Friday, 12 December 2014

பீஜ அமிர்தம் ( விதை நேர்த்தி )

( வரும்முன் காப்பதற்காக நாம் நமது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுகிறோம், நமது கால்நடைகளுக்கும் தடுப்பு ஊசி போடுகிறோம். அதுபோல் நமது பயிர்களுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். )
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உழவர்கள் பசுஞ்சாணம், கோமியம், வரப்பு அல்லது வயல் மண்ணால் விதைகளை விதை நேர்த்தி செய்வர். மகாராட்டிரத்தில் 5௦-6௦ ஆண்டுகளுக்கு முன்பே பருத்தி விதைகளை விதைநேர்த்தி செய்ய சிறிது பசுஞ்சாணம், கோமியம், முன்பு பருத்தி விளைந்த மண் ஆகியவற்றை பயன்படுத்தினர். இது பாரம்பரிய முறையும், முற்றிலும் அறிவியல் முறையும் ஆகும். 
ஆனால், வேளாண் பல்கலைகள் தலை காட்டிய பின்னால், வேளாண் துறையில் இருந்த நல்லவைகள் எல்லாம் அழிக்கப்பட்டு இயற்கைக்கு மாறானவையும், அறிவியலுக்கு மிக எதிரானவையும் உழவர் மீது நேரடியாவும், நகர்புற நுகர்வோர் மீது மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இப்போதோ எல்லா விசயங்களையும் கொண்டு உங்களை விதை நேர்த்தி செய்யசொல்கின்றன. நீங்கள் விஷமான பூஞ்சான கொல்லி அல்லது, மருந்துகளை விதை நேர்த்தியில் பயன்படுத்தினால், பயன்மிக்க செயல்விளைவுகளை ஏற்படுத்தும் நம் நண்பர்களான ( மண்ணிலுள்ள ) நுண்ணுயிர்கள் அழிந்து போகும். இந்த விஷமிக்க வேதிபொருட்கள் மூலம் நேர்த்தி செய்யப்படும் விதை முளைத்து வரும் பொழுது, இந்த விஷங்கள் வேர்கள் மூலம் மண்நீர் கரைசலில் இருந்து உறிஞ்சப்பட்டு தாவர உடல் உறுப்புகளில் சேரும்.அதாவது காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றில் கலக்கும். இவற்றை நாம் உண்ண, இந்த விஷங்கள் நமது உடலில் சேர்ந்து எலும்புருக்கி, நீரழிவு,புற்று, நெஞ்சக நோய்களை உண்டு பண்ணும். 
அது போலவே, உழவர்கள் விதைநேர்த்திக்காக பூஞ்சான கொல்லிகளையும் மருந்துகளையும் வாங்கும் பொழுது பெரும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒத்தைக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்து பூஞ்சான கொல்லிகளை வாங்குகிறார்கள். இந்த அவலத்தை நாம் உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக நாம் பழைய உத்திகளை கையாள தொடங்க வேண்டும். அப்பழம் பெரும் உத்திகளில் நான் கூடுதலாக சில சோதனைகள் செய்துள்ளேன். ஏனெனில், இங்கு நிலமே விஷகாடாகி இருப்பதால் அவை அவசியமாகின்றன. என்னுடைய ஆய்வு சோதனைகளுக்கும் பிறகு இறுதியாக விதைநேர்த்தி செய்முறை, உழவர்களிடம் கையளிக்க ஆயத்தமாக உள்ளது. அதுதான் ‘ பீஜாமிர்தம்’ அதை எப்படி தயாரிப்பது. 
பீஜ அமிர்தம் தயாரிப்பு, அதன் உள்ளடக்கங்கள்:
1. நீர் 2௦ லிட்டர் 
2. நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ 
3. நாட்டு பசுவின் கோமியம் 5 லிட்டர் 
4. வரப்பு ( வயல் ) மண் கையளவு 
5. சுண்ணாம்பு 5௦ கிராம் 
2௦ லிட்டர் நீரை எடுக்கவும், 5 கிலோ சாணத்தை துணியில் சிறு முடிப்பாக முடியவும். 2௦ லிட்டர் நீரில் இரவு முழுவதும் துணி மூட்டையை தொங்க விடவும் ( 12 மணி நேரம் ) ஒரு லிட்டர் நீரை எடுத்து அதில் 5௦ கிராம் சுண்ணாம்பை கலந்து ஓர் இரவுக்கு அப்படியே வைத்து விடவும். மறுநாள் காலையில் சாணி மூட்டையை நீரில் மும்முறை தொடர்ந்து குலுக்கி சாணிப்பால் முழுவதும் நீரில் இறங்கும்படி செய்யவும். கையளவு மண்ணை இக்கரைசலில் இட்டு நன்கு கலக்கவும். கோமியம் 5 லிட்டர் எடுத்து, மேற்படி கரைசலில் சுண்ணாம்பு நீரையும் சேர்த்து கடிகார சுற்றில் கலக்கவும். விதைநேர்த்திக்கான பீஜாமிர்தம் இப்போது தயாராகிவிட்டது.
நெல் விதைகளை எடுக்கவும், தேவையான நீரை எடுத்து அதில் உப்பை கலந்து, விதைகளை அந்நீரிலிடவும். ஒரு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். சிதைந்தவையும், பூச்சி அரித்த விதைகள் நீரின் மேல் மிதக்கும். அவற்றை எடுத்து மண் மூடாக்காக பயன்படுத்தலாம். உப்பு நீரில் மூழ்கி இருக்கும் சிறந்த தரமான மீதி விதைகளை நீரிலிருந்து எடுக்கவும். அவற்றை நிழலில் உலர்த்தி பின், பீஜாமிர்தத்தில் இந்த விதைகளை நேர்த்தி செய்து தூவவும். தூவும் எந்த விதைகளையும் பீஜாமிர்தம் கலந்து கையில் நன்கு கலக்கி, நன்கு உலர்ந்தபின் விதைக்கவும்.
நீங்கள் கரும்பு விதைகளையோ, வாழை விதைகளையோ, இஞ்சியையோ, மஞ்சளையோ 2௦ லிட்டர் நீருக்கு பதிலாக 40 லிட்டர் நீரை கொண்ட பீஜாமிர்தம் கரைசலை எடுத்து விதைநேர்த்தி செய்யலாம். மீதி செயல்முறைகள் பீஜாமிர்தம் செய்ய மேற்கொண்ட அதே செயல் முறைகளே. கரும்பு அல்லது வாழை அல்லது இஞ்சி அல்லது மஞ்சள் விதைகளை எடுத்து பீஜாமிர்தத்தில் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அதிலிருந்து எடுத்து வயலில் நடவும். நெல், தக்காளி, கத்திரி, வெங்காயம், காளிபூ, கோசு, மிளகாய் அல்லது எந்த வகையான நாற்றையும் கையிலெடுத்து, அவற்றின் வேர்களை பீஜாமிர்தத்தில் நனைத்து நடவும். நீங்கள் வெட்டி நாடும் எந்த தாவரத்தையும் நட விரும்பினால் அது நன்கு முளைக்க, வெட்டிய துண்டை பீஜாமிர்தத்தில் நனைத்து வயலில் நடவும். 
நீங்கள் இருபுற வெடிகனிப் பயிர்களான பசிப்பயிறு, உளுந்து, மொச்சை, தட்டை, நிலக்கடலை போன்றவற்றை பீஜாமிர்தத்தில் கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து, விதை நேர்த்தி செய்து உலர்த்தி விதைக்கவும். இருபுற வெடிகனி விதைகளை எக்காரணம் கொண்டும் கைகளால் தேய்க்க கூடாது. அவ்வாறு செய்தால் மேல்தோல் கழன்று முளைப்பு திறன் குன்றும். ’’ பீஜாமிர்தம் விதைகளை தீமை பயக்கும் பூஞ்சான பாக்டீரியாக்கள், நோய் ஊக்கிகள், போன்றவற்றிலிருந்தும், அதே சமயம் பயிர்களை மண்ணில் உருவாகும் நோய்களிலிருந்தும் காக்கிறது. பீஜாமிர்தத்தில் ஆர்மோன்களும், ஆல்கலைடுகளும் உள்ளன. அவை முளைப்பு திறனை கூட்டும். கருவில் முலைப்புக்கு எதிரான வேதிபோருட்களை நடுநிலலைப்படுத்தும். நாற்றுக்களுக்கு தற்காப்பு திறனை தரும் ‘’ --- சுபாஷ் பாலேக்கர்.

No comments:

Post a Comment