்கு வெள்ளையில் செம்மை நிறப் புள்ளிகளும் உடலில் இருக்கும். கிடாக்கள் 40 முதல் 50 கிலோ எடையுடனும் பெட்டை ஆடுகள் 35 முதல் 40 கிலோ எடையுடனும் இருக்கும். இந்த இன வெள்ளாடுகள் 12-15 மாத இடைவெளியில் இருமுறை குட்டி போடும். பொதுவாக இரட்டைக் குட்டி போடும். தினசரி பால் அளவு 750 கிராம்.


பீட்டல் (Beetal) இவை பெரிய ஆடுகள், சராசரி பாலளவு 1 கிலோ. இவ்வினம் பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்தது. இந்த ஆடுகளுக்கென்று சிறப்பான நிறம் என்று ஏதும் கிடையாது. பொதுவாகக் கறுப்பு, செந்நிறம், வெள்ளை மற்றும் அரக்கு நிறப் புள்ளிகளுடன் இருக்கும். சமுனாபாரி இனம் போன்று ரோமானிய மூக்கு இவ்வினத்திற்கும் உண்டு. ஆனால், குட்டையான தொங்கும் காதுகள் மட்டுமே உள்ளன. பின்னோக்கித் திருகிய கொம்புகளை உடையன. கிடாக்களுக்கு மட்டும் தாடி உண்டு. கிடாக்களின் எடை 50 – 75 கிலோ; பெட்டை ஆடுகள் 40 முதல் 50 கிலோ. 9 மாத வயதில் இறைச்சிக்கு வெட்டலாம். எடை 16 கிலோ.
மார்வாரி (Marwari) இந்த வெள்ளாட்டினம் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தது. இது நடுத்தர உடலமைப்புக் கொண்டது. இது சிறந்த இறைச்சி இனமாகும். இது கருமையான நிறம் கொண்டது. கொம்புகள் திருகி இருக்கும். தினசரி பாலளவு 0.5 கிலோ. ஆண்டிற்கு 300 கிராம் முடியும் கொடுக்கும்.
சுர்த்தி (Surti) இவ்வினம் குஜராத்திய மாநிலத்தைச் சார்ந்தது. சிறிய இனம். தூய வெள்ளை நிறம் கொண்டது. சிறந்த பால் வழங்கும் இனம். சராசரி பாலளவு 2.5 கிலோ. ஆழ்கூள முறை வளர்ப்பிற்குச் சிறந்தது. உடல் எடை ஆண் 30 கிலோ பெண் 32 கிலோ.
ஓஸ்மானாபாடி (Osmanabadi) இது மராட்டிய மாநிலம்தைச் சார்ந்தது. பெரிய உடலமைப்புக் கொண்டது. நீண்ட கொம்புகளையும், கருமை நிறத்தையும் உடையது. சில வெள்ளையானவை. இது இறைச்சிக்கும் பாலுக்கும் ஏற்ற இனம். ஆண் எடை 34 கிலோ, பெண் எடை 32 கிலோ.
தலைச்சேரி (Tellichery) மலபாரி எனவும் அழைக்கப்படும். இது கேரள மாநிலத்தின் இனமாகும். நடுத்தர உடலமைப்புக் கொண்டது. பெரும்பாலும் வெண்மை நிறமுடையவை. பிற நிறங்களும் இவ்வினத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இரண்டு, மூன்று குட்டிகள் போடும். பாலுக்கு ஏற்ற இனம். ஆண், பெண் இரண்டிலும் சிறு கொம்புகள் உள்ளன. ஆண் எடை 39 கிலோ. பெண் எடை 31 கிலோ. புதுக்கோட்டைப் பண்ணையில் வளர்க்கப்படுகின்றன.
வங்காளக் கறுப்பு (Black Bengal) இது வங்க மாநிலம் மற்றும் அசாம் மாநிலத்தில் உள்ள இனமாகும். இது இறைச்சிக்கு சிறந்தது. அவ்வாறே அதன் தோலுக்கு பெயர் பெற்றது. பொதுவாக இரண்டு குட்டிகள் போடும்.
காஷ்மீரி (Kashmiri) இது காஷ்மீரிலும் திபேத்திலும் உள்ள இனமாகும். வெள்ளை மற்றும் கறுப்பும் வெள்ளையும் இணைந்த நிறத்துடன் காணப்படும். இந்த ஆடுகள் கடுமையான குளிரையும், தாங்க வல்லவை. இதற்காக பாஸ்பினா எனப்படும் மெல்லிய கம்பளி முடிக்கடியில் வளர்க்கின்றது. இவை குளிர்காலத்தில் வளர்ந்து, வசந்த காலத்தில் உதிர்ந்து விடுகின்றன. இவை சீப்பு மூலம் சீவிச் சேகரிக்கப்பட்டு, உயர்ந்த கம்பளங்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆடுகள் இறைச்சியும் வழங்குவதுடன் சுமையையும் எடுத்துச் செல்லவல்லவை.
பாஸ்மினா (Pashmina) இவை இமாசலப்பிரதேசம் மற்றும் லடாக் பகுதியில் உள்ளன. இவை சிறியவை. இவ்வின ஆடுகளில் பாஸ்மினா கம்பளி முன்சந்துகளிலும், உடல் ஓரங்களில் மட்டும் வளரும். இலை வெள்ளை மற்றும் அரக்கு நிறமுடையவை. சாம்பல் நிறம் கொண்டவையும் உண்டு. இவை உயர்ந்த மலைப் பகுதிகளில் சுமை ஏற்றிச் செல்ல உதவுகின்றன.

Tuesday, 24 February 2015

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்

கால்நடைகளின் குடற்புழு நீக்கம் செய்ய மூலிகை மருத்துவம்
தேவையான பொருட்கள் :-
சீரகம் - 15 கிராம்
கடுகு - 10 கிராம்
மிளகு - 5
மஞ்சள் தூள் - 65 கிராம்
பூண்டு - 5 பல்
தும்பை இலை - ஒரு கைப்பிடி
வேப்பிலை - ஒரு கைப்பிடி
வாழைத்தண்டு - 100 கிராம்
பாகற்காய் - 50 கிராம்
பனைவெல்லம் - 150 கிராம்
செய்முறை :-
சீரகம், மிளகு, கடுகு ஆகியவற்றை இடித்து, அத்துடன் மற்ற பொருட்களைச் சேர்த்து அரைத்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, நூறு கிராம் கல் உப்பில் புரட்டி எடுத்து, நாக்கின் மேல் பகுதியில் வைத்தால் மாடு அதை விழுங்கி விடும். மொத்த உருண்டைகளும் ஒரு மாட்டுக்கானது. ஒரே நேரத்தில் கொடுக்கப்படவேண்டும்.
மாதம் ஒருமுறை அல்லது இருமாதத்திற்கு ஒருமுறை தரவேண்டும்.

Monday, 16 February 2015

காய்கறி சாகுபடி மற்றும் அதற்கான காலம். !!

எந்தெந்த மாதத்தில், என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம்.
நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன.
தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.
காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.
காய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.
தைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.
மாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி.
ஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி
என அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.
தற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்த விளக்கம்-
ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.
இங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம்.
தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்யலாம்.

Thursday, 5 February 2015

தென்னை மதிப்பூட்டுதல்

தென்னை மதிப்பூட்டுதல்
தென்னை ஓலைகள்:
தென்னை ஓலைகள் கூரைகள் வேய்வதற்கு கிராமப் புறங்களில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இதிலிருந்து கூடைகள், வேலிகள் போன்றவை செய்யப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களில் ஓலை பின்னுதல் குடிசை தொழிலாக செய்யப்படுகிறது.
தென்னை ஓலையின் நடு நரம்பைக் கொண்டு துடைப்பங்கள் செய்யப்படுகிறது.
துடைப்பங்கள் தயாரித்தல் தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலங்களில் பெரும் அளவில் செய்யப்படுகிறது.
தேங்காய் பருப்பு:

அறுவடை செய்த தேங்காய் பருப்பை சுமார் 3-6 மாதங்களுக்கு துண்டுகளாகவோ (அ) உலர் தேங்காய் பூவாக பதப்படுத்தி பாதுகாக்கலாம். அவ்வாறு பதப்படுத்த 4% உப்பு, அசிட்டிக் அமிலம், சல்பர்-டை-ஆக்ஸைடு மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகியவை உபயோகிக்கப்படுகிறது. இதனை உபயோகிப்பதற்கு முன் நன்கு கழுவ வேண்டும்.
உலர்தேங்காய் பூ (அ) உலர் தேங்காய் பொடி: உலர் தேங்காய் பூவானது நன்கு முதிர்ந்த பருப்பில் உள்ள வெள்ளை நிறப்பகுதியை இயந்திரம் மூலம் வெட்டி நசுக்கி கிடைக்கும் சதைப்பகுதியில் இருந்து கிடைக்கிறது. இந்த தேங்காய் பொடியானது மூன்று தரமாக பிரிக்கப்படுகிறது. அவை முறையே (1) மாவு போன்ற வெண்மை நிறப் பொடி (2) சிறிய நடுத்தர வெண்மைப் நிறப்பொடி (3) நாட்டுத்திருவலில் கிடைக்கும் அளவிற்கு சற்று பெரிய வெண்மை நிறப்பொடி.
இந்த பருப்பானது இயந்திரத்தின் மூலம் வெட்டி நசுக்கி கிடைக்கும் சதைப்பகுதியானது சுமார் 140-170 பாரன்ஹீட் வெப்பநிலையில் உயர் வெப்ப உலர்த்தியில் உலர்த்தப்படுகிறது. இதன் ஈரப்பதம் சுமார் 2% ஆகும். இதில் உள்ள கொழுப்புச் சத்தின் அளவு 65-68 சதவிகிதம் மேலும் மற்றவை சுமார் 30-32% ஆகும்.
இந்த உலர் தேங்காய் பூவின் பெரும்பகுதி இனிப்பு மிட்டாய் தயாரிப்பிலும் பேக்கரிகளில் தயார் செய்யப்படும் பல்வேறு பதார்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
தேங்காய் சீவல்: தேங்காய் சீவலானது நன்கு காய வைக்கப்பட்ட முதிர்ந்த வெண்மை நிறப் பகுதியை மெல்லிய துண்டாக நசுக்கி உப்பு (அ) இனிப்பு சேர்த்து கைவினை உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
9-10 மாதங்கள் முதிர்ந்த தேங்காயின் வெண்மைநிறப் பகுதியை மெல்லிய துண்டாக நறுக்கி சர்க்கரை பாகில் ஊற வைத்து பின் வடிகட்டி உலர்த்தியில் உலர்த்துவதால் தேங்காய் சீவல்கள் கிடைக்கிறது.
தேங்காய் கிரிஸ்ப்ஸ்: 9-10 மாதங்களான இளம் முளைசூல்தசையிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது வெண்மை நிறத்தில் தேங்காயின் நறுமணத்துடன் எந்தவித நார்ச்சத்துமின்றி சுவையாக இருக்கும்.
இது தேங்காயின் வெண்மை நிறப் பகுதியை சுமார் 0.6-0.7 மி.மீ தடிமனில் நறுக்கி சூடான நீரில் போட்டு பின் மிதமான சர்க்கரை பாகில் வேகவைத்து அதன்பின் உலர வைத்து பெறப்படுகிறது. இது அதிக ஆற்றல் தரக்கூடிய உணவாகும்.
வறுத்த இளம் தேங்காய்: இளநீர் மற்றும் இளம் தேங்காயின் சுவையை அதிகரித்தும் நறுமணமூட்டும் வகையிலும் பதப்படுத்தப்படுகிறது.
இளநீரானது 2% சோடியம் மெட்டா பை சல்பேட் உடன் சேர்த்து 20 நிமிடங்களுக்கு கொதிக்க வைத்து உலர்த்தி ஒரு நிமிடத்துக்கோ அல்லது சிரட்டை எரியும் வரையோ விட வேண்டும்.
இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தேங்காயை அறையின் வெப்பத்தில் 3 நாட்களுக்கோ (அ) குளிர்பதன பெட்டியில் பல நாட்களுக்கோ பதப்படுத்தலாம்.
உலர்த்தப்பட்ட இனிப்பு தேங்காய்: இளம் தேங்காயானது உலர் இனிப்பு தேங்காய் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
தேங்காயின் சதைப்பகுதியை தண்ணீரில் கழுவி பின் இளநீரில் ஊறவைத்து மீண்டும் துாய்மையான நீரை ஊற்றி கழுவ வேண்டும்.
அதன்பின் சிறுதுண்டுகளாக நறுக்கி சுத்தமான சர்க்கரை மற்றும் நீருடன் 6:3:1 என்ற விகிதத்தில் கலந்து பின் ஒரு மணிநேரத்திற்கு வேகவைத்து உலர்த்த வேண்டும்.
பின் குளிரவைத்து பின் பாட்டில்களில் அடைத்து விற்கப்படுகிறது.
தேங்காய் கற்கண்டு: தேங்காய் கற்கண்டு தீய்க்கப்பட்ட தேங்காய் சதையை தேங்காய் பாலில் ஊறவைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது.
தீய்க்கப்பட்ட தேங்காயில் தேங்காய் பாலுடன் சேர்த்து ஈரப்பதப்படுத்தப்படுகிறது.
மீதமுள்ள பால் மற்றும் வெல்லப்பாகு ஆகியவற்றை பாத்திரத்தில் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
இத்துடன் சுத்தமான சர்க்கரையை சேர்த்து கெட்டியாகும் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
பின் இதை வெண்ணை தடவிய பாத்திரத்தில் ஊற்றி குளிர வைத்து சிறு துண்டுகளாக தேவையான பருமனில் வெட்டி ஒவ்வொரு துண்டையும் தனித்தனியாக அலுமினிய காகிதத்தை சுற்றி கட்ட வேண்டும்.
தேங்காய் பால் பவுடர்: தேங்காய் பாலை கட்டுப்பாடான சூழ்நிலையில் உலர்த்தி மற்றும் நீர்நீக்கப்பட்டு தேங்காய் பால் பவுடராக மாற்றப்படுகிறது.
திடநிலையில் 50-60 சதவிகித கொழுப்புச்சத்து உள்ளவாறு தேங்காய் பால் பவுடராக மாற்றப்படுகிறது. இத்துடன் குழம்பாக்கும் பொருள் மற்றும் நிலைநிறுத்தும் பொருள் ஆகியவை சேர்க்கப்படுகிறது.
திவலை உலர்த்தியில் சுமார் 180 சி வெப்பநிலையில் உலர்த்துவதே முக்கிய கட்டமாகும். சிறிய திவலைகளை எண்ணெய் துளியுடன் சேர்த்து தற்காலிகமாக உலர்த்தப்படுகிறது.
தேங்காய் மாவு: தேங்காய் சக்கையிலிருந்து தயார் செய்யப்படும் தேங்காய் மாவானது தனித்தன்மை வாய்ந்த பொருளாகும்.
தேங்காய் மாவானது தேங்காய் பால் தயார் செய்யும் போது கிடைக்கும் சக்கையிலிருந்து தயார் செய்யப்படும் நார்ச்சத்து மிகுந்த சத்துள்ள உணவுப் பொருளாகும்.
இதன்மூலம் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதுடன் நல்ல வருமானம் கிடைக்கிறது.
வெல்லம்: சுவையான தென்னங்கள்ளை துாய்மையான பாத்திரத்தில் இட்டு குறிப்பிட்ட நேரத்திற்கு புளிக்க வைக்க வேண்டும்.
பின் வடிகட்டி 12-15 சதவிகித திடமான வெல்லமாக மாறும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த வெல்லம் மருத்துவ குணங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது.
இதிலுள்ள குறைந்த சர்க்கரை மற்றும் தாதுக்கள் இதனை ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக மாற்றப்படுகிறது.
தென்னைந்தேன்: தென்னந்தேன் ஒரு பிசுபிசுப்பான பாலேடு போன்ற திரவமாகும்.
ஒரு பகுதி சுத்தம் செய்யப்பட்ட பகுதி வெண்ணை எடுக்கப்பட்ட பாலுடன் பகுதி குளுக்கோஸ் சேர்த்து நன்கு கலக்கி இதனுடன் சோடியம் அல்ஜினேட் 0.5 சதவிகிதம் சர்க்கரை மற்றும் சேர்த்து நிலைநிறுத்தும் பொருள் தயார் செய்ய வேண்டும்.
நறுமணத்தை அதிகரிக்க இதனுடன் தேங்காய் க்ரீம் சேர்க்க வேண்டும். இந்த கலவையை சுமார் 15 நிமிடத்திற்கு வேக வைத்து நன்கு கலக்கும்படி கிளறி விட வேண்டும். இதன் கரையக்கூடிய முழுமையான சர்க்கரையின் அளவு சுமார் 75 சதவிகிதமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
இதனை சுத்தமான பாத்திரத்தில் சுற்றி மூடி வைக்க வேண்டும்.
தேங்காய் குழம்பு: தேங்காய் குழம்பானது இளநீருடன் மிளகாய், வெங்காயப்பொடி மற்றும் வினிகர் சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
தேங்காய் லெமனேடு:
இளநீரை கொதிக்க வைத்து அத்துடன் சர்க்கரை மற்றும் எலுமிச்சம்பழச்சாறு சேர்த்து தயாரிக்கப்படுகிறது.
இது கேரளாவில் பாரம்பரிய பானமாக உபயோகிக்கப்படுகிறது.
தேங்காய் பால்: நன்கு முதிர்ந்த தேங்காய் பருப்பில் இருந்து தேங்காய் பால் எடுக்கப்படுகிறது. இதனுடன் நீர் சேர்த்தோ சேர்க்காமலோ தேங்காய்ப்பால் எடுக்கப்படுகிறது. இதிலிருந்து கொழுப்புச்சத்து நிறைந்த தேங்காய் க்ரீம் எடுக்கப்படுகிறது.
தேங்காய் க்ரீம்:
நன்கு முதிர்ந்த தேங்காயிலிருந்து எடுக்கப்படும் இந்த தேங்காய் க்ரீம் ஆனது நீருடன் சேர்த்தோ (அ) சேர்க்காமலோ பல்வேறு வகையான இனிப்புகள், க்ரீம், பிஸ்கட், ரொட்டி ஆகியவற்றில் உயோகிக்கப்படுகிறது.
பதப்படுத்தப்பட்ட பாட்டில்களில் அடைக்கப்பட்ட தேங்காய் க்ரீம் ஆறு மாதம் வரை கெடாமல் இருக்கும். உபயோகப்படுத்திய பின்பு இந்த பாட்டில்களை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து நாளடைவில் உயோகிக்க வேண்டும்.
தேங்காய் க்ரீம் தேங்காய் பாலின் திரண்ட நிலையாகும். இது நன்கு முதிர்ந்த மற்றும் புதிதாக அறுடை செய்யப்பட்ட தேங்காயிலிருந்து தயார் செய்யப்பட்ட இந்த க்ரீம் அனவரும் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் உள்ளது.
தேங்காய்ச் சாறு:
தேங்காய்ச் சாறு ஒரு தெளிவான, எளிதாக பாயக்கூடிய திரவமாகும். இந்த சாறானது, தேங்காய் பாலை அதே அளவு சுத்தமான சர்க்கரை மற்றும் டைசோடியம் பாஸ்பேட் சேர்த்து அதனுடைய அளவு 0.25 சதவிகிதத்திற்கு வரும்படி கொதிக்க வைத்து கிடைக்க்கூடியது ஆகும். இந்நிலையில் முழுமையாக கரையக் கூடிய சர்க்கரையின் அளவு சுமார் 68-70 சதவிகிதமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த சூடான கலவையை சுத்தமான பாத்திரத்தில் ஊற்றி மூடி வைக்க வேண்டும்.
இந்த தேங்காய் சாறானது பேக்கரிகளில் தயார் செய்யப்படும் பல்வேறு பதார்த்தங்களிலும் ஆல்கஹால் நிறைந்த பானங்களிலும் நீருடன் கலந்து உபயோகிக்கப்படுகிறது. மேலும் அரிசி மாவிலிருந்து தயார் செய்யப்படும் கேக் மற்றும் மற்ற உணவுப் பண்டங்களில் பயன்படுத்தப்படுகிறது.
இனிப்பான திடநிலையிலுள்ள தேங்காய்ப்பால்: இனிப்பான திடநிலையிலுள்ள தேங்காய்பால் தயார் செய்யப் தேங்காய் க்ரீம் எடுக்கப்பட்ட தேங்காய் பாலானது பயன்படுகிறது. இதற்கு வெண்ணையெடுக்கப்பட்ட பால்பவுடர், தேங்காய் க்ரீம், சர்க்கரை மற்றும் மக்காசோள எண்ணெய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
வெண்ணெய் எடுக்கப்பட்ட பாலானது சுமார் 80-90 செல்சியஸ் வெப்பநிலையில் 30 நிமிடத்திற்கு பாஸ்டுரைசேசன் செய்யப்படுகிறது.
இந்தக் கலவையை கூழ்மம் செய்யும் கருவியின் வழியே செலுத்தப்பட்டு பின் அவி பாத்திரம்/கொள்கலனில் கொதிக்க வைக்க வேண்டும். பின் நன்கு கிளறிவிட்டு அதன் முழுமையாக கரையக் கூடிய சர்க்கரையின் அளவு சுமார் 68 சதவிகிதமாக இருக்கும்படி செய்ய வேண்டும்.
பின் இதனை சுத்தமான டின்களில் சுத்தமாக இருக்கும் போதே ஊற்றி பின் குளிரவைக்க வேண்டும்.
இளநீர்: இளநீர் ஒரு உற்சாகப்படுத்தக்கூடிய பானமாகும். இதன் மெல்லிய தேங்காய் ஒரு நல்ல உணவாகும்.
இந்த இளநீரானது பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் நிறைந்த பானம் ஆகும்.
ஏழு மாதமான இளநீரில் குளுக்கோஸின் அளவு மிக அதிகமாக இருப்பதால் இது இளநீருக்கு மிகவும் ஏற்ற பருவமாகும்.
இதற்கு குட்டை இரகமான செளகாட் ஆரஞ்சு டிவார்ஃப் மிகவும் ஏற்ற இரகமாகும்.
கள்: தென்னங்கள்ளானது முழுவதும் விரியாத பூம்பாலையிலிருந்து பெறப்படுகிறது. இனிப்பான கள்ளானது மரத்தில் இருந்து இறக்கப்பட்ட புளிக்காத திரவமாகும். புளிக்க வைக்கப்பட்ட கள்ளானது ஆல்கஹால் நிறைந்த பானமாகும்.
தென்னை வினிகர்: தென்னை வினிகரானது தென்னங்கள்ளை புளிக்கச் செய்து தயாரிக்கப்படுகிறது. இது மீன் மற்றும் மாமிச உணவுகள் தயார் செய்யப்படுகிறது
இந்த தென்னங்கள்ளை சுமார் 24 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இந்த ஆல்கஹால் அசிட்டிக் அமிலமாக மாறுவதற்கு சுமார் 10-14 வாரங்கள் வைக்கப்படுவதால் வினிகர் கிடைக்கிறது.
நயம் தேங்காய் எண்ணெய்: நயம் தேங்காய் எண்ணெய் ஆனது நன்கு முதிர்ந்த தேங்காயிலிருந்து எந்த வித இரசாயணப் பொருள்களின் கலப்படமின்றி தயாரிக்கப்படுகிறது. இது “எண்ணெய்களின் தாய்” என்றழைக்கப்படுகிறது.
இதில் ஃபேட்டி அசிட்ஸ், லாரிக் அமிலம், தாதுக்கள், வைட்டமின்கள் ஆன்டி அக்ஸிடன்டுகள் நிறைந்த மருத்துவ குணம் மிகுந்தவை.
இதிலுள்ள 50% லெளரிக் அமிலமானது தாய்ப்பாலுக்கு இணையாக இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி வாய்ந்ததாகும். இது வைட்டமின் இ நிறைந்த கரையும் தன்மையற்ற எண்ணெய் பசை கொண்டது. இது சோப்பு, லோசன், க்ரீம் மற்றும் லிப் பாம் தயாரிக்க பயன்படுகிறது.
இளநீர் ஷேக்ஸ: இது இளநீரை பருப்பு வகைகளோடு சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு பானமாகும். பிஸ்தா, பேரிச்சம்பழம் மற்றும் பழவகைகள் (மாம்பழம், அன்னாசி, தர்பூசணி, பப்பாளி) மற்றும் ஏலக்காய், சாதிக்காய் சேர்த்து வெவ்வேறு சுவைகள் மற்றும் நறுமணங்களோடு தயார் செய்யப்படுகிறது.
இளநீர் ஜாம்: 7-8 மாதங்களான இளநீரிலிருந்து இந்த இளநீர் ஜாம் தயார் செய்யப்படுகிறது. நசுக்கப்பட்ட தேங்காய் பருப்பானது 80% சர்க்கரை மற்றும் தேவையான அளவு பதப்படுத்தும் பொருள் சேர்த்து ஜாமாக மாறும் வரை கொதிக்க வைக்க வேண்டும். வெவ்வேறு விதமான சுவை மற்றும் நிறத்திற்காக வெவ்வேறு வகையான பழச்சாறானது இந்த தேங்காய் பருப்புடன் சேர்க்கப்படுகிறது.