Sunday, 25 January 2015

நோய்களும் தீர்வுகளும்! - டாக்டர் புண்ணியமூர்த்தி

வெள்ளாடுகளுக்கு வரும் முக்கியமான நோய்களுக்கான, இயற்கை முறை வைத்தியம் பற்றி தஞ்சாவூர், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக மரபுசார் மூலிகை மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் டாக்டர் புண்ணியமூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே...
குடற்புழு நீக்கம்!
2 அங்குல நீள சோற்றுக் கற்றாழையில் முள்ளை நீக்கி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, அப்படியே சாப்பிடக் கொடுக்க வேண்டும். ஆட்டுக் குட்டிகளுக்கு ஓர் அங்குலம் போதுமானது. மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
பேன், உண்ணி நீங்க!
50 கிராம் வசம்பை தண்ணீரில் 8 மணிநேரம் ஊற வைத்து நசுக்கி... அதோடு நான்கு ஓமவள்ளி இலை, தலா ஒரு கைப்பிடி தும்பை, வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து நன்றாக அரைத்து, ஆட்டின் மேல் பூசி நன்கு காயவிட வேண்டும். பிறகு, தேங்காய் நாரால் பிரஷ் செய்து கழுவி விட வேண்டும். மழைக்காலம், ஈரப்பதமான சூழல்களில் இதைத் தவிர்க்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டுமே இதைப் பயன்படுத்த வேண்டும். இந்த அளவு ஓர் ஆட்டுக்கானது.
வயிறு உப்புசம்!
வெற்றிலை-3, தரமான மிளகு-10, பெருங்காயம்-5 கிராம், இஞ்சி-50 கிராம், சீரகம் அரை ஸ்பூன் ஆகியவற்றை நன்றாக அரைத்து, நாட்டுச் சர்க்கரை-50 கிராம் சேர்த்துப் பிசைந்து சிறு உருண்டைகளாகப் பிடித்து... இரண்டு வேளை சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது ஓர் ஆட்டுக்கான அளவு.  
கோமாரி நோய்!
தலா ஒரு ஸ்பூன் மிளகு, சீரகம், வெந்தயம் ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து... அதோடு ஒரு ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு பூண்டு சேர்த்து அரைக்க வேண்டும். அரை மூடி தேங்காயைத் தனியாகத் துருவி அரைத்த கலவையோடு சேர்த்து, 50 கிராம் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து சாப்பிடக் கொடுக்க வேண்டும். இது 5 ஆடுகளுக்கான அளவு. நோய் வராமல் தடுக்க ஒரு முறை கொடுத்தால் போதுமானது. நோய் வந்து விட்டதென்றால் தொடர்ந்து 5 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
சளித்தொல்லை!
துளசி, முருங்கை இலை தலா ஒரு கைப்பிடி; ஆடாதொடா, தூதுவளை தலா ஒரு இலை; மஞ்சள், மிளகு, சீரகம் தலா ஒரு ஸ்பூன் ஆகியவற்றைக் அரைத்து... அதோடு 50 கிராம் நாட்டுச் சர்க்கரை சேர்த்து சாப்பிட வைக்க வேண்டும். ஒரு நாளுக்கு ஒரு வேளை என இரண்டு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இந்த அளவு 5 ஆடுகளுக்கானது.
தொடர்புக்கு: டாக்டர்.புண்ணியமூர்த்தி, செல்போன்: 9842455833
நன்றி: பசுமை விகடன்

No comments:

Post a Comment