Tuesday, 23 December 2014

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள்.

அந்தக் காலங்களில் வீட்டுக்கு வீடு தாத்தா, பாட்டிகள் இருப்பார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு எந்த நோய் என்றாலும் அதற்கான மூலிகைகளைக் கொண்டு கை வைத்தியம் செய்தே குணப்படுத்திவிடுவார்கள். ஆனால், இன்று அநேக வீடுகளில் தாத்தா பாட்டிகளே இல்லை. பணம், வேலை என்று பிள்ளைகள் நகர வாழ்க்கையைத் தேடிச் சென்று விட்டதால் தாத்தா, பாட்டிகளின் முக்கியத்துவம் இன்றைய குழந்தைகளுக்கு தெரியாமல் போய்விட்டது.
இன்று 60 சதவீத குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பாசம், அரவணைப்பு கிடைப்பதில்லை. சின்னத் தும்மல், தலைவலி வந்தால் கூட இன்று உடனே டாக்டரிடம் தூக்கிச் சென்று விடுகிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் தலைவலி முதல் பிரசவம் வரை வீடுகளிலேயே கை வைத்தியத்தால் பார்த்திருக்கின்றனர். வீட்டில் வளரும் மூலிகைகளைப் பறித்து உரல் அல்லது அம்மியில் வைத்து அரைத்து கசாயம் போட்டு கொடுக்க இன்று பாட்டிமார்கள் இல்லை. கஷாயம் குடிக்க மறுக்கும் பேரனை ஓடிப் போய் பிடித்து மடியில் உட்காரவைக்க தாத்தாக்களும் இல்லை. ஆனாலும், தாத்தா, பாட்டிகள் இல்லாத குறையைப் போக்க மூலிகை இருக்கிறது நம்மிடம்.
வீட்டில் இருக்க வேண்டிய 15 மூலிகைகள், அவற்றின் பயன்பாடுகள் குறித்து நெல்லை மாவட்டம், பாபநாசத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராசு விளக்குகிறார். “பெரும்பான்மையான வீடுகளில் மூலிகை வளர்ப்பதை விட்டுவிட்டு அழகுக்காக மலர்ச் செடிகளை வளர்த்து வருகின்றனர். ஒரு வீட்டில் 15 மூலிகைகள் எப்போதும் இருக்க வேண்டும். அவை என்னவென்றால் துளசி, தூதுவளை,சோற்றுக்கற்றாழை, மஞ்சள் கரிசாலங்கண்ணி, பொன்னாங்கண்ணி, நேத்திரப்பூண்டு, நிலவேம்பு, பூலாங்கிழங்கு, ஓமவள்ளி, அருகம்புல், பூனை மீசை, ஆடாதொடை, நொச்சி, தழுதாழை, கழற்ச்சி ஆகியவைதான் இந்த மூலிகைகள். இந்த மூலிகைகள் ஒவ்வொன்றையும் எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
1. துளசி
துளசியுடன் மிளகு, வெற்றிலை மற்றும் வேம்பு பட்டை ஆகியவற்றை சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையை புட்டு போல அவித்து, இடித்து, பிளிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் சளி குணமாகும். துளசி இலையை சாதரணமாக மென்றுத் தின்றால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு, பசியும் அதிகரிக்கும்.
2. தூதுவளை
தூதுவளையுடன் மிளகு சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் வறட்டு இருமல் குறையும். தூதுவளை பழத்தை வத்தலாக காயவைத்து, வதக்கி சாப்பிட்டால் கண் குறைபாடுகள் நீங்கும். தூதுவளையில் கால்சியம் சத்துக்கள் அதிகமுள்ளதால் எலும்பையும், பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையுடன் பருப்பு மற்றும் நெய் சேர்த்து சமைத்து 48 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதன் முள்செடி, தண்டு, இலை, வேர் ஆகியவற்றை நிழலில் 5 நாட்கள் காயவைத்து பொடி செய்து தேன் அல்லது பாலில் கலந்து சாப்பிட ஆஸ்துமா குறையும். காதுமந்தம், நமச்சல், பெருவயிறு மந்தம் ஆகியவற்றிற்கும், மூக்கில் நீர்வடிதல், வாயில் அதிக நீர் சுரப்பு, பல் ஈறுகளில் நீர்சுரத்தல், சூலை நோய் ஆகியவற்றிற்கும் தூதுவளை கீரை சிறந்தது.
3. சோற்றுக்கற்றாழை
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்துவதால் சோற்றுக்கற்றாழைக்கு குமரிகற்றாழை என்று வேறு பெயரும் உண்டு.சோற்றுக்கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கிவிட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர்விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1 கிலோ கருப்பட்டியைத் தட்டிப்போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டி தூள் கரைந்து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் கால் கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வா பதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய மூன்று வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள், நீர் எரிச்சல், மாதவிடாய்க் கோளாறுகள்,பெண்மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண்களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
4. மஞ்சள் கரிசாலாங்கண்ணி
ஞானத்திற்குரிய மூலிகை இது. இதைக் கீரையாக சாப்பிட்டால் கல்லீரல் வலுப்படும்.
5. பொன்னாங்கண்ணி
வயல்வெளிகளில் கொடுப்பை என்ற பெயரில் விளையும் மூலிகைதான் பொன்னாங்கன்னி கீரை. 'பொன் ஆகும் காண் நீ' என்பதன் சுருக்கமே பொன்னாங்கண்ணி என்பதாகும். இதை கீரையாக சமைத்து உப்பு சேர்க்காமல் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை உரி பெற்று கூர்மையாகும்.
6. நேத்திரப்பூண்டு
இதற்கு நாலிலை குருத்து, அருந்தலைப் பொருத்தி ஆகிய வேறு பெயர்களும் உண்டு. இதன் இலைகளை தேங்காய் எண்ணையில் ஊற வைத்து வெயிலில் 5 நாட்கள் வைத்து வடிகட்டி கண்களில் இரண்டு சொட்டுகள் விட்டு வந்தால் தொடக்கக் கால கண்புரை நோய் தடுக்கப்படும்.
7. நிலவேம்பு
நிலவேம்பிற்கு சிறியாநங்கை என்ற பெயரும் உண்டு. பார்ப்பதற்கு மிளகாய்ச்செடி போன்று இருக்கும். நிலவேம்பு இலைகளை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக் கொண்டு சிறிது மிளகு சேர்த்து சாப்பிட்டால் விஷக்கடிகள் இறங்கும். நிலவேம்பு இலைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து பொடி செய்து 30 கிராம் பொடியுடன் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து அதை கால் லிட்டர் அளவுக்கு வற்ற வைத்து கஷாயமாக குடித்தால் தீராத காய்ச்சலும் தீரும். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குடும்பத்திலுள்ள அனைவருமே மாலையில் ஒரு கப் கஷாயம் குடிக்கலாம். இதற்கு ஞாயிற்றுக்கிழமை கஷாயம் என்றே பெயர் உண்டு.
8. பூலாங்கிழங்கு
கிச்சிலி கிழங்கு என்ற பெயரில் கடைகளில் கிடைக்கும். மஞ்சளுடன் சேர்த்து அரைத்து பூசி குளித்தால் உடல் நாற்றம், வியர்வை நாற்றம் இருக்காது. குழந்தைகளை குளிப்பாட்ட ஏற்றது.
9. ஓமவள்ளி
கற்பூரவல்லி என்ற பெயரும் உண்டு. இதன் தண்டு, இலைச்சாறை காலை, மாலை குடித்து வந்தால் தொண்டை சதை வளர்ச்சி குணமாகும். இதன் பருமனான இலைகளை வாழைக்காய் பஜ்ஜி போல பஜ்ஜி மாவில் கலந்து பஜ்ஜியாக சுட்டு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
10. அருகம்புல்
அருகம்புல், வெற்றிலை, மிளகு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வருவதோடு ரத்த ஓட்டமும் சீராகும். தோல் நோய்களும் குணமடையும். இவையெல்லாம் தொட்டிகளில் வைத்து வளர்க்க வேண்டியவை.
11. ஆடாதொடை
எல்லா இருமல் மருந்துகளும் ஆடாதொடையிலிருந்துதான் தயாரிக்கப்படுகின்றன. 100 கிராம் ஆடாதொடையை அரை லிட்டர் தண்ணீருடன் சேர்த்து காய்ச்சி 125 மில்லியாக வற்ற வைத்து வடிகட்டி அதனுடன் 100 கிராம் வெல்லத்தை போட்டு மீண்டும் அடுப்பேற்றி பாகுபதத்தில் இறக்கி குழந்தகளுக்கு கொடுத்தால் இருமல் குணமாகும். பேருகால கர்ப்பிணிகள் 8வது மாதம் முதல் இதன் வேரை கஷாயம் செய்து தினமும் குடித்து வந்தால் சுகப்பிரசவமாவது உறுதி. ஆடாதொடை இலையை நிழலில் காயவைத்து, பொடி செய்து காலை, மாலை பாலில் சேர்த்து குடித்து வந்தால் காரணமில்லாமல் வரும் இரத்த அழுத்தம், படபடப்பு குறையும்.
12. பூனை மீசை மற்றும் விஷநாராயணி
இவை இரண்டுமே நமது நாட்டு மூலிகையல்ல. இதன் பூக்கள் பார்ப்பதற்கு பூனை மீசை பேன்று இருக்கும். இதன் இலைகளுடன், மிளகு, பூண்டு ஆகியவற்றை அரைத்து நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, மாலை உணவுக்குப்பின் சாப்பிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் சிறுநீரக கோளாறுகளுக்கும், உப்புநீர் நோய்க்கும் உகந்தது.
13. நொச்சி
நீல நொச்சி, கரு நொச்சி, வெள்ளை நொச்சி என பல வகை நொச்சிகள் உள்ளது. ஆனால், எல்லவற்றிற்குமான மருத்துவ குணம் ஒன்றுதான். நொச்சி இலை, மஞ்சள் சேர்த்து ஆவி பிடிக்க எல்லா தலைவலியும் குறையும் அல்லது நொச்சி இலைகளைப் பறித்து நிழலில் மூன்று நாட்கள் உலர்த்தி தலையணை உறைக்குள் இந்த இலைகளைப் போட்டு நிரப்பி தூங்கினால் ஒற்றைத் தலைவலி குறையும். தலைவலி மாத்திரை, தலைவலி தைலம் என எதுவுமே தேவையில்லை.
14. தழுதாழை
தழுதாழையை வாதமடக்கி இலை என்றும் கூறுவார்கள். இந்த இலையை வெந்நீரில் போட்டு ஆவி பிடித்தால் உடல்வலி குறையும். மூட்டு வலி, மூட்டு வீக்கம் உள்ள இடத்தில் இந்த இலைகளை வைத்து கட்டினால் வலி குறையும். ஒரு செடி வைத்தாலே போதும். இதன் வேர்கள் வேகமாக பரவி பக்கக் கன்றுகள் அதிகம் முளைக்கும்.
15. கழற்ச்சி
இதன் காய் பல வருடங்களுக்கு முன்பு விளையாட்டுப் பொருளாகவும், தராசுகளில் எடைக்கல்லாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் விதைப் பருப்பை மிளகு சேர்த்து பொடியாக செய்து சாப்பிட்டு வந்தால் விதை வீக்கம் குணமாகும். இதன் இலையை விளக்கெண்ணெயில் போட்டு வதக்கி விதைப்பையில் கட்டினாலும் வீக்கம் குறையும்'' என்றார்.

Friday, 12 December 2014

நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவை என்னென்ன ?

நாட்டுப்பசுவின் குடலில் அடங்கி உள்ளவை என்னென்ன ? (இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள் மற்றும் இயற்கைக்கு மாறவிரும்பும் விவசாயிகள் அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டிய விஷயம்)
பசுவின் குடலில், தொடர்ந்து நல்ல எதிர்உயிர் முறிகள் உருவாகின்றன. இவை, பசு வெளியிடும் பால், சாணி, மூத்திரம் போன்றவகைகளுக்கு வலிமைதரும் மிக முக்கிய பொருட்களாகிவிடும். இந்த நல்லா எதிர் முறி உருவாக்கங்களுக்கு, சில பாக்டிரியா சிற்றினங்கள் பொறுப்பு உடையவைகளாக உள்ளன. லேக்டோ பேசிலஸ், பயோஃபீடோ பாக்டிரியம், ஸ்டீரெப்டோ காக்கஸ், எண்ட்ரோ காக்கஸ், லீயுகான்ஸ்டக், பிடியோகாக்கஸ், ஈஸ்ட், கல்சர்கள், அஸ்பர் ஜின்னஸ் போன்ற பக்டீரியங்களாகும். 
பசுவின் குடலில், நுண்ணுயிர்கள் சிறப்பான குடல் சூழல் சமநிலையை உருவாகுகின்றன. நிலையான நுண்ணுயிர்கள், நிலையையற்ற நுண்ணுயிர்கள், உமிழ்நீர், மிடற்றுச்சுரப்பு, கனையச்சுரப்பு கல்லீரல், முன்சிறுகுடல் சுரப்புகள், வெளியேறு கரைசல்கள், யூரியா, நிலையான புரதங்கள் போன்றவைகலும், குடல் அமைவில் கலந்துள்ள மீதி எண்ணற்ற பொருட்களும் உள்ளடங்கி உள்ளன. 
அது போன்றே நாட்டு பசுவின் குடலிலும் செயல்பாடுமிக்க நுண்உயிர் குடியிருப்புகள் பல்கி உள்ளன. அவை உடம்பில் நோய் தடுப்பு ஆற்றலை உருவாக்குபவை. இந்த நுண் உயிர்களில் லாக்டிக் அமில பாக்டீரியாவும், லேக்டோ அமில பாக்டீரியாவும் மிக முக்கியமானவையாகும். எல்லா நுண் உயிர்களும் எதிர்ப்பாற்றல் பொருட்களான, தொல்லை தரும் நொதிகள், அமிலங்கள், கணையசுரப்பு, பித்தசுரப்பு இவற்றில் துடிப்புடன் இருக்கும். இது பசுவின் குடலின் தனித்தன்மையாகும்.
நீங்கள் பசுமாட்டுக் காலண்டரைப் பார்த்தால், அதன் உடலினுள் முப்பது முக்கோடி தேவர்கள் இருப்பதாக எழுதப்பட்டிருக்கும் உண்மையில் அவர்கள் தேவர் அல்லர். அவை, முப்பத்துமுக்கோடி முயற்சிமிக்க நன்மை தரும் நுண்ணுயிர்களில் நைட்ரஜனை நிலைப்படுத்தும் நுண் உயிர்கள், ரைசோபியம், அசிடோ பேக்டர், அசோஸ் பயிரில்லம், பீஜர்யின்கியா போன்ற நைட்ரஜன் நிலைபடுத்திகள் பலவும், பிஎஸ்பி என்னும் பாஸ்பேட் கரைப்பு பக்டீரியாக்களும், பொட்டாஸ் கரைக்கும், பேசில்லஸ் கைலிகஸ்சஸ் போன்றவையும், சல்பர் கரைக்கும் தை ஆக்சிடன்டுகள் பலவும், ஃபெரஸ் பாக்டீரியாவும், கிடைக்காத ( முயற்சி மிக்க நுண் உயிர் ) மிகப்பல டிஜெக்டர் பெப்டிக் பாக்டீரியா சிற்றின வகைகளும், பலகோடி நன்மையும் முயற்சியும் மிக்க பாக்டீரிய வகைகளும், பூஞ்சானவகைகளும், ஆக்டினோமைசிடாஸ் போன்ற பிற நுண்னுயிர்களும் உள்ளன. 
பசு மாட்டுச் சாணத்தின் நன்மைதரும் கோடிகணக்கான நுண்ணுயிர்களால் நாம் வறுமையின் பிடியில் இருந்து வளமான வாழ்வை நோக்கி செல்லும்படி நம் விதியை கடவுள் விதித்துள்ளார். ஒரு கிராம் பசு மாட்டு சாணியில் 3௦௦ லிருந்து 5௦௦ கோடி நன்மை தரும் முயற்சியும் கொண்ட நுண்ணுயிர்கள் உள்ளன. எந்த வகையான முயற்சிமிக்க நுண்ணுயிர்களையும் கொண்ட கரைசல்களையும் நாம் வாங்க வேண்டிய தேவையின்றி நாட்டுப் பசுமாட்டின் சாணி நுண் உயிர் வளர்ப்பு ஊக்கியாக உள்ளது. 
நீங்கள் 1௦ கிலோ பசுமாட்டின் சாணியை 2௦௦ லிட்டர் நீரில் மூத்திரத்துடன் கலந்து, வெல்லபாகும், பருப்புமாவும் சேர்த்து ஜீவாமிர்தத்தை தயாரித்தால் உண்மையில் 3௦லிருந்து 5௦ லட்சம் கோடிகள் அதாவது 3௦,௦௦௦,௦௦௦லிருந்து 5௦,௦௦௦,௦௦௦ மில்லியன் முயற்சிமிக்க நுண்ணுயிர்கள் அந்நீரில் உருவாகின்றன. ஒவ்வொரு 2௦ நிமிட இடைவெளியிலும் விரைவாக நுண்ணுயிர்கள் தங்களை பெருக்கிக்கொள்ளும். இரண்டு நாட்களில் இந்த ஜீவாமிர்தத்தில் முயற்சியும் நன்மையும் மிக்க நுண்ணுயிர்கள் கடல் போல் பெருகும்.- சுபாஷ் பாலேக்கர். 
நண்பர்களே நாம் விவசாயம் செய்வதற்கு நாட்டு மாட்டு சாணி,மூத்திரமே போதும் அதை கொண்டு நுண்ணுயிர்களை பெருக்கி நம் நிலத்திற்கு தேவையான உரங்களை செலவில்லாமல் உற்பத்தி செய்யலாம். இதை புரிந்து கொண்டால் மட்டுமே நம்மால் விவசாயத்தை வெற்றிகரமாக செய்ய முடியும்.

வேப்பம் கொட்டையை

தமிழகத்தில் பல லட்சம் உழவர்கள் ரசாயனத்தை விட்டு வெளியே வர மனம் இல்லாமல், கவ்விபிடித்துகொண்டு இருப்பதுதான் வேதனை. தயங்கி நிற்கும் அந்த விவசாயிகள் தாராளமாக இயற்கை விவசாயத்தில் கால் பதிக்கலாம். அதற்கு முன்னோட்டமாக இங்கே சில யோசனை.
வேப்பம் கொட்டையை ஓர் இரவு முழுக்க தண்ணீரில் ஊர வைத்து, மறுநாள் காலையில் மாவாட்டும் இயந்திரத்தில் தண்ணீர் விட்டு அரைத்து காடா துணியில் ஊற்றி பிழிந்து, அதனுடன் காதி சோப்பை தூளாக்கி கலந்தால், வேப்பம் கொட்டை சாறு தயார். இதை நெற்பயிருக்கு தெளித்து நல்ல பலன் கிடைத்ததால் பலரும் இதை தொடர்ந்து கடைபிடித்து வருகிறார்கள்.
நீங்கள் பயன்படுத்தும் யூரியா, எளிதில் நீரில் கரையும். ஆனால் வேப்பம் பிண்ணாக்கை பொடி செய்து யூரியாவுடன் கலந்து தண்ணீர் தெளித்து மூடி வைத்திருந்து பின்னர் பயிருக்கு இட்டால் , யூரியா உடனடியாக நீரில் கரைவது தடுக்கப்படுகிறது. இதன் காரணமாக யூரியா உப்பு அதிக நாள் நிலத்தில் இருந்து, தேவையான நைட்ரஜனை பயிருக்கு வழங்குகிறது. இதனால் உரம் இடுவதில் சிக்கனமும்,நெற் பயிரில் கூடுதல் விளைச்சலும் கிடைப்பதாக பதிவு செய்யபட்டுள்ளது.
இப்போது புரிந்திருக்குமே வேம்பின் மகத்துவம். இயற்கை வழி விவசாயத்திற்கு மெல்ல தாவும் விவசாயிகள், இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.- டாக்டர். கோ. நம்மாழ்வார்.
இயற்கை வழி விவசாயத்திற்கு வேம்பின் அவசியம் போற்றப்பட வேண்டிய உதவி.

பீஜ அமிர்தம் ( விதை நேர்த்தி )

( வரும்முன் காப்பதற்காக நாம் நமது குழந்தைகளுக்கு தடுப்பு ஊசி போடுகிறோம், நமது கால்நடைகளுக்கும் தடுப்பு ஊசி போடுகிறோம். அதுபோல் நமது பயிர்களுக்கு நோய் வராமல் தடுப்பதற்கு விதை நேர்த்தி செய்ய வேண்டும். )
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உழவர்கள் பசுஞ்சாணம், கோமியம், வரப்பு அல்லது வயல் மண்ணால் விதைகளை விதை நேர்த்தி செய்வர். மகாராட்டிரத்தில் 5௦-6௦ ஆண்டுகளுக்கு முன்பே பருத்தி விதைகளை விதைநேர்த்தி செய்ய சிறிது பசுஞ்சாணம், கோமியம், முன்பு பருத்தி விளைந்த மண் ஆகியவற்றை பயன்படுத்தினர். இது பாரம்பரிய முறையும், முற்றிலும் அறிவியல் முறையும் ஆகும். 
ஆனால், வேளாண் பல்கலைகள் தலை காட்டிய பின்னால், வேளாண் துறையில் இருந்த நல்லவைகள் எல்லாம் அழிக்கப்பட்டு இயற்கைக்கு மாறானவையும், அறிவியலுக்கு மிக எதிரானவையும் உழவர் மீது நேரடியாவும், நகர்புற நுகர்வோர் மீது மறைமுகமாகவும் திணிக்கப்பட்டன. இப்போதோ எல்லா விசயங்களையும் கொண்டு உங்களை விதை நேர்த்தி செய்யசொல்கின்றன. நீங்கள் விஷமான பூஞ்சான கொல்லி அல்லது, மருந்துகளை விதை நேர்த்தியில் பயன்படுத்தினால், பயன்மிக்க செயல்விளைவுகளை ஏற்படுத்தும் நம் நண்பர்களான ( மண்ணிலுள்ள ) நுண்ணுயிர்கள் அழிந்து போகும். இந்த விஷமிக்க வேதிபொருட்கள் மூலம் நேர்த்தி செய்யப்படும் விதை முளைத்து வரும் பொழுது, இந்த விஷங்கள் வேர்கள் மூலம் மண்நீர் கரைசலில் இருந்து உறிஞ்சப்பட்டு தாவர உடல் உறுப்புகளில் சேரும்.அதாவது காய்கறிகள், பழங்கள், கிழங்குகள் போன்றவற்றில் கலக்கும். இவற்றை நாம் உண்ண, இந்த விஷங்கள் நமது உடலில் சேர்ந்து எலும்புருக்கி, நீரழிவு,புற்று, நெஞ்சக நோய்களை உண்டு பண்ணும். 
அது போலவே, உழவர்கள் விதைநேர்த்திக்காக பூஞ்சான கொல்லிகளையும் மருந்துகளையும் வாங்கும் பொழுது பெரும் சுரண்டலுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் அவர்கள் ஒத்தைக்கு இரண்டு மடங்கு விலை கொடுத்து பூஞ்சான கொல்லிகளை வாங்குகிறார்கள். இந்த அவலத்தை நாம் உடனே நிறுத்த வேண்டும். உடனடியாக நாம் பழைய உத்திகளை கையாள தொடங்க வேண்டும். அப்பழம் பெரும் உத்திகளில் நான் கூடுதலாக சில சோதனைகள் செய்துள்ளேன். ஏனெனில், இங்கு நிலமே விஷகாடாகி இருப்பதால் அவை அவசியமாகின்றன. என்னுடைய ஆய்வு சோதனைகளுக்கும் பிறகு இறுதியாக விதைநேர்த்தி செய்முறை, உழவர்களிடம் கையளிக்க ஆயத்தமாக உள்ளது. அதுதான் ‘ பீஜாமிர்தம்’ அதை எப்படி தயாரிப்பது. 
பீஜ அமிர்தம் தயாரிப்பு, அதன் உள்ளடக்கங்கள்:
1. நீர் 2௦ லிட்டர் 
2. நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ 
3. நாட்டு பசுவின் கோமியம் 5 லிட்டர் 
4. வரப்பு ( வயல் ) மண் கையளவு 
5. சுண்ணாம்பு 5௦ கிராம் 
2௦ லிட்டர் நீரை எடுக்கவும், 5 கிலோ சாணத்தை துணியில் சிறு முடிப்பாக முடியவும். 2௦ லிட்டர் நீரில் இரவு முழுவதும் துணி மூட்டையை தொங்க விடவும் ( 12 மணி நேரம் ) ஒரு லிட்டர் நீரை எடுத்து அதில் 5௦ கிராம் சுண்ணாம்பை கலந்து ஓர் இரவுக்கு அப்படியே வைத்து விடவும். மறுநாள் காலையில் சாணி மூட்டையை நீரில் மும்முறை தொடர்ந்து குலுக்கி சாணிப்பால் முழுவதும் நீரில் இறங்கும்படி செய்யவும். கையளவு மண்ணை இக்கரைசலில் இட்டு நன்கு கலக்கவும். கோமியம் 5 லிட்டர் எடுத்து, மேற்படி கரைசலில் சுண்ணாம்பு நீரையும் சேர்த்து கடிகார சுற்றில் கலக்கவும். விதைநேர்த்திக்கான பீஜாமிர்தம் இப்போது தயாராகிவிட்டது.
நெல் விதைகளை எடுக்கவும், தேவையான நீரை எடுத்து அதில் உப்பை கலந்து, விதைகளை அந்நீரிலிடவும். ஒரு மணி நேரம் அப்படியே இருக்கட்டும். சிதைந்தவையும், பூச்சி அரித்த விதைகள் நீரின் மேல் மிதக்கும். அவற்றை எடுத்து மண் மூடாக்காக பயன்படுத்தலாம். உப்பு நீரில் மூழ்கி இருக்கும் சிறந்த தரமான மீதி விதைகளை நீரிலிருந்து எடுக்கவும். அவற்றை நிழலில் உலர்த்தி பின், பீஜாமிர்தத்தில் இந்த விதைகளை நேர்த்தி செய்து தூவவும். தூவும் எந்த விதைகளையும் பீஜாமிர்தம் கலந்து கையில் நன்கு கலக்கி, நன்கு உலர்ந்தபின் விதைக்கவும்.
நீங்கள் கரும்பு விதைகளையோ, வாழை விதைகளையோ, இஞ்சியையோ, மஞ்சளையோ 2௦ லிட்டர் நீருக்கு பதிலாக 40 லிட்டர் நீரை கொண்ட பீஜாமிர்தம் கரைசலை எடுத்து விதைநேர்த்தி செய்யலாம். மீதி செயல்முறைகள் பீஜாமிர்தம் செய்ய மேற்கொண்ட அதே செயல் முறைகளே. கரும்பு அல்லது வாழை அல்லது இஞ்சி அல்லது மஞ்சள் விதைகளை எடுத்து பீஜாமிர்தத்தில் சேர்க்கவும். சில நிமிடங்கள் கழித்து அதிலிருந்து எடுத்து வயலில் நடவும். நெல், தக்காளி, கத்திரி, வெங்காயம், காளிபூ, கோசு, மிளகாய் அல்லது எந்த வகையான நாற்றையும் கையிலெடுத்து, அவற்றின் வேர்களை பீஜாமிர்தத்தில் நனைத்து நடவும். நீங்கள் வெட்டி நாடும் எந்த தாவரத்தையும் நட விரும்பினால் அது நன்கு முளைக்க, வெட்டிய துண்டை பீஜாமிர்தத்தில் நனைத்து வயலில் நடவும். 
நீங்கள் இருபுற வெடிகனிப் பயிர்களான பசிப்பயிறு, உளுந்து, மொச்சை, தட்டை, நிலக்கடலை போன்றவற்றை பீஜாமிர்தத்தில் கலந்து சில நிமிடங்கள் வைத்திருந்து, விதை நேர்த்தி செய்து உலர்த்தி விதைக்கவும். இருபுற வெடிகனி விதைகளை எக்காரணம் கொண்டும் கைகளால் தேய்க்க கூடாது. அவ்வாறு செய்தால் மேல்தோல் கழன்று முளைப்பு திறன் குன்றும். ’’ பீஜாமிர்தம் விதைகளை தீமை பயக்கும் பூஞ்சான பாக்டீரியாக்கள், நோய் ஊக்கிகள், போன்றவற்றிலிருந்தும், அதே சமயம் பயிர்களை மண்ணில் உருவாகும் நோய்களிலிருந்தும் காக்கிறது. பீஜாமிர்தத்தில் ஆர்மோன்களும், ஆல்கலைடுகளும் உள்ளன. அவை முளைப்பு திறனை கூட்டும். கருவில் முலைப்புக்கு எதிரான வேதிபோருட்களை நடுநிலலைப்படுத்தும். நாற்றுக்களுக்கு தற்காப்பு திறனை தரும் ‘’ --- சுபாஷ் பாலேக்கர்.