Sunday, 9 September 2018

தொல்லுயிர் கரைசல்

நுண்ணுயிர் கரைசல் என்பது ஜீவாமிர்தத்துக்கு தமிழ் பெயர் என்பது நமக்கு தெரியும். 
தொல்லுயிர் கரைசல் என்று ஒன்றும் உண்டு. அது என்னங்க?!

இது குறித்த செய்தி திரு சுந்தரராம ஐயர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

இதை உருவாக்கியவர் திரு நம்மாழ்வார் அவர்களின் மூத்த சகோதரர். 
இயற்கை இடுபொருள்களில் நேரடியாக பயிருக்கு பயன்படுவது இது ஒன்று தான். 
இதை தயாரிக்கும் முறையை திரு சுந்தரராம ஐயர் சொன்னபடி கொடுக்கிறேன்.

தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள். 
1. புதிய சாணம் 5 கிலோ, 
2. நாட்டுசர்க்கரை 3/4 கிலோ, 
3. கடுக்காய் பொடி 25 கிராம்,
4, அதிமதுரம் 2 1/2 கிராம். 
இத்துடன் 50 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் ஒன்று.




டிரமில் சாணத்தை நீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். 
பின்னர் சர்க்கரையை சேர்த்துக கொள்ளுங்கள். 
கடுக்காய் பொடியையும், அதிமதுரப்பொடியையும் அதில் கலந்து பின் டிரம் வழியும் வரையில் நீர் நிரப்புங்கள்.
இது முக்கியம்.
பின்னர் மூடியைக்கொண்டு காற்று புகாவண்ணம் டைட்டாக மூடிவிடுங்கள். 
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மூடியை திறந்து உள்ளே இருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றி மீண்டும் மூடி வையுங்கள். 
10 நாட்கள் கழித்து மூடியை திறந்து பின் வேறொரு டிரம்மில் நன்றாக காற்று படும்படியாக மெதுவாக ஊற்றுங்கள். 
இப்போது தொல்லுயிர் கரைசல் தயார்.

இதை பாசனநீரில்கலந்து விடலாம். 1:10 என்ற விகிதத்தில் பயிர்கள் மீது தெளிக்கலாம். இது செய்த மறுநாளே பயிர்கள் நன்றாக பச்சை எடுத்து இருக்கும். 
இது ஒன்றே பயிருக்கு உடனடியாக உணவாக மாறும் என்று அவர் கூறினார். 
இது எப்படி உடனடியாக உணவாகிறது என்பதற்கான விளக்கமும் கொடுத்தார். 
அதன் சாரம் இதோ.

சாணத்தில் இருக்கும் நுண்ணுயிர்களில் சில காற்று இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும், அதுபோலவே சில நுண்ணுயிர்கள் காற்று இல்லாமல் இருந்தால்தான் உயிர் வாழும். இந்த அடிப்படையில் தான் தொல்லுயிர்கரைசல் தயாரிக்கப் படுகிறது. 
டிரம் வழியும் வரை நீர் நிரப்பி மூடிவைப்பதால் டிரம்மில் காற்று இருக்காது. 
இந்த பத்து நாட்களில் காற்று இல்லாமல் வாழ இயலாத நுண்ணுயிர்கள் மடிந்து அடுத்த வகை நுண்ணுயிர்களுக்கு உணவாகி விடும். பத்து நாட்கள் கழித்து டிரம்மில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்துமே காற்றில்லாமல் உயிர் வாழக்கூடுயவைகள் மட்டுமே. 
இப்போது அதை வேறு டிரம்மில் காற்று படும்படியாக ஊற்றும் போது அவைகளையும் மடிந்து விடும். 
இதன் பின் டிரம்மில் இருப்பது நல்ல சத்தான கரைசல் மட்டுமே.
அதனால் தான் இது உடனடியாக பயிருக்கு பயன்படுகிறது. 
இது தான் நான் அவர் உரையிலிருந்து புரிந்து கொண்டது.
இது உங்களுக்கும் பயன்படக்கூடும். 
வாழ்த்துகள்.


No comments:

Post a Comment