Saturday, 17 January 2015

அதிமதுரம்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.
அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.
1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.
2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.
4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.
5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.
6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.
7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.
8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.
9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.
10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.
11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.
12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.
13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .
22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.
28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

சிறியா நங்கை

சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்’ என்பது பழமொழி... வீட்டை சுற்றி இந்த செடியை வளர்த்தால்... பாம்பு / பூரான் தொல்லைகள் இல்லை... நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று ......



றியாநங்கை பற்றி கேள்விப்பட்டிருப்போம். பாம்பு, தேள் உள்ளிட்ட விஷக்கடிக்கு இது நல்ல மருந்து. ஆனால் இன்றைக்கு நிலவேம்பு... நிலவேம்பு என்று ஊரெங்கும் ஒரே பேச்சாக இருக்கிறது. இந்த நிலவேம்பும், சிறியாநங்கையும் ஒன்று என்பது பலருக்கு தெரியாது. இதன் தாவரப்பெயர் Andrographis paniculata. அதிலும் பொதுவாக நங்கையில் பல்வேறு வகைகள் உள்ளன. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளா நங்கை, மலை நங்கை, வைங்க நங்கை, கரு நங்கை, வெண் நங்கை, வசியா நங்கை, செந் நங்கை என பல நங்கைகள் இருந்தாலும் சிறியா நங்கை மற்றும் பெரியா நங்கையே நம்மில் பயன்படுத்தப்படுகிறது. மிளகாய்ச்செடியின் இலையைப்போலவே சிறியாநங்கை காணப்படும். இதன் முழுச்செடியையும் (வேர் முதல் விதை வரை) நிழலில் காய வைத்து பிறகு வெயிலில் காய வைத்து இடித்து சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் கால் ஸ்பூன் அளவு காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் சேர்த்து சாப்பிட வேண்டும். இதேபோல் மாலையிலும் (இருவேளை) 48 நாள் சாப்பிட்டு வந்தால் நம்மை பாம்போ, தேளோ கடித்தால் அவை இறந்துபோகும். அந்த அளவுக்கு விஷ எதிர்ப்புத்தன்மை நமக்குள் ஊடுருவி இருக்கும். பொதுவாக சிறியாநங்கை செடியின் இலையை பறிப்பவர்கள் எவ்வளவுதான் கையை கழுவினாலும் அதன் கசப்புத்தன்மை மாறாது. இந்தநிலையில் சாப்பாட்டை தொட்டால் அது வாயில் வைக்க முடியாத அளவுக்கு கசப்பாக இருக்கும். வீடுகளின் வேலியில் சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது. அதாவது சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடுமாம். தினமும் காலையில் சிறியாநங்கை பொடியை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதி (நீரிழிவு) மற்றும் அலர்ஜி நோய்கள் குணமாகும். இதுமட்டுமல்லாமல் கல்லீரல் நோய்கள், மஞ்சள்காமாலை, சைனஸ், மலேரியா போன்றவற்றை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது.

Friday, 16 January 2015

தென்னைக்கு இடையில் வாழை...

சாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள்... என காசை இறைத்து விவசாயம் செய்து, கண்ணீரை அறுவடை செய்வது ஒரு ரகம். கழிவுகளை இறைத்து, இயற்கை விவசாயம் செய்து காசை அறுவடை செய்வது இரண்டாவது ரகம்! இதில், இரண்டாவது ரகத்தைச் சேர்ந்தவர்... விசாககுமார். தீவிரமாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர், தென்னைக்கு ஊடுபயிராக பல ரக வாழைகளையும் சாகுபடி செய்துவருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-குளச்சல் சாலையில் ஆசாரிப்பள்ளம் என்ற ஊரிலிருந்து, இரண்டாவது கிலோ மீட்டரில் இருக்கிறது, பாம்பன்விளை. தென்னை, வாழைகளுக்கு மத்தியில் பசுமையாகக் காட்சியளிக்கிறது, விசாககுமாரின் இயற்கைத் தோட்டம். தோட்டப் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள, உற்சாகமாய் பேசத் துவங்கினார்.
பாடம் சொன்ன பசுமை விகடன்!
''விவசாயம் எங்க குடும்பத்துக்கு பூர்விகத் தொழில், என் கூடப் பிறந்தவங்க எல்லாருமா சேர்ந்து விவசாயம் பண்ணிட்டு இருந்தோம். தனியா வீட்டு மொட்டை மாடியிலயும் தோட்டம் போட்டிருந்தேன். தோட்டத்தில் தெளிச்சது போக மிச்சமீதி இருக்குற ரசாயனத்தை வீட்டுத்தோட்டத்தில் தெளிப்பேன். இதைப் பார்த்த என் மனைவி சுஜாதாதான், 'ஏங்க இப்படி ரசாயனத்தை வாரி கொட்டுறீங்க. இது உடலுக்கும் கேடில்லையா?’னு அடிக்கடி கேப்பாங்க. அதனாலதான் இயற்கை விவசாயம் பத்துன தேடல் உருவாச்சு. அதை, 'யாருகிட்ட கத்துக்கிடறது?’னு குழம்பிட்டு இருந்தப்பதான் 'பசுமை விகடன்’ அறிமுகமாச்சு. எதார்த்தமா ஒரு தடவை பஸ்ல போறப்போ படிக்கக் கிடைச்ச 'பசுமை விகடன்', இன்னிக்கு என் சுவாசமாவே மாறிப் போச்சு.
'பசுமை விகடன்' நடத்தின சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சியிலயும் கலந்துக்கிட்டேன். தொடர்ந்து பசுமை விகடனைப் படிச்சுட்டு, ஒவ்வொரு விஷயத்தையும் புதுசா கத்துக்கிட்டேன். நாகர்கோவில்ல இருக்கற 'ரூரல் அப்லிஃப்ட் சென்டர்'லயும் இயற்கை விவசாயப் பயிற்சிகள் எடுத்தேன். 'என்னதான் பயிற்சி எடுத்துக்கிட்டாலும், அனுபவ அறிவும் வேணுமே’னு இயற்கைக்கு மாற தீர்மானிச்சேன். ஆனால், தொடக்கத்தில் கூட்டுக் குடும்பச் சொத்தா இருந்ததால, இயற்கைக்கு மாறணும்னு சொன்னதும், மத்தவங்கள்லாம் பயந்தாங்க. பாகப் பிரிவினை செஞ்சதும் என்னோட நாலு ஏக்கர்ல இயற்கை விவசாயம் பண்ண ஆரம்பிச்சுட்டேன். இப்ப முழுசா இயற்கை விவசாயத்துக்கு வந்து மூணு வருசமாச்சு'' என்று முன்னுரை கொடுத்த விசாககுமார், இயற்கை விவசாய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
''இந்த நாலு ஏக்கர்ல, மூன்றரை ஏக்கர்ல தென்னையும், அரை ஏக்கர்ல முந்திரியும் போட்டிருக்கேன். தென்னைக்கு ஊடுபயிரா மூணு ஏக்கர்ல மட்டும் வாழை சாகுபடி பண்றேன். இதுபோக என் தோட்டத்தில பப்பாளி-3, கிராம்பு-7, பலா-7, மா-7, தேக்கு-10, ஆரஞ்சு-2, சப்போட்டா-2 னு மரங்கள் இருக்கு. கொஞ்சம் பனை மரங்களும் நிக்குது. என் தோட்டத்து தென்னை மரங்களுக்கு
35 வயசு ஆகுது. 25 அடி இடைவெளியில மரங்கள் இருக்கறதால, செவ்வாழை, படத்தி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, மட்டி, ஏத்தன், பூங்கதளி வாழை ரகங்களைப் போட்டிருக்கேன்.  
நீரை சிக்கனமாக்கும் கேணி!
வாழைக்கு எட்டு அடி முதல், பத்து அடி வரை இடைவெளி விட்டிருக்கேன். ரெண்டு தென்னைகளுக்கு மத்தியில (12 அடி இடைவெளியில்) மூணடி ஆழம், ஒன்றரை அடி அகலத்துக்கு கேணி (குழி) அமைச்சுருக்கேன். தென்னை ஓலை, மட்டைனு கழிவுகளை கேணிக்குள்ளே போட்டுடுவேன். இதனால, என்னதான் அடைமழை பெய்தாலும், ஒரு சொட்டுத் தண்ணிகூட தோட்டத்தை விட்டு வெளியே போகாது. கேணியில் ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை மட்டும் தண்ணீர் விடுவேன். நல்லா வெயில் அடிக்கும்போது தென்னை மர ஓலையின் நிழல், எதுவரை படுதோ, அதுவரை வேர் விட்டிருக்கும். இதனால, பனிரெண்டு அடி தள்ளியிருந்தாலும், கேணியில் இருந்து, தென்னை தண்ணியை உறிஞ்சுக்குது.
இந்தக் கேணிகளுக்கு பக்கத்துலதான் வாழை இருக்கு. ஒரு ஏக்கர்னு பாத்தீங்கனா... 85 தென்னையும், 125 வாழையும் இருக்கும். தோட்டம் முழுக்க சொட்டுநீர்ப் பாசனம்தான். தென்னைக்குனு தனியா எந்தப் பராமரிப்பும் செய்றதில்ல. வாழைக்கு மட்டும்தான் பராமரிப்பு. தென்னையில ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை காய் பறிப்போம். மூன்றரை ஏக்கர்ல ஒவ்வொரு வருஷமும் 3 ஆயிரம் காய்ல இருந்து 4 ஆயிரம் காய் வரைக்கும் மகசூல் கிடைக்குது'' என்ற விசாககுமார், ஊடுபயிராக வாழை சாகுபடி பற்றி சொல்லத் தொடங்கினார்.
விதைநேர்த்தி முக்கியம்!
'வாழையில் எந்த ரகமாக இருந்தாலும், சாகுபடி காலம் வேண்டுமானால் மாறுமே தவிர, பராமரிப்பு ஒன்றுதான். 2 கிலோ தொழுவுரம், 16 லிட்டர் தண்ணீர், தலா 200 மில்லி சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம் ஆகியவற்றைக் கலந்து அதில் விதைக்கிழங்கை நனைத்து நடவு செய்ய வேண்டும். இந்த அளவு, 100 கிழங்குகளுக்கு சரியாக இருக்கும். நடவு செய்ததும், முதல் தண்ணீர் கொடுக்க வேண்டும். 3-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும்... 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி தண்ணீர் கொடுக்க வேண்டும். அதன் பிறகு, 5 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கொடுக்க வேண்டும்.
களைகளே மூடாக்கு!
15-ம் நாளில் ஒவ்வொரு வாழைக் கன்றுக்கும் 20 கிலோ தொழுவுரம் போட்டு, சுற்றியுள்ள களைகளை வெட்டி மூடாக்காகப் போட வேண்டும். இதேபோல் 3, 6, 9-ம் மாதங்களிலும் களைகளை வெட்டி தொழுவுரத்தைச் சேர்த்து மூடாக்கிட வேண்டும். 5-ம் மாத இறுதியில், ஒவ்வொரு கன்றுக்கும் 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, 100 கிராம் கடலைப் பிண்ணாக்கு என்கிற கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒன்றாகக் கலந்து தூரைச் சுற்றி தூவி, தண்ணீர் கொடுக்க வேண்டும்.
பூச்சி, நோய் தாக்குவதில்லை!
முழுக்க இயற்கை விவசாயம் என்பதால், பூச்சி, நோய் தாக்குதல் அதிகம் இருக்காது. பழுப்பு நோய் சில நேரங்களில் எட்டிப் பாக்கும். இந்த நோய் தாக்கிய வாழையின் இலை பழுத்துப் போயிருக்கும். இதைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில்,
50 மில்லி புளித்த மோர் சேர்த்து விசைத் தெளிப்பான் மூலமாக மரம் முழுவதும் தெளிக்க வேண்டும். இதற்கும் மட்டுப்படாவிட்டால், அடுத்த 15-ம் நாளில், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 மில்லி வேப்பெண்ணெய், சிறிது காதி சோப் கலந்து தெளிப்பான் மூலமாக தெளித்தால்... பழுப்பு நோய் காணாமல் போய்விடும்.

செவ்வாழையில் ஆப்பிள் நோய் தாக்கும். இந்த நோய் குலை போடுவதற்கு முன்பு வந்தால்... அந்த மரத்தில் குலை தள்ளாது. குலை தள்ளிய பின்பு வந்தால்... காய் சிறுத்து போய்விடும். செவ்வாழைப் பழமும் நிறம் மாறி விடும். இதனால், 40% அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். இலைகள் சிறுத்துப் போவதுதான் இந்த நோய்க்கான அறிகுறி. இந்த நோய், ரசாயன மருந்துகளுக்குக் கட்டுப்படுவதில்லை. இலை சிறுத்ததுமே தலா 100 கிராம் வேப்பம் பிண்ணாக்கு, கடலைப் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து, கலவையை வாழையின் தூரைச் சுற்றிப் போட்டு தண்ணீர்விட வேண்டும். அதில் மட்டுப்படாவிட்டால்... மீன் குணபம் (மீன் அமினோ அமிலம்) தயாரித்துத் தெளிக்கலாம். செவ்வாழை 10-ம் மாதத்தில் குலை தள்ளி, 12-ம் மாத இறுதியில் அறுவடைக்கு வரும். மற்ற ரகங்களைப் பொறுத்தவரை 9-ம் மாதத்தில் குலை தள்ளி, 11-ம் மாதத்தில் அறுவடைக்கு வரும்.
ஆண்டுக்கு ஆறு குலை!
சாகுபடிப் பாடம் முடித்த விசாககுமார், நிறைவாக, ''பொதுவா வாழைக்கு எட்டடி இடைவெளி இருந்தா போதும். படத்தி ரக வாழைக்கு மட்டும் 15 அடி இடைவெளி விட்டிருக்கேன். இதுல பக்கக் கன்னை வெட்ட மாட்டேன். ஒவ்வொரு வாழையில இருந்தும் எட்டு முதல் பத்து பக்கக் கன்னுகள் வரைக்கும் வரும். முதல் வாழையில் ஒன்பதாம் மாசம் குலை தள்ளும். அதிலிருந்து மூணு மாசத்துக்கு ஒரு முறைனு பக்கக் கன்னுகள்ல குலை வெட்டலாம். தார் கொஞ்சம் சிறுசா இருந்தாலும்... வருஷத்துல ஆறு தார் வரைக்கும் கிடைச்சுடும். ஒரு தார் 250 ரூபாய் வரைக்கும் விலை போகுது.
தார் வெட்டினதும், வாழையை அப்படியே விட்டுடுவேன். அது, தானா முறிஞ்சு கீழே விழுந்து மூடாக்காகிடும். என்னோட தோட்டத்து மகசூலுக்கு மூடாக்குதான் மூல மந்திரம். வாழை குலை தள்ளின உடனே, தோட்டத்துக்கே நேரடியா வந்து விலை பேசி, ஒப்பந்தம் போட்டுடறாங்க வியாபாரிங்க. செவ்வாழைக்கு எப்பவும் நல்ல விலை கிடைக்குது. ஒரு தார், 350 ரூபாயிலிருந்து
500 ரூபாய் வரைகூட விலை போகும். மத்த ரகங்கள்ல ஒரு தார் 300 ரூபாய்க்குக் குறையாம விலை போகும். எப்படிப் பார்த்தாலும்... லட்ச ரூபாய்க்கு மேல லாபம் கிடைச்சுடும். மூணு ஏக்கர்ல ஊடுபயிரா போடுற வாழையிலயே இத்தனை லாபம்கிறது... சந்தோஷமான விஷயம்தானே'' என்றார் உற்சாகமாக.
மீன் அமினோ அமிலம்!
 மீன் அமினோ அமிலம் பயிர்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவக்கூடிய முக்கியமான கரைசல். இதை வயலில் தெளித்தால்,  பயிர்களெல்லாம் பசுமைக் கட்டி நிற்கும். இந்த மீன் அமினோ அமிலத்தைத் தயாரிப்பது எப்படி?  ஒரு கிலோ நாட்டுச் சர்க்கரை, ஒரு கிலோ மீன் கழிவு இவை இரண்டையும் ஒரு வாளியில போட்டு, காற்றுப் போகாத மாதிரி நல்லா மூடி வைக்க வேண்டும். 40 நாட்கள் கழித்து வாளியைத் திறந்து பார்த்தால், தேன் போன்ற நிறத்தில் ஒரு திரவம் இருக்கும். இந்தத் திரவத்திலிருந்து எந்தக் கெட்ட வாடையும் வீசாது. பழ வாசனை வரும். இப்படி வாசனை வீசினால், மீன் அமினோ அமிலம் நல்ல முறையில் தயாராகிஉள்ளதென புரிந்து கொள்ளலாம். நெல், வாழை, கரும்பு, காய்கறி பழங்கள்னு எல்லாவற்றுக்கும் இதை தெளிக்கலாம். இது மிகச் சிறந்த வளர்ச்சி ஊக்கி. 10 லிட்டர் தண்ணிரில்
200 மில்லி அமினோ அமிலத்தைக் கலந்து தெளிக்கலாம். ஒரு தடவை தயாரித்த மீன் அமினோ அமிலத்தை 6 மாதம் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். நாய், பூனைனு வீட்டுல வளர்க்கிற வீட்டு விலங்குகளிடமிருந்து இந்த திரவத்தை பத்திரமா வைக்க வேண்டும்.


நன்றி: பசுமை விகடன்

Monday, 5 January 2015

ஆட்டுப் பண்ணையை தொடங்குவது

ஒரு ஆட்டுப் பண்ணையை தொடங்குவது மிகவும் எளிதான ஒன்று. ஆனால், இது எளிதாக இருப்பதற்கு நாம் முறையான தகவல்களை பெற்றிருக்க வேண்டும். முறையான தகவல்களை அறிந்த பின் தொடங்கப்படும் எந்த ஒரு தொழிலும் இலாபகரமானதாகவே இருக்கும்.
தொழிலை தொடங்குவதற்கு சில அடிப்படை தகவல்களை கீழ்க்கண்ட கேள்விகளுக்கு பதில் காண்பதன் மூலம் பெறலாம்.
GoatFarming
எந்த வகையான வியாபாரத்தை செய்யப் போகின்றோம்?
ஆட்டுப் பால்
ஆட்டிறைச்சி
செம்மறியாட்டுக் கம்பளி
ஆடுகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
எத்தனை வகையான ஆடுகள் இருக்கின்றன?
அவற்றின் ஆயுட்காலம் என்ன?
சினைக்காலம் என்ன?
எவ்வளவு பால் கொடுக்கும்?
ஒரு நாளைக்கு எத்தனை முறை பால் கறக்கலாம்?
எவ்வளவு கம்பளி வழங்கும்?
எத்தனை மாதத்திற்கொருமுறை கம்பளியை வெட்டலாம்?
என்ன வகையான உணவுகளை வழங்க முடியும்?
ஆடுகளின் பொதுவான நோய் என்ன?
பராமரிப்புச் செலவு என்ன?
கழிவுகளை என்ன செய்யலாம்?
எவ்வளவு பெரிய தொழில் செய்யலாம்?
உள்ளூர் தேவைக்கு மட்டும்?
உள்நாட்டு தேவை?
ஏற்றுமதி?
சில்லறை வியாபாரம்?
மொத்த வியாபாரம்?
எங்கே ஆடுகளை வாங்குவது?
எத்தனை ஆடுகள்?
வியாபார அனுமதி அல்லது உரிமம்
உள்நாட்டு மற்றும் நகராண்மைக் கழக அனுமதி வேண்டுமா?
கால்நடை இலாகா சிறப்பு அனுமதி வேண்டுமா?
நிலத்தை வாங்கி மேம்படுத்துதல்
எல்லா தகவல்களையும் திரட்டிய பிறகு, எந்த அளவிலான தொழில் செய்யலாம் என்பது தெரிய வரும். பிறகு, அதற்கேற்றவாறு சரியான ஒரு இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்
எந்த இடம்?
நீர் விநியோகம் உள்ளதா?
வாங்குவதா அல்லது குத்தகைக்கு எடுப்பதா?
எந்த மாதிரியான கொட்டகைகள் மற்றும் கட்டிடங்கள் வேண்டும்
வேலையாட்கள் தெவைப்படுமா?
பாதுகாப்பு அம்சங்கள் என்ன?
இவற்றையெல்லாம் நாம் கருத்தில் கொண்டு வியாபாரத்தை தொடங்கி வெற்றி பெறலாம்.