Tuesday 25 November 2014

மாடுகளுக்கு வரும் மடிநோய் - நோய் இன்றி பாதுகாக்கலாம்!

மாடுகளுக்கு வரும் மடிநோய்க்கு மருந்து கண்டுபிடித்து, ஜனாதிபதி விருது பெற்ற சேலம் மாவட்ட விவசாயி கோவிந்தன்: கடந்த, 30 ஆண்டுகளாக பால் விற்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். என்னிடம் இரண்டு பசுக்கள் இருக்கின்றன. எங்க அப்பா, தாத்தா எல்லாருமே பால் கறக்கும் தொழிலில் ஈடுபட்டவர்கள். அதனால், பசுக்களை எப்படி அணுக வேண்டும் என, சிறு வயதிலேயே கற்றுக் கொண்டேன்.
பொதுவாக, மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு, எழுந்திருக்க முடியாமல் இருக்கும் குந்துநோய், பறவைகள் கொத்தினால் வரும் புண், கால்களில் ஏற்படும் புண் போன்ற பல நோய்கள் வந்தாலும், மாடுகளை அதிகமா தாக்கக்கூடியது மடிநோய் தான். இந்த நோய் பெரும்பாலும், அதிகமாக பால் கொடுக்கக்கூடிய, மடி பெரிதாக உள்ள மாடுகளைத் தான் குறிவைத்து தாக்குகிறது.
இந்த நோய் எதனால் வருகிறது என்பது தெரியவில்லை. நாம் சாப்பிடும் உளுந்து, சாப்பாடு போன்ற உணவுகளை, பசுக்களுக்குக் கொடுத்தாலும் மடிநோய் வரும். மடிநோய் வந்தாலே, பசுவோட நான்கு காம்புகளும் வெவ்வேறு விதமாக மாறிவிடும்.
ஒரு காம்பில் பால் வரும்; இன்னொரு காம்பு வீக்கமாக இருக்கும்; மற்றொரு காம்பில், ரோஸ் கலரில் பால் வரும்; நாலாவது காம்பில் ரத்தமே வர ஆரம்பிச்சிடும். மடியும் வீங்கிக் காணப்படும். இதெல்லாம் மடிநோய்க்கான அறிகுறிகள். தினமும், 60 பசுக்களுக்கு மேல பால் கறப்பதால், பசுக்கள் என்னென்ன நோய்களால் பாதிக்கப்படும் என்பதை தெரிந்து கொண்டுள்ளேன். மடிநோய்க்கு மருந்து கண்டு பிடிக்க முடிவு செய்தேன். நான் கண்டுபிடித்த மருத்துக்கு, பணமே செலவாகாது. சுற்றுப்புறங்களில் முளைக்கும் வேலிப்பறித்தழை, எருக்கம்பால், சுண்ணாம்பு இந்த மூன்றையும் கசக்கி, காலை, மாலை என, இரண்டு வேளை மாட்டின் மடியில் தடவி வந்தாலே போதும்.
வீக்கம் குறைய ஆரம்பித்து விடும். அந்த வீக்கத்தில் கெட்ட பால்கள் தங்கியிருக்கும். அதை மூன்று நாட்களுக்கு கறந்து சுத்தப்படுத்திய பின், வழக்கம் போல பால் கறக்கலாம். இந்த இயற்கை மருந்தை, கடந்த அஞ்சு வருஷத்துக்கு மேலாக, சேலம், ஈரோடு, நாமக்கல் போன்ற மாவட்டங்களிலிருந்தும் விவசாயிகள் இலவசமாகவே வாங்கிட்டுப் போய் பயன் படுத்துகின்றனர்.
அதுமட்டுமல்ல, செல்போனில் அழைத்தாலும் நேரில் சென்று, மருந்தை எப்படி மாட்டுக்கு தடவணும், மடிநோயை எப்படிக் குணப்படுத்தலாம் என்ற ஆலோசனையையும் சொல்லி, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். இதுவரை, 500க்கும் மேற்பட்ட மாடுகளை, என் மருந்தால் குணப்
படுத்தியிருக்கேன்.
மாடுகளை, விஷ ஜந்துக்கள் கடித்தாலும், அந்தந்தக் கடிக்கான மூலிகைச் செடிகள் என்னிடம் உள்ளன. ஒரு போன் பண்ணிக் கேட்டாலே போதும். என்ன மருந்து கொடுக்க வேண்டும் என, போனிலேயே சொல்லிடுவேன்.தொடர்புக்கு: 93642 22098

No comments:

Post a Comment