Monday, 2 March 2015

வெள்ளாடு தீவனத் தேவை

வெள்ளாடுகளுக்கு எவ்வளவு தீவனம் தேவை
வெள்ளாடுகள் உடல் எடையில் 4 முதல் 5% காய்வு நிலையில் தீவனம் ஏற்கும் என்று குறிப்பிட்டேன். நமது பகுதி ஆடுகள் சராசரி 25 கிலோ எடையே இருக்கின்றன. (பொலி கிடாக்கள் மற்றும் சமுனாபாரி போன்ற இன ஆடுகளின் எடை கூடுதலாக இருக்கும்.
ஆகவே, 25 கிலோ ஆட்டிற்கு 1 முதல் 1.25 கிலோ தீவனம் காய்வு நிலையில் தேவைப்படும். இதனைப் பசுந்தழை, உலர்ந்த தீவனம், கலப்புத் தீவனமாகக் கீழ் வருமாறு வழங்கலாம்.
காய்வு நிலையில்
பசுந்தழை / புல் 3 கிலோ காய்வு நிலையில் 0.75 கிலோ
உலர் தீவனம் 300 கிராம் காய்வு நிலையில் 0.25 கிலோ
கலப்புத் தீவனம் 250 கிராம் காய்வு நிலையில் 0.24 கிலோ
காய்வு நிலையில் மொத்தம் 1.24 கிலோ
பொதுவாகத் தீவனம் அளிப்பது பற்றிக் குறிப்பிட்டோம். சிற்றூர்களில், பகுதிக்கு ஏற்றாற்போல், சாமானிய ஆடு வளர்ப்போர் பல்வேறு தீவனங்கள் அளிப்பார்கள். அது பற்றியும் சிறிது குறிப்பிடாவிட்டால், செய்திகள் பெரும் பண்ணை வைத்திருப்போருக்கு மட்டுமே என்றாகிவிடும்.
புளியங்கொட்டை
இது சிறந்த ஆட்டுத் தீவனம். தோல் நீக்கி, அரைத்துத் தீவனமாகக் கொடுக்கலாம். வீட்டில் உள்ள புளியங்கொட்டையை மலிவான விலைக்கு விற்றுவிட்டு, அதிக விலையில் ஆட்டுத் தீவனம் வாங்குவது சரியில்ல.
வேலிக் கருவை நெற்றுகள்
இதுவும் தானியத்திற்கு ஈடான சிறந்த ஆட்டுத் தீவனம். இதில் 15 / 25% சர்க்கரைப் பொருள் உள்ளதால், தினம் 100 / 200 கிராம் மட்டுமே கொடுக்கலாம். சாமானியர்கள் இந்நெற்றுகளை சேகரித்து வைத்து சிறிது சிறிதாகத் தீவனமாக அளிக்கலாம்.
எள்ளு பிண்ணாக்கு
இதுவும் சிறந்த பிண்ணாக்கு. கறவை மாடுகளுக்குப் பெருமளவில் பயன்படுத்தப்படுகின்றது. வெள்ளாடுகளுக்கும் ஏற்றது.
தேங்காய் பிண்ணாக்கு
இதில் புரதம் சற்றுக் குறைவே. மேலும் விரைவில் கெட்டுவிடும் தன்மை கொண்டது. இது பெருமளவில் கலப்புத் தீவனம் உற்பத்தி செய்வோருக்கு நேரடியாக எண்ணெய் ஆலையிலிருந்து அனுப்பப்பட்டு விடுகின்றது. எங்கும் தாராளமாகக் கிடைப்பதில்லை.
சோயா பிண்ணாக்கு
தற்போது சோயா மொச்சை நம் நாட்டில் பயிரிடத் தொடங்கியுள்ள நிலையில் சோயா பிண்ணாக்கும், ஓரளவு கால்நடைத் தீவனமாகக் கிடைக்கின்றது. இது கடலைப் பிண்ணாக்கைப் போலச் சத்துள்ளது. இதன் சிறப்பு என்னவென்றால், நச்சுப் பூஞ்சக் காளானால் இது பாதிக்கப்படுவதில்லை. ஆகவே இது உயர்ந்ததாகும்.
பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு
முன்பு பருத்திக் கொட்டை பெருமளவில் கால்நடைகளுக்குத் தீவனமாகக் கிடைத்து வந்தது. மனிதத் தேவைக்கு எண்ணெய் கிடைக்காத சூழ்நிலையும், பலவகை எண்ணெய்களை வாசனையற்றுச் சுத்திகரிக்கும் சூழ்நிலையும், பருத்திக் கொட்டையை எண்ணெய் வித்தாக மாற்றி விட்டது. இப்போது பருத்திக் கொட்டைப் பிண்ணாக்கு கிடைக்கின்றது. இதுவும் சிறந்த வெள்ளாட்டுத் தீவனமே. இதில் பைபாஸ் புரதம் (By Pass Protein) அதிகம் உள்ளது.
அரிசித் தவிடு
இது சிறந்த வெள்ளாட்டுத் தீவனம் உமி கலவாமல், நன்கு சலித்துத் தீவனமாக அளிக்க வேண்டும். தற்போது வீடுகளில் கிடைக்கும் நெல் தவிர ஆலைகளிலிருந்து நெல் தவிடு வெள்ளாட்டுத் தீவனமாகக் கிடைப்பதில்லை. அப்படியே கிடைக்கும் சூழ்நிலையிலும், உமி கலந்ததாகவே உள்ளது. இப்போது நெல் தவிட்டிலிருந்து பெருமளவில் எண்ணெய் எடுப்பதால் எண்ணெய் நீக்கிய தவிடு, கலப்பினத் தீவனம் தயாரிப்போருக்குக் கிடைக்கின்றது. தவிட்டில் உள்ள உமி, வெள்ளாட்டுக் குடலில் அழற்சியை உண்டு பண்ணும்.
கோதுமை தவிடு
இது சிறந்த தீவனமாகும். இது அதிக விலையில் விற்றாலும் எங்கும் கிடைக்கின்றது. இதனைப் பண்ணையாளர்கள் கலப்புத் தீவனம் தயாரிக்க நன்கு பயன்படுத்தலாம்.
தானிய வகைகள்
தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு நவ தானியங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. மலிவாக இருக்கும் தானியங்களைச் சேர்த்துக் கொள்ளலாம். நெல் மட்டும் விளையும் பகுதியில் அரிசி நொய் சேர்த்துக் கொள்ளலாம். யாவருமே அரிசியையே விரும்பி உண்ணத் தொடங்கிய சூழ்நிலையில் நவ தானியங்களைக் கால்நடைத் தீவனத்தில் சேர்த்துக் கொள்ளலாம். சோளம், கம்பு, மக்காச்சோளம், கேழ்வரகு போன்றவை சிறந்தவை.
இது தவிரப் பயறு வகைகளில் கொள்ளு (காணம்) பொதுவாக மலிவான விலையில் கிடைப்பதால், இதனையும் அரைத்துத் தீவனத்தில் சேர்க்கலாம். இதன் காரணமாகப் பிண்ணாக்கு அளவைக் கலப்பது தீவனத்தில் குறைக்கலாம். எண்ணெய்க்காக எண்ணெய் வித்துக்கள் செக்கில் ஆட்டப்படும்போது கிடைப்பது பிண்ணாக்கு. எல்லாவிதப் பிண்ணாக்கும் வெள்ளாடுகளுக்கு ஏற்ற தீவனமாகாது. எல்லாவித எண்ணெயும் மனிதனுக்கு ஆகாததுபோலச் சத்து மிகுந்ததும், நச்சுத் தன்மை அற்றதும், நம் பகுதியில் கிடைப்பதுமான பிண்ணாக்குகள் குறித்துப் பார்க்கலாம். பொதுவாகத் தழையில் கிடைக்காத பாஸ்பரஸ் இவற்றில் அதிகம் கிடைக்கும்.
கடலை பிண்ணாக்கு
இதை பிண்ணாக்குகளின் அரசன் எனலாம். இதில் எவ்வளவு புரதம் உள்ளது. அரசர்களுக்கே ஆபத்தான காலம் இது. இந்தப் பிண்ணாக்கு அரசனுக்கும் ஓர் ஆபத்து. ஈரம் மிகுந்த பகுதியில் சேமிக்கப்படும் அல்லது தரம் குறைந்த வேர்க்கடலையிலிருந்து தயாரிக்கப்படும் கடலைப் பிண்ணாக்கில், அப்ஸோடாக்சின் என்னும் நச்சுப் பொருள் உள்ளது. இது ஒரு வகைப் பூஞ்சைக்காளானால் (Aspergillus flavus) உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆகவே தரமான பிண்ணாக்கு வாங்கி ஈரமற்ற இடங்களில் சேமித்து வைக்க வேண்டும். ஆகவே மிக உயர்ந்த இக்கால்நடைத் தீவனம் அளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இதனைச் சொல்கிறனேயன்றி வேறல்ல. பிண்ணாக்கு என்றாலே கடலைப் பிண்ணாக்கே யாவரும் பயன்படுத்துவது, சிறந்தது, புரதம் 44% கொண்டது.
மேலும் கடலைப் பிண்ணாக்கு மாடுகள் எருமைகளுக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் அளவிற்கு வெள்ளாட்டிற்குச் சிறந்ததல்ல என்று கூறும் ஆசிரியரும் உண்டு.
கலப்புத் தீவனம்
வெள்ளாடுகளுக்கு மாடுகளைப் போன்று அதிக அளவில் கலப்புத் தீவனம் பண்ணையாளர்களுக்கு அதிகச் செலவை உண்டு பண்ணும். பெரும் பாலும் வெள்ளாடுகளுக்கு கலப்புத் தீவனம் அளிக்கப்படுவதில்லை. ஆடு வளர்ப்பவர்கள் சிலர் வீட்டில் மீதியாகும் சிறிதளவு சோறு, தவிடு ஆகியவற்றைக் கொடுப்பார்கள். இச்சூழ்நிலையில் ஓர் எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன். பலர் வீட்டில் விருந்தின்போது மீதியாகும் சோறு, பலகாரங்கள் ஆடு மாடுகளுக்குக் கொடுத்து விடுவார்கள். இதனால் பல வெள்ளாடுகள் இறந்துள்ளன. வெள்ளாடுகள் நம்மைப் போன்று சோறு சாப்பிடும் இனம் அல்ல. வெள்ளாடுகளின் பெருவயிற்றிலுள்ள நுண்ணுயிர்கள் லாக்டிக் அமிலத்தை உற்பத்தி செய்து அதன் காரணமாக இறக்க நேரிடும். சாதாரணமாக 100 – 150 கிராம் சோறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தாது. பெரு வயிற்றுலுள்ள புரோட்டோசோவா என்னும் ஒற்றைச்செல் உயிரினங்கள் இவற்றை விழுங்கிப் பெருமளவில் அமிலம் வெளியாவதைத் தடுத்து நன்மை செய்துவிடும்.
பொதுவாக, ஆழ்கூள முறையில், அதிக எண்ணிக்கையில் வெள்ளாடு வளர்ப்பவர்கள் கலப்புத் தீவனங்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளலாம். தவிடு, பிண்ணாக்கு, நவதானியம் ஆகிய மூன்றும் கீழ்க்காணும் விதத்தில் கலந்து தீவனம் தயாரிக்கலாம். இதில் 1% உப்பு, 2% தாது உப்புக் கலவை சேர்க்கப்பட வேண்டும். ஆகவே
தானியம் 50%
பிண்ணாக்கு 20%
தவிடு 17%
தாதுஉப்பு 2%
உப்பு 1%
என்னும் வீதத்தில் வெள்ளாடுகளுக்குக் கலப்புத் தீவனம் தயாரிக்கலாம். கலப்புத் தீவனத்தில் 12 – 15% செரிக்கும் புரதமும், 60 – 70 மொத்தச் செரிக்கும் சத்துக் கூறும் இருக்க வேண்டும்.
வேர்க்கடலைக் கொடி
கடலைக்கொடி, கடலை பயிரிடும் தமிழ் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும், ஆடு மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கப்படுகின்றது. இதுவும் ஒரு சிறப்பு காய்ந்த தீவனமாகும். பயிரில் சிவப்புக் கம்பளிப் புழு தாக்குதல், கடலை உற்பத்தியைப் பாதிப்பதுடன், ஆடுகளுக்குப் பெருந் தீவனப் பஞ்சத்தை உண்டாக்குகின்றது.
துவரை இலை
தற்போது துவரம்பருப்புடன் சத்துமிகு தழை வழங்கும் மாத்துவரை வகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது நடைமுறையில் புன்செயில், துவரை பல பகுதிகளில் பயிரிடப்படுகின்றன. பயிர் விளைந்து துவரையை வெட்டித் துவரைப் பருப்பைப் பிரிக்கும்போது, உதிரும் இலை, நெற்றுக் கூடுகளை ஆடுகளுக்குத் தீவனமாக சேர்த்து வைக்கலாம். இந்த தவிரப் பருத்திச் சாகுபடிப் பகுதிகளில் பருத்தி இலைகளையும், சேகரித்துத் தீவனமாக அளிக்கலாம். இது போன்றே மொச்சை, அவரைச் செடிகளில் உதிர்ந்த இகைளை வெள்ளாடுகளுக்குத் தீவனமாக அளிக்கலாம்.
உலர் தீவன அவசியம் என்ன? பொதுவாக அசைபோடும் கால்நடைகள், சிறப்பாக வெள்ளாடுகள் பசுந்தீவனத்தை மட்டும் உண்டு அவற்றின் முழுத் தீவனத் தேவையையும் நிறைவு செய்துவிட முடியாது போகலாம். முக்கியமாக அவற்றிற்குத் தேவைப்படும் அளவு காய்வு நிலைத் தீவனத் தேவை (Dry Matter) அடைய முடியாது போகும். ஆகவே, அவற்றின் பசி அடங்காது. வயிறு நிறையத் தீவனத்தைத் தின்றுவிட்டு, அதற்கு மேல் தின்ன முடியாது இருக்கும் வெள்ளாடுகள் இரவில் பசியால் துன்புறும். காரணம், பசுந்தீவனம் பெரு வயிற்றின் இடத்தை அடைத்துக் கொள்ளும். ஆகவே மாடுகளுக்கு இரவில் சிறிதளவு காய்ந்த தீவனம் அரைக்கிலோ கொடுக்கலாம் அல்லது பகல் வேளையில் பாதியும் இரவில் பாதியுமாகக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment