Monday 25 August 2014

ஜீரோ பட்ஜெட்:16 ஏக்கர் காடு... ஒரே ஒரு மாடு!

பெங்களூருவிலிருந்து ரயிலில் பயணம்... எதிர் சீட்டில் அமர்ந்திருந்த பெண் பரஸ்பர விசாரிப்புகளுக்குப் பின், ஆங்கில தினசரி ஒன்றை அவசரம் அவசரமாக படிக்க ஆரம்பித்தார். கையில் செய்தித்தாள்... காதில் அலைபேசி சகிதமாக, ''எலக்ட்ரானிக் சிட்டியில் ஒரு பிளாட் இருக்கிறது... விலை ரூ.20 லட்சம். பண்ணாரி கட்டா ரோட்டில், ஒரு கிரவுண்ட் காலி மனை இருக்கிறது. விலை ஒரு கோடி'' என்று பேசிக் கொண்டே வந்தார்.
நன்றாகப் படித்தப் பெண், ஐ.டி. கம்பெனியில் வேலை... மாதம் 50 ஆயிரம் சம்பளம். ஆனால், தான்... தனது குடும்பம்.. குழந்தைகள் என்ற அளவில் மட்டுமே சிந்தனையை குறுக்கி கொண்டவர் என்பதை அவருடைய பேச்சிலும் செயலிலும் நன்றாகவே உணரமுடிந்தது. 5 ரூபாய் கொடுத்து பேப்பர் வாங்கி, ஒரு 5 நிமிடம் கூட மற்ற பொதுச்செய்திகளை அவர் வாசிக்கவில்லை. 'சமுதாயம் எக்கேடு கெட்டுப்போனால் என்ன? என் குடும்பம் மட்டும் நன்றாக இருந்தால்போதும்' என்ற குறுகிய மனப்பான்மை எயிட்ஸ் நோயைவிட ஆபத்தானது என்பதை இவர்களுக்கு யார்தான் உணர்த்துவது.
பாக்கெட்களில் விற்கும் உணவு பண்டங்களில், விவசாய விதை வித்துகளில், காய்கறிகளில் எல்லாம் விஷம் சேர்ந்து கிடக்கிறது. அவற்றை விற்று கொள்ளையடிக்கின்றன பகாசுர நிறுவனங்கள். இப்படிப்பட்ட சமுதாயச் சீரழிவுகள் கண்டு கொதித்து எழாமல் குடும்பத்துக்குள் குறுக்கிக் கொள்வது சரியாகப்படவில்லை. லட்சுமணக் கோடுகளைத் தாண்டி பெண்கள் வெளியே வர வேண்டும். அப்பொழுதுதான் சமுதாயம் உருப்படும்.
''அதுசரி, 'ஜீரோ பட்ஜெட்' விவசாயத்துக்கும்... இப்போது நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும் விஷயங்களுக்கும் என்ன சம்பந்தம்'' என்கிறீர்களா...?
ஏராளமான சம்பந்தம் இருக்கிறது. இந்த இதழ் 'ஜீரோ பட்ஜெட்'டில் நாம் பார்க்கப்போவது கதாநாயகனை அல்ல... கதாநாயகியை! கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்ட இயற்கை விவசாயிகள் சங்க அமைப்பாளராக இருக்கும் திருமதி பாரத்தி என்பவர்தான் அந்தக் கதாநாயகி (தொடர்புக்கு: 08172-228524).
ஆண்களே அழுதபடி செய்து கொண்டிருக்கும் விவசாயத்தை... ஒரு பெண், அதுவும் இளம் பெண் சவாலாக ஏற்று சாதித்துக்கொண்டிருக்கிறார். அவரின் முழுபணியையும் கேட்டு முடித்தபோது, கிட்டத்தட்ட பாரதி சொன்ன புதுமைப்பெண்ணாகவே நமக்கு காட்சியளித்தார் பாரத்தி.
ஹாசன் நகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கும் ஏ.குடுஹனஹள்ளி என்ற கிராமத்தில்தான் இருக்கிறது பாரத்தியின் தோட்டம். காலை வேளையில் அங்கே நாம் நுழைந்தோம். பூத்து குலுங்கும் புன்னகைத் தோட்டமாக எங்களை வரவேற்று, வெள்ளாமைக் காட்டுக்குள் அழைத்துச் சென்றார் பாரத்தி. வெனிலா பீன்ஸ், காபி, கோக்கோ, தென்னை, பாக்கு என்று வளர்ந்து கிடக்கும் காடு அது. பசுமை சூழ்ந்த 16 ஏக்கர் நிலத்தில் விரவிக்கிடக்கும் அந்தக்காட்டை 70 வயது நிரம்பிய தன் மாமனார் அனுமே கவுடா மற்றும் இரு பணிப்பெண்களுடன் இணைந்து பராமரித்து வருகிறார் பாரத்தி.
அனுமே கவுடா, வேளாண் பட்டம் பெற்று, கர்நாடக அரசின் விவசாயத்துறை துணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். பாரத்தியின் கணவர், காலை 8 மணிக்கு ஹாசன் சென்றால் இரவு 8 மணிக்குத்தான் வீடு திரும்புவார். நகரத்தில் ஐஸ்க்ரிம் பார்லர் வைத்து இருக்கிறார்.
''ஏன், அவரும் உங்களோடு தோட்டத்தில் வேலைப் பார்க்கக் கூடாதா...?'' என்று கேட்டால்,
''எங்களுக்கே வேலை இல்லை. அவர் வேறு எதற்கு?'' வலி தெரியாமல் தாங்கள் பார்க்கும் விவசாயத்தை, வடிவான வார்த்தைகளில் சொன்னார் பாரத்தி. அவர்கள் வார்த்துக்கொண்டிருக்கும் விவசாயத்தை வார்த்தைகளில் வடிக்க முடியாது, பார்த்து உணரக்கூடிய மாபெரும் கடல் அது. நான் எவ்வளவுதான் எழுதினாலும், வார்த்தைகளில் வடிவம் கொடுத்தாலும் நேரில் பார்ப்பதற்கு எதுவுமே ஈடாகாது.
பேசிக்கொண்டே வரப்புகளில் நகர்ந்தார் பாரத்தி...
விவசாயிகளின் மூச்சை நிறுத்துவது முட்டுவளிச் செலவு எனப்படும் ஆரம்பகட்டச் செலவுகள்தான். நிலம் தயாரிப்பு, உரம், பூச்சி மருந்து என்று அதிகரிக்கும் முட்டுவளிச் செலவு என்பது ‘ஜீரோ’வானால்... நஷ்டமும் இல்லை, கஷ்டமும் இல்லை. இந்தப் பணியைத்தான் ஜீரோ பட்ஜெட் சூத்திரம் செய்து கொண்டிருக்கிறது.
ஜீரோ பட்ஜெட் முறைப்படியான விவசாயத்துக்கு ஆட்கள் கூட அதிகம் தேவை இல்லை. ‘விதைக்கின்ற காலத்தில் ஊருக்குப் போனால், அறுவடைக் காலத்தில் ஆள் தேவையில்லை’ என்ற சொல் வழக்கையும் பொய்யாக்கி... உழவே வேண்டாம், அறுவடைக்கு மட்டும் ஆள் இருந்தால் போதும் என்று ஜெயித்து காட்டும் விவசாயம் இது'' என்று பெருமிதமாகச் சொன்ன பாரத்தி, தன் மாமனார் அனுமே கவுடாவிடம் நம்மை அறிமுகப்படுத்தினார்.
31 வருடங்கள் விவசாயத்துறை துணை இயக்குநராக பணியாற்றி யிருக்கும் அனுமே கவுடா, ''அரசாங்கத்தின் சொல்படி கேட்டு, ரசாயன உரம்... பூச்சி மருந்து இதையெல்லாம் ஊர் முழுக்க தெளிக்கச் சொன்னது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்'' என்று வார்த்தைக்கு வார்த்தை மருகினார்.
‘‘நான் விவசாய பட்டப்படிப்பு படித்தவன். 1960-ல் கர்நாடக அரசு பணியில் சேர்ந்தேன். அது 'பசுமை புரட்சி'யின் ஆரம்பகாலம். அதுவரை இயற்கை உரங்களை மட்டுமே நம்பி விவசாயம் செய்து வந்த முறையை ஒரேயடியாக தூக்கி எறிந்துவிட்டு, ரசாயன உரத்துக்கு நாட்டையே மாற்றிய காலம். 'ரசாயன உரம் போட்டால், முன்று மடங்கு விளைச்சல் கூடும்' என்று அரசு கூறியதை கிளிப்பிள்ளையைப் போல நாங்களும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி விவசாயிகளை மாற்றினோம்.
'உப்பு, உரம், யூரியா இதையெல்லாம் போட்டால் காடு கெட்டுவிடும். பயிர்கள் கருகி நாசமாக போய்விடும்' என்று அப்போதே என்னுடைய அண்ணன்கள் எதிர்த்தார்கள். அதையும் மீறி, வேளாண்மைப் படிப்பு படித்துவிட்டோம் என்கிற மமதையில் ரசாயன உரங்களை எங்களது தோட்டத்திலும் கொட்டினேன். சில வருடங்களில் விளைச்சல் கூடியது. ஆனால், வரவர எவ்வளவு உரத்தைக் கொட்டினாலும் விளைச்சல் பாதியில் படுத்துவிட்டது. முட்டுவளிச் செலவு கூடியது. விளைச்சலோ குறைந்து கொண்டே போனது. அப்பொழுதுதான் மூளையில் ஒரு பொறி தட்டியது. மண்ணைப் பரிசோதித்து பார்த்தபோது... மண் மரணமடைந்து இருந்தது தெரிய வந்தது. நுண்ணுயிர்கள் நிறைந்த மண்ணே உயிர் உள்ள மண். ரசாயன உரமும்... உப்பும் மண்ணில் உள்ள நுண்ணியிரிகளை கொன்றுவிட்ட பிறகு, மண் மாண்டு போன நிலைதான். எத்தனை ஆயிரம் விவசாய குடும்பங்களின் விளக்கை அணைத்து விட்டோம் என்கிற வேதனை இதயத்தை இன்றும் கூட இறுக்கிக்கொண்டிருக்கிறது. என்ன செய்வது, அரசு சொல்லியதை அதன் ஊழியனாகிய நான் செயல்படுத்தினேன். அதற்காக இப்போது வெட்கப் படுகிறேன்'' என்று உணர்ச்சி வசப்பட்டவர்,
''91-ம் ஆண்டு ஓய்வு பெற்றுவிட்டேன். அரசு பணியில் கற்றுக்கொண்டத் தவறுகளை திருத்திக்கொண்டு, பழைய போக்கில் சிந்தித்து... இயற்கை விவசாயத்துக்கு மாறினேன். இயற்கை உரம் கொண்டு 12 ஏக்கரில் தென்னை நடவு செய்தேன். இதற்காக, என் அப்பா கால முறைப்படி இயற்கை உரத்தை நானே தயாரித்தேன்.
பெரிய குழி எடுத்து, அதில் இலை, தழை, தாம்புகளை நிரப்பவேண்டும். அதன்மீது மாட்டுச்சாணம், கோமியம், நல்ல ஊட்டச்சத்துள்ள மண் ஆகியவற்றைப் போட்டு மூடி மூன்று மாதங்கள் கழித்து எடுத்து வயலுக்குப் போட வேண்டும். இதன் மூலம் மண்ணில் நுண்ணுயிரிகள் பெருகும். இந்த நுண்ணுயிரிகள்தான் பயிர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளை மண்ணிலிருந்து பிரித்து கொடுக்கும் பணியை செய்கின்றன.
2005-ம் ஆண்டில்தான் பாலேக் கரின் ஜீவாமிர்தத்தைக் கேள்விப்பட்டு அதை பயன்படுத்த ஆரம்பித்தேன். ஆகா, என்ன அற்புதமான மருந்து அது. நுண்ணுயிரிகளைப் பெருக்கும் பணியை 'ஜீவாமிர்தம்' மிக எளிதாக செய்து முடிக்கிறது. அதைபோட ஆரம்பித்த பிறகு, விளைச்சல் பெருகி விட்டது'' என்று நிறுத்தியவர்,
''சிக்கமகளூர் காப்பி தோட்டப் பெண் பாரத்தி என் மருமகளாக வந்தது நான் செய்த பாக்கியம். 12 ஏக்கர் தென்னை போக மீதமிருந்த 4 ஏக்கரில் தென்னையோடு காப்பி, பாக்கு என எல்லாவற்றையும் பாலேக்கர் சொற்படி போட்டு, இந்தக் காட்டை சிக்கமகளூர் மலைநாட்டுக் காடாக மாற்றியதோடு, முழுவேலை களையும் தானே பொறுப்போடு கவனித்துக் கொள்கிறார்'' என்று மருமகளை மெச்சினார்.
மீண்டும் பேச ஆரம்பித்த பாரத்தி, ''ஒரு பாக்கு மரத்தில் 5 கிலோ வரையே வருடத்துக்கு விளைச்சல் கிடைத்து வந்தது. ஜீவாமிர்தம் கொடுக்க ஆரம்பித்ததும் மரத்துக்கு 8.5 கிலோ வரை விளைச்சல் உயர்ந்துள்ளது. அடுத்த வருடம் 10 கிலோ வரை எதிர்பார்க்கிறேன். ஒரு ஏக்கரில் 560 பாக்கு மரங்கள் உள்ளன. ஒரு கிலோ பச்சை பாக்கு ரூ. 120 முதல் 140 வரை விற்கிறது'' என்று சொன்னவரிடம்,
''ஏக்கருக்கு என்ன வருமானம் கிடைக்கும்?'' என்று கேட்டோம்.
''நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்களேன். இந்த ஜீரோ பட்ஜெட் விவசாயத்தில் வரவு மட்டும்தான். செலவே இல்லை. 16 ஏக்கர் பூமி முழுவதற்கும் எரு கொடுப்பது ஒரே ஒரு பசுமாடு... அதன் கன்று ஆகியவைதான். கூடமாட ஒத்தாசைக்கு இரண்டு பெண்கள் இருக்கிறார்கள். அவ்வளவுதான் செலவு'' என்று தெம்பாகவேச் சொன்னார் பாரத்தி.
ஒரு ஏக்கரில் பாக்கு வருமானம் என்னவாக இருக்கும் என்பதைக் கணக்குப் போட்டுப் பார்த்தோம். ஏக்கருக்கு 560 மரங்கள். மரத்துக்கு 8.5 கிலோ பாக்கு விளைகிறது. கிலோ சராசரியாக ரூ.130 என்று வைத்துக் கணக்குப்போட்டால்... 6,18,800 ரூபாய் வருகிறது. நாம் மயக்கம்போட்டு விழாத குறைதான்.
''கணக்கு சரியா.?'' என்று பாரத்தியிடம் கேட்டோம். ''உங்களிடம் பொய்சொல்லி என்ன ஆகப்போகிறது!'' என்று கேட்டு வாயை அடைத்துவிட்டார்.
தோட்டத்தில் ஊடு பயிராக காபி, வெனிலா, கொக்கோ என கூட்டணி போட்டு பசுமை பந்தலாக... பார்க்கவே பரவசப்படுத்துகிறது.

நன்றி: பசுமை விகடன்

No comments:

Post a Comment