Thursday 4 March 2021

ஆட்டு எரு

ஆட்டு எருவில் மாட்டு எருவில் உள்ளதைப் போல், 2 மடங்கு தழைச்சத்தும் சாம்பல் சத்தும் உள்ளது. ஒரு ஆடு ஒரு வருடத்துக்கு, 500 கிலோ முதல், 750 கிலோ வரை எரு உற்பத்தி செய்ய வல்லது. 100 ஆடுகள் உள்ள கிடை வைத்தால், ஒரு ஏக்கருக்கு வேண்டிய வளத்தைப் பெறலாம்.ஆட்டு எருவில் உள்ள சத்துக்களின் அளவு, ஆட்டு இனம் மற்றும் அவைகளுக்கு அளிக்கப்படும் தீவனத்தைப் பொறுத்தே இருக்கும். ஆடுகளுக்கு புரதச்சத்து குறைந்த தீவனங்களை அளிக்கும்போது, எருவில் தழைச்சத்து அளவு குறைந்தே இருக்கும். ஆட்டின் சிறுநீரில் தழைச்சத்தின் அளவு அதிகமாக இருக்கும்.




புழுக்கையில் நுண்ணூட்டச்சத்துக்களும், தாது உப்புக்களும் உள்ளன. எனவே புரதச்சத்து மிக்க தீவனங்களான குதிரைமசால், முயல்மசால், வேலிமசால், சூபாபுல், தட்டைப்பயறு போன்றவற்றை, ஆடுகளுக்கு கொடுத்தால் தழைச்சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களின் அளவு, ஆட்டு எருவில் அதிகமாக இருக்கும். ஆட்டு எருவில், 60 முதல் 70 சதவீதம் தண்ணீர் சத்தும், 2 சதவீதம் தழைச்சத்தும், 0.4 சதவீதம் மணிச்சத்தும், 1.7 சதவீதம் சாம்பல் சத்தும் உள்ளன.

ஆழ்கூள முறை உர உற்பத்திஇம்முறையில் கொட்டகையின் நிலப்பரப்புக்கு, ஆழ்கூளமாக நிலக்கடலைத் தோல், துண்டிக்கப்பட்ட வைக்கோல், இலைச்சருகுகள், மரத்தூள், தேங்காய் நார்கழிவு போன்றவற்றை பயன்படுத்தலாம்.


ஆடுகளுக்கு நல்ல ஊட்டச்சத்து மிக்க பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம், தண்ணீர் தேவைக்கேற்ப கொடுப்பதால், ஆடுகள் நன்கு உட்கொண்டு, அதிக புழுக்கை மற்றும் சிறுநீரை வெளியேற்றுகிறது.

ஆழ்கூளத்திலுள்ள ஈரத்தன்மையைப் பொறுத்து, 3 முதல் 4 வருடத்துக்கு ஒரு முறை, ஆழ்கூள எருவை எடுத்துக் கொள்ளலாம். 


இந்த முறையில் பத்து ஆடுகளிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு, இரண்டரை டன் தரமான எரு கிடைக்கும். இந்த எருவில், 50 கிலோ பொட்டாஷ் உரத்திலுள்ள சாம்பல் சத்தும் கிடைக்கும். ஆட்டு எருவில் உள்ள தழைச்சத்து, மெதுவாக வெளிப்படுவதால் பயிர்களின் தேவைக்கேற்ப, தழைச்சத்து சீராக கிடைக்கிறது.

வீடுகளில் மண் தொட்டி மற்றும் பாலித்தீன் பைகளில், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் விவசாயிகள், இந்த ஆழ்கூள எருவை பயன்படுத்தி, களைகளற்ற நாற்றங்கால் அமைத்து, நல்ல தரமான கன்றுகளை உற்பத்தி செய்யலாம். ஆழ்கூள உரத்தை தென்னை, வாழை, தக்காளி, மிளகாய், கத்தரி போன்ற பயிர்களின் நாற்றங்காலில் இட்டு, களைகளின் அளவைக் கட்டுப்படுத்தி அதிக லாபம் பெறலாம்.


Sunday 23 June 2019

இயற்கை களைக் கொல்லி - ஒரு விவசாயின் அனுபவம்

இயற்கை களைக்கொல்லி தயார்
******************************************

நீண்ட பரிசோதனைக்கு பிறகு வெற்றி ..
இது விவசாயிகளுக்கு வரபிரசாதம் என்றுகூட சொல்லலாம்..
ரசாயன களைக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண் மலடாவதுடன்,
மனித உடலும் மலடாகிவிடுகிறது..

இதற்கு தீர்வுதான் என்ன என்று யோசித்தேன்..



முகநூலில் பல நண்பர்கள் மாட்டு கோமியம் தெளித்தால் களைச்செடி கருகி விடுகிறது என்று கூறினர்..
முயற்சித்தேன் களைமுளைவிடும் போது..
ஆனால் பலனலிக்கவில்லை..
சரி வெறும் கோமியம் மட்டும் தெளித்தால் களை கருகாது என்று சிறிது கல் உப்பை சேர்த்தேன்..

களை கருகவில்லை..
எலுமிச்சபழத்தை சேர்த்தேன் பலனில்லை..


"இதனுடன் வேப்பெண்ணெய் சேர்த்தேன் களைச்செடி கருகியது"
சரி என்று கடந்த மாதம் எனது வாழை காட்டில் தெளித்து பார்த்தேன்.
களைச்செடி கருகி வாழை கருகரு என்று வளர்ந்தது..
சரி இனி நாம் சின்ன டிராக்டரை விட்டு களைச்செடிகளை அழிக்க தேவை இல்லை என்று முடிவு செய்தேன்..
என்னிடம் இருப்பது இரண்டு நாட்டு மாடு..
பயிருக்கு உரத்தேவையை இந்த இரண்டு மாடுகளே பூர்த்தி செய்கிறது.
இது சராசரியாக தினமும் பத்து லிட்டர் கோமியம் கிடைப்பதே சிரமமாக இருந்தது
(12 மணி நேரத்தில்)

ஆனால் களைக்கொல்லிக்கு நாம் இந்த கோமியத்தை பயன்படுத்தினால் வாழைக்கு நீருடன் கலந்து விட பற்றாகுறை ஆகிவிடுமே என்று யோசித்தேன்..
தீவிரமாக யோசித்தேன்..
ஒரு யோசனை வந்தது..
நாம் ஏன் இந்த 
வாழையின் பக்க கன்றுகளையும்,
வாழை பூவையும் மாட்டுக்கு போட்டால் 
கோமியம் அதிகமாக கிடைக்குமே என்று ..

வீனாக போன பக்க கற்றுகளையும் வாழை பூவையும் மாட்டிற்கு போட்டேன் 
கைமேல் பலன் கிடைத்தது.
சராசரியாக நாள் ஒன்றிற்கு இருபது லிட்டர் கோமியம் கிடைத்தது இரண்டு மாடுகளிடமிருந்து..
அப்படியே சேகரித்தேன் ஒரு மாதம்..
நானூறு லிட்டர் கோமியம் கிடைத்தது..
நிம்மதி பெருமூச்சு விட்டேன்..


செய்முறை விளக்கம்..
*************************

நீர்கலக்காத மாட்டு கோமியம் ஒரு குடம் (பத்து லிட்டர்) ஒருமாத காலம் ஆகியிருந்தால் இன்னும் சிறப்பு..

முளைத்த களைச்செடியாக இருந்தால் ஒரு கிலோ கல் உப்பு ..

களைச்செடிகள் வளர்ந்திருந்தால் இரண்டு கிலோ கல் உப்பை பத்து லிட்டர் கோமியத்தில் போட்டு நன்றாக கலக்கவும்..

பிறகு ஒரு எலுமிச்சை பழத்தை பிழிந்து விடவும்..

அதனுடன் வேப்ப எண்ணை நூறு மில்லியை இதனுடன் ஊற்றி கலக்கவும்..

பிறகு வடிகட்டி கைத்தெளிப்பானில் களைச்செடிகள் மீது தெளிக்கவும்..

(பயிருக்கு படாமல்)

அடுத்த இரண்டு நாட்களில் அனைத்து களைச்செடிகளும் கருகிவிடும் பார்த்தீனிய உட்பட கோரை, அறுகம்புல் தவிர..

இந்த களைக்கொல்லி பயிருக்கு எந்த தீங்கும் தருவதில்லை,

காரணம் கோமியம் பயிர் வளர்ச்சிக்கு உகந்ததது..

வேப்ப எண்ணை தொடர்ந்து பயன்படுத்தினால் கோரை கிழங்கு கூட அழிந்து விடும்..

கல் உப்பு ஒரு கிலோ என்பதால் மண்ணை பாதிப்பது இல்லை..

இதை நீங்கள் செய்ய குறைந்த செலவே ஆகிறது..

அந்த காலத்தில் வேப்பமரத்தில் செய்த கலப்பையை கொண்டு நம் பாட்டன் பூட்டன் உழுதததால் கோரை விவசாய பூமியில் இல்லாமல் போனது..

பச்சை புரட்சி என்ற பெயரில் மரக்கலப்பை இரும்பு கலப்பை ஆன பின்பே கோரைக்கிழுங்கு நம் பூமிக்குள் நுழைந்து விவசாயிகளுக்கு பெரும் தலைவலியை தந்தது..

ஒரு டேங்க் இயற்கை களைக்கொல்லி தயாரிக்க ஆகும் செலவு,

கல் உப்பு ஒரு கிலோ 3 ரூபாய்

எலுமிச்சை பழம் 3 ரூபாய்

வேப்ப எண்ணை 100Ml 12 ரூபாய்
ஆக மொத்தம் 18 ரூபாய்


Tuesday 18 September 2018

இயற்கை விவசாயம் பற்றி படித்து தெரிந்து கொண்ட செய்திகள் . உங்களுக்கும் பிடிக்கும் !

ஒரு ஏக்கருக்கு உரமாக தெளிக்க, 10 கிலோ வேப்பம் புண்ணாக்குயை 10 லிட்டர் கோமியத்தில் அரை கிலோ கழிவு பெருங்காயத்தோடு இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் உபயோகிக்கவேண்டும்.புளிப்பொட்டை வயலில் இட்டால் கோரைப்புல் வராது.1 லிட்டர் வேப்ப எண்ணெயில், 3 கிலோ நுண்மணல் மற்றும் 3 கிலோ சாணியை 3 நாட்கள் ஈரம் காயாமல், ஈர சாக்கு கொண்டு போர்த்தி குவியலாக வைத்து, பின் 4ஆம் நாள் அதை 150 லிட்டர் நீரில் கலந்து தெளித்தால் அனைத்து வித சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுப்படுத்தலாம்.10 கிலோ காய்ந்த சாணத்தை தூளாக்கி அத்துடன் செங்கல் சூளை சாம்பல்  சேர்த்து, அதிகாலை வேளையில் தூவினால் பூச்சி நோய்களைக் கட்டுப்படுத்த முடியும்.



பூண்டானது எல்லாவித செடிகளில் ஏற்படும் பாக்டீரியா, பூஞ்சாணம் மற்றும் நூற்புழுவை எதிர்த்து திறமாக செயல்படக்கூடியது. அதை தனியாகவோ அல்லது வேம்பு பொருட்கள், மிளகாய், பெருங்காயம் மற்றவையோடு கலந்து பயன்படுத்தலாம்.

கரையான் தாக்கப்பட்ட பகுதிகளின் எருக்களை இலைச்சாற்றை பயன்படுத்தலாம்.வளமற்ற மண்ணாக இருந்தால் அப்பகுதி நிலங்களை எல்லாம் கூட்டாக செய்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும்.ஆறுக்கு அருகில் உள்ள நிலப்பகுதியில் குறைந்த மகசூலே கிடைக்கும்.வாய்க்கால் ஓரத்தில் இருக்கும் நன்செய் நிலத்திலும், மலை அடிவாரத்தில் இருக்கும் வறண்ட நிலத்தில் அதிக மகசூல் கிடைக்கும்.சரிவின் குறுக்கே வயல்களில் கல்தூண் அமைத்தால், மண் சரிவையும் ஈரப்பதத்தையும் காக்கலாம்.‘வெட்டிவேர்’ புல்லை மண் சரிவுக்கு குறுக்காகவோ அல்லது வயலைச்சுற்றி நட்டால் மண் அரிப்பை தடுக்கலாம்.வயல் வரப்புகளில் நிரந்தரமாக ஏதாவது தாவரங்களை வளர்த்து வந்தால் அதிக மண் அரிப்பைக் குறைக்கலாம்.புதிய தோட்டாக்கால்கள் பழைய நிலம் அதிக மகசூல் கிடைக்கும்.



தோட்டக்காலப் பயிரைக்காட்டிலும் பயிருக்கு அதிகக் கவனம் தேவை.தண்ணீர் தேங்கக்கூடிய வறண்ட பகுதி சாகுபடிக்கு ஏற்றதல்ல.மண் வகையே, சாகுபடி பயிரை தீர்மானம் செய்யும்.செம்மண் தொடர்ந்து பயிர் செய்ய ஏற்றது.செம்மண்ணை விட கரும்மண் அதிகமாக நீர் பிடித்து வைத்திருக்கும் திறன் உள்ளது.மணல் கலந்து மண் அநேக பயிர்கள் சாகுபடி செய்ய உகந்ததல்ல.அதிகமாக தொழு உரம் இட்டால் மண் நயம் கூடும்.குளத்து மண் இட்டால் மண் நயம் கூடும்.அங்கக உரம், அனங்கக உரம் இடுவது, மண் தன்மையைச் சார்ந்தது.மழை பெய்தவுடன் களை அதிகமாக முளைத்தால், அது நல்ல மண் வளத்தைக் கொண்டு உள்ளதையே காட்டும்.ஆடு தின்னாப்பாலை நிலத்தில் வளர்த்தால், அது குறைந்த மண் வளத்தையே காட்டும்.செம்மண்ணை கரும்மண் நிலத்திலோ இல்லை மாற்றியோ இட்டால் மண் வளம் அதிகரிக்கும்.

கோடைக்காலத்தில் ஆடுகிடையோ, மாட்டுக்கிடையோ அமர்த்தினால் மண் வளம் கூடும்.மழையில்லா வறண்ட பகுதிகளின் மண் வளத்தைக் காக்க, பயிறு வகைப் பயிர்களை கலப்பு பயிராகவோ, ஊடுபயிராகவோ பயிரிட வேண்டும்.மண் அரிப்பு தடுக்கவும் மண்வளத்தை மேம்படுத்தவும், மண் சரிவுப் பகுதியில் பழ மரங்களுக்கு இடையே கொழிஞ்சியை பயிரிடவேண்டும்.



‘நுணா’ மரம் இருந்தால், அதிக ஈரப்பதம் அம்மண்ணில் உள்ளதை அறியலாம்.கோடைக்காலத்தில், ஆழ உழவு செய்தால் மண் ஈரப்பதத்தை காக்கலாம்.மண்ணை நன்கு உழவு செய்து தூள் தூளாக்கினால், அதிக ஈரப்பதத்தை தக்க வைக்கலாம்.செம்மண் நிலத்தில் கரும்மண் குளத்து மண்ணை இட்டால் நீர்ப்பிடிப்பு தன்மையை செம்மண் பகுதியில் அதிகரிக்கலாம்.

சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு செடியைப் பயிரிட்டு, பூப்பதற்கு முன் மடக்கி உழுதால் மண்ணில் நீர் பிடிப்பு தன்மை அதிகரிக்கும்.எந்தவொரு நிலத்திற்கும், நாம் நடந்தால் நம் கால் தடம் பதியாமல் இருந்த அந்த சமயத்தில் நீர்ப்பாசனம் செய்தால் போதும்.

கிணற்றுக்கு அருகில் பூவரசு மரத்தை வளர்த்தால், நீரானது ஆவியாக மாறி வீணாவது தடுக்கப்படும்.

நன்செய் நிலத்தில், ‘ஆரை’ கீரைக் கிளையும், தோட்டக்கால் நிலத்தில் ‘அருகு’ புல்லும் இருந்தால் நல்ல மகசூல் கொடுக்கும்.

செம்மண் நிலத்தில் ‘அருகு’, ‘கரும்மண்’ நிலத்தில் ‘கோரையும்’ இருந்தால் அந்நிலம் நல்ல நிலம்.

களர் நிலத்தை சரி செய்ய சணப்புப் பயிரை விதைத்து அதை பூக்கும் பருவத்தில் மடக்கி உழுதால் போதும்.களர் நிலத்தை மேம்படுத்த தக்கைப்பூண்டை பயிரிட்டு, அது பூப்பதற்கு முன் மடக்கி உழவு செய்யவேண்டும்.களர் நிலத்தை சரிசெய்ய பிரண்டையை இடலாம்.களர்நிலத்தில் வேப்பந்தழை இட்டால் சரியாகும்.உப்புநிலத்தை சரிசெய்ய வேப்பங்கொட்டை மேல் தோலை இடலாம்.வேப்பம் புண்ணாக்கு இட்டால் உவர் தன்மை சரியாகும்.

பனை மரத்தின் ஓலையை சிறிய துண்டுகளாக நறுக்கி அதை அதிகளவு நிலத்தில் இட்டால் களர் தன்மை சரியாகிவிடும்.புங்கம் இலையையோ, புளியம்பழத்தின் மேற்தோலையோ இட்டால் களர் நிலம் நல்ல நிலமாக மாறும்.மட்கு உரத்துடன் தென்னை நார்க்கழிவை கலந்து இட்டால் களர் தன்மை மாறும். கரும்பாலை கழிவு, நாட்டுச் சர்க்கரை தயாரிக்கும் போது கிடைக்கும் கழிவு ஆகியவற்றை நிலத்தில் போட்டால் களர் தன்மை மாறும்.அரை நெல்லிக்காய் கிளைகளை கிணற்றில் இட்டால் உப்புத் தன்மையான நீர் நல்ல நீராக மாறும்.



Sunday 9 September 2018

தொல்லுயிர் கரைசல்

நுண்ணுயிர் கரைசல் என்பது ஜீவாமிர்தத்துக்கு தமிழ் பெயர் என்பது நமக்கு தெரியும். 
தொல்லுயிர் கரைசல் என்று ஒன்றும் உண்டு. அது என்னங்க?!

இது குறித்த செய்தி திரு சுந்தரராம ஐயர் சொல்ல கேட்டிருக்கிறேன்.

இதை உருவாக்கியவர் திரு நம்மாழ்வார் அவர்களின் மூத்த சகோதரர். 
இயற்கை இடுபொருள்களில் நேரடியாக பயிருக்கு பயன்படுவது இது ஒன்று தான். 
இதை தயாரிக்கும் முறையை திரு சுந்தரராம ஐயர் சொன்னபடி கொடுக்கிறேன்.

தயாரிப்பு முறை:
தேவையான பொருட்கள். 
1. புதிய சாணம் 5 கிலோ, 
2. நாட்டுசர்க்கரை 3/4 கிலோ, 
3. கடுக்காய் பொடி 25 கிராம்,
4, அதிமதுரம் 2 1/2 கிராம். 
இத்துடன் 50 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் ஒன்று.




டிரமில் சாணத்தை நீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளுங்கள். 
பின்னர் சர்க்கரையை சேர்த்துக கொள்ளுங்கள். 
கடுக்காய் பொடியையும், அதிமதுரப்பொடியையும் அதில் கலந்து பின் டிரம் வழியும் வரையில் நீர் நிரப்புங்கள்.
இது முக்கியம்.
பின்னர் மூடியைக்கொண்டு காற்று புகாவண்ணம் டைட்டாக மூடிவிடுங்கள். 
இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மூடியை திறந்து உள்ளே இருக்கும் மீத்தேன் வாயுவை வெளியேற்றி மீண்டும் மூடி வையுங்கள். 
10 நாட்கள் கழித்து மூடியை திறந்து பின் வேறொரு டிரம்மில் நன்றாக காற்று படும்படியாக மெதுவாக ஊற்றுங்கள். 
இப்போது தொல்லுயிர் கரைசல் தயார்.

இதை பாசனநீரில்கலந்து விடலாம். 1:10 என்ற விகிதத்தில் பயிர்கள் மீது தெளிக்கலாம். இது செய்த மறுநாளே பயிர்கள் நன்றாக பச்சை எடுத்து இருக்கும். 
இது ஒன்றே பயிருக்கு உடனடியாக உணவாக மாறும் என்று அவர் கூறினார். 
இது எப்படி உடனடியாக உணவாகிறது என்பதற்கான விளக்கமும் கொடுத்தார். 
அதன் சாரம் இதோ.

சாணத்தில் இருக்கும் நுண்ணுயிர்களில் சில காற்று இருந்தால் மட்டுமே உயிர் வாழ முடியும், அதுபோலவே சில நுண்ணுயிர்கள் காற்று இல்லாமல் இருந்தால்தான் உயிர் வாழும். இந்த அடிப்படையில் தான் தொல்லுயிர்கரைசல் தயாரிக்கப் படுகிறது. 
டிரம் வழியும் வரை நீர் நிரப்பி மூடிவைப்பதால் டிரம்மில் காற்று இருக்காது. 
இந்த பத்து நாட்களில் காற்று இல்லாமல் வாழ இயலாத நுண்ணுயிர்கள் மடிந்து அடுத்த வகை நுண்ணுயிர்களுக்கு உணவாகி விடும். பத்து நாட்கள் கழித்து டிரம்மில் உள்ள நுண்ணுயிர்கள் அனைத்துமே காற்றில்லாமல் உயிர் வாழக்கூடுயவைகள் மட்டுமே. 
இப்போது அதை வேறு டிரம்மில் காற்று படும்படியாக ஊற்றும் போது அவைகளையும் மடிந்து விடும். 
இதன் பின் டிரம்மில் இருப்பது நல்ல சத்தான கரைசல் மட்டுமே.
அதனால் தான் இது உடனடியாக பயிருக்கு பயன்படுகிறது. 
இது தான் நான் அவர் உரையிலிருந்து புரிந்து கொண்டது.
இது உங்களுக்கும் பயன்படக்கூடும். 
வாழ்த்துகள்.