Thursday, 5 December 2013

கறவைமாடுகள் வளர்ப்பில் இனப்பெருக்க மேலாண்மை

நாம் செய்யும் மிகப்பெரிய தவறு மாடுகள் பால் கொடுக்கும் வரைக்கும் அதனுடைய
சினை பற்றியோ, சினை பருவ அறிகுறிகளை பற்றியோ, சினை ஆக்குவதற்கு தேவையான
பராமரிப்பு முறைகளை பற்றியோ கண்டுகொள்வதே இல்லை. இதுவே கறவை மாடு வளர்ப்பின்
வீழ்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக அமைகிறது.
உங்கள் மாடுகளை கன்று ஈன்ற மூன்று மாதத்திற்குள் சினை ஆக்கினால் மட்டுமே
உங்களால் கறவை மாடு வளர்ப்பில் அல்லது பால் பண்ணை தொழிலில் மிக சிறந்த லாபத்தை
காண முடியும். கன்று ஈன்ற இரண்டாவது மாதத்திற்குள் மாடுகள் சினை பருவத்திற்கு
வந்துவிடும். மேலும் மாடுகள் ஒவ்வொரு 21 நாட்களுக்கு ஒருமுறை சினை
பருவத்திற்கு வரும். மாடுகளை சினையாக்க ஒவ்வொரு சினை பருவமும் மிக முக்கியமான
ஒன்றாகும். இவ்வாறு மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் மாடுகளில் கீழ்வரும்
அறிகுறிகள் தென்படும்.
* மாடுகள் கத்திக்கொண்டே இருக்கும்.
* மற்றொரு மாட்டின் மீது தாவும்.
* கண்ணாடி நிறத்தில், கெட்டியாக திரவம் அறையிலிருந்து வழிந்தோடும்.
* தினமும் கொடுக்கும் பாலைவிட, பாலின் அளவு சற்று குறைவாகவே இருக்கும்.
* மிகுந்த சுறுசுறுப்பாக இருக்கும்.
மாடுகள் வளர்ப்போர் மேற்சொன்ன சினை பருவ அறிகுறிகளை நன்கு தெளிவுற தெரிந்து
வைத்துக்கொள்ள வேண்டும்.
கீழ்வருவனவற்றை கடைபிடிப்போம்! கறவை வளர்ப்பில் வெற்றி பெறுவோம்!
* கன்று ஈன்று 7-10 நாட்கள் கழித்து மாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்து
கொடுக்க வேண்டும்.
* கன்று ஈன்று 10-15 நாட்கள் கழித்து மாடுகளுக்கு கால்சியம் கால்நடை
மருத்துவர் மூலம் போட்டுக்கொள்ள வேண்டும்.
* கன்று ஈன்ற 30 நாட்கள் கழித்து தாது உப்பு கலவை (மினரல் மிக்சர்) 30 கிராம்
முதல் 50 கிராம் வரை இரண்டு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.
* பசுந்தீவனங்கள் கிடைக்கப் பெறாத மாடுகளுக்கு வைட்டமின் ஏ (உயிர்ச்சத்து ஏ)
ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் மாடுகள் சினை
பருவத்திற்கு முறையாகவும், தகுந்த (21 நாட்கள்) இடைவெளியிலும் வருமாறு
செய்யலாம். மேலும் கன்று ஈனும் சமயத்தில் ஈன்ற கன்றுகள் குருட்டு தன்மை
இல்லாதவாறும் இருக்க உதவி செய்யும்.
* மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் கால்நடை மருத்துவரை அணுகி காலை, மாலை
இரு வேளைகளிலும் சினை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். முதல் சினை ஊசிக்கும்
இரண்டாவது சினை ஊசிக்கும் 8 மணி நேர இடைவெளி இருத்தல் அவசியம். ஒரே நேரங்களில்
இரண்டு சினை ஊசி போட்டுக் கொள்வதைவிட மேற்சொன்ன முறையில் சினை ஊசி போடும்போது
மாடுகள் சினை ஆவதற்கான வாய்ப்பு அதிகமாக பெறுகின்றன.
* மேலும் ஒரு சில மாடுகள் அவற்றின் கன்று ஈனும் காலத்தில் நஞ்சு கொடியை வெளியே
தள்ளுவதில்லை. அப்படிப்பட்ட மாடுகளில் கால்நடை மருத்துவர்களால் நஞ்சுகொடி
கைகளினால் மாடுகளின் கருப்பையிலிருந்து வெளியே எடுக்கப்படுகிறது. இத்தகைய
மாடுகளில்தான் சினையாக்குவதில் சிரமம் ஏற்படுகின்றது அல்லது காலம் தாழ்த்திய
சினை ஏற்படுகின்றது. கீழ்வருவனவற்றை கடைபிடிப்பதன் மூலம் காலம் தாழ்த்திய
சினையை தவிர்க்கலாம்.
1. நஞ்சு கொடி எடுக்கப்பட்ட மூன்று நாட்களுக்கு தொடர்ந்து கால்நடை
மருத்துவரின் சிகிச்சை மாடுகளுக்கு அவசியம்.
2. கன்று ஈன்ற 30வது நாட்களில் இருந்து மினரல் மிக்சர் (30 முதல் 50 கிராம்
வரை) 2 மாதங்களுக்கு கொடுக்க வேண்டும்.
மாடுகள் சினை பருவத்திற்கு வந்தவுடன் முதல் பருவத்தில் சினை ஊசி போடுவதை
கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக கால்நடை மருத்துவரை அணுகி
கருப்பை எதிருயிரி மருந்து (யூடிரின் ஆன்டி பயாடிக்) கொண்டு கருப்பையை சுத்தம்
செய்ய வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முறை கருப்பையை சுத்தம் செய்தபின்னர்
அடுத்து வரும் சினை பருவத்தில் மாடுகளுக்கு சினை ஊசி போட்டுக்கொள்ள வேண்டும்.
த.முத்துராமலிங்கம், த.பிரகாஷ் மற்றும் சபாபதி,
கால்நடை மருத்துவ அறிவியல் துறை, கோவை.

No comments:

Post a Comment