Wednesday 16 October 2013

துரிஞ்சல் இலை மாடுகள்... நெகிழ வைக்கும் நாட்டுரகம் !





தன்னையே கொடுப்பதில் வாழைக்கு ஈடு...

சம்சாரி வாழ்வுக்கு ஒரு பசுமாடு...
பொன்னையே தந்தாலும் உனக்கேது ஈடு...
பூப்போல வைத்துன்னை காப்பதென்பாடு’

'மாட்டுக்கார வேலன்' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இப்படி ஆயிரமாயிரம் பாடல்களில் நாட்டு மாடுகளை போற்றிக் கொண்டிருந்த மண்தான் நம்முடையது. ஆனால், அதிக பால் உற்பத்திக்காக கலப்பு இன மாடுகள் வந்த பிறகு, சீந்துவார் இல்லாமல் அடிமாடுகளாக அழிந்து கொண்டிருக்கின்றன, நாட்டுமாடுகள். இருந்தாலும், இவற்றின் மேல் ஈர்ப்புக் குறையாத சிலர், இன்னும் அதை விடாமல் ஆர்வமுடன் வளர்த்து வருகிறார்கள்.

கொங்கு சீமைக்கு காங்கேயம்; டெல்டா பகுதிகளுக்கு உம்பளாச்சேரி; திருச்சி, மதுரை பகுதிகளுக்கு மணப்பாறை... என ஒவ்வொரு பகுதிக்கும் ஓர் இனம் அடையாளமாக இருப்பதுபோல... கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அடையாளம், 'துரிஞ்சல் இலை’ ரக நாட்டு மாடுகள். இந்த மாடுகளின் பூர்வீகம் குடியாத்தம், பேர்ணாம்பட், சித்தூர் மலைப்பகுதிகள். என்றாலும், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிகளவு வளர்க்கப்பட்டு வருவதால், அம்மாவட்டத்தின் அடையாளமாகவே மாறிவிட்டன.

கிருஷ்ணகிரி-மத்தூர் சாலையில் 22 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கரடிகொல்லப்பட்டி கிராமம். அங்குள்ள ஏரியைக் கடந்து தோப்புகளின் வழியாகச் சென்றால்... மாமரங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கிறது, உத்தேரி கொட்டாய் என்னும் குட்டி ஊர். இங்கே அனைத்து வீடுகளிலும் துரிஞ்சல் இலை இன மாடுகள் இருக்கின்றன. அதை வைத்திருப்பதைப் பெருமையாகவே நினைக்கிறார்கள், உத்தேரி கொட்டாய் விவசாயிகள்.

பல வருடங்களாக துரிஞ்சல் மாடுகளை வளர்த்து வரும் காளியப்பனிடம் பேசினோம், ''ஒரு காலத்துல வேலூர் பக்கம் மேய்ச்சல் இல்லாம வறட்சியா இருந்ததால, இந்த ரக மாடுகளை மேய்க்கறதுக்காக இந்தப் பக்கம் ஓட்டிட்டு வந்திருக்காங்க. காலப்போக்குல இந்த மாடுகள் அடிக்கடி எங்க பக்கம் வரவே, எங்க தாத்தா கொஞ்சம் மாடுகள வாங்கி, ஏருக்கு, வண்டிக்குனு பழக்கி ஓட்ட ஆரம்பிச்சார். அது, வேலைக்கு நல்லா தாங்கவும், தொடர்ந்து வளர்க்க ஆரம்பிச்சுட்டாரு. அவர் காலத்துக்குப் பிறகும் நாங்க, துரிஞ்சல் தழ (இலை) மாடுகள விடாம வளர்த்துக்கிட்டிருக்கோம்'' என்று மாடுகளின் பூர்வீகம் சொன்ன காளியப்பன், தொடர்ந்தார். 

தவிடு, புண்ணாக்கு எதுவும் தேவையில்லை!

இது துரிஞ்சல் தழைகள விரும்பிச் சாப்பிடும். புல், காய்ஞ்ச கடலக்கொடி, கொள், பொட்டுனு நாட்டு மாடுக சாப்பிடற எல்லாத்தையும் சாப்பிட்டாலும், துரிஞ்சல் தழையைச் சாப்பிட்டாதான் உடம்பு உருண்டு தினுசா வருது. இந்த தழைகள் இல்லாட்டி... மாடுக காஞ்சி போயிடுது. இந்தத் தழையைக் கொடுத்துட்டே இருந்தா தெம்பா வேலை செய்யுது. அதனாலதான் இந்தப் பேரே வந்துச்சு. ஒரு சணல் கோணி அளவுக்கு துரிஞ்சல் இலையை உருவி எடுத்துட்டு வந்தா... ஒரு மாட்டுக்கு ரெண்டு நாளைக்கு வரும். காலையில 11 மணி, சாயந்தரம் 4 மணினு ரெண்டு நேரமும் தொட்டி தண்ணிக்குள்ள இலையை அமுத்தி விட்டுடுவோம். தவுடு, பிண்ணாக்கு, புல்லு எதுவும் தேவைஇல்லை. நாங்க மேய்ச்சலுக்குக்கூட புடிச்சிட்டுப் போறதில்லை. தினமும் 10 மணி நேரத்துக்கு சலிக்காம வேல செய்யுது. ஒரு ஜதை மாடு 35 ஆயிரம் ரூபாய்ல இருந்து, 45 ஆயிரம் ரூபாய் வரை விலை போகுது. கன்னுக்குட்டிகளாப் பாத்து வாங்கி வளர்த்து வித்தா... நல்ல காசு பாக்க முடியும். மாசத்துல 20 நாள் ஏர் ஓட்டினாகூட... ஒரு நாளைக்கு காலையில 500 ரூபா, சாயந்தரம் 400 ரூபாய்னு, 20 நாளைக்கு 18 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது'' என்றார் காளியப்பன் சந்தோஷமாக.

உழவு மட்டுமல்ல பாலும் கிடைக்கும்!

இதே ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமி, ''குடியாத்தத்துக்கு பக்கத்தில இருக்கற கல்லப்பாடி, மோட்டூர்லருந்து இந்த மாடுகள வாங்கினேன். இதைத் தனியா புடிச்சுட்டு மேய்க்க வேண்டியதில்ல. காட்டுல விட்டா அதுவா மேஞ்சிட்டு வந்துடும். தை, மாசி, பங்குனி, சித்திரைனு 4 மாசமும் துரிஞ்சல் இலை கிடைக்கிறதில்ல. அந்த நேரத்துல கடலைக்கொடி, கொள்ளு, வைக்கோல் போட்டு சமாளிக்கிறோம். ஆனா, அந்த நேரத்துல ஒடம்பு கொஞ்சம் உட்டுப்போகும். வைகாசி மாசத்துல துளிர் போடற துரிஞ்ச இலைகள மேஞ்சதும், பழையபடி ஒடம்பு நல்லா வந்துடும்'' என்கிறார். 

அவரைத் தொடர்ந்த துரை, ''வெளிநாட்டுல வேலை பாத்துட்டு திரும்ப வந்து விவசாயம் பார்க்க நினைச்சப்ப... இந்த மாடுகளதான் வாங்கணும்னு தோணுச்சு. ஏன்னா... உழவுக்கும் தாங்குது... வீட்டுக்குத் தேவையான பாலும் கிடைக்குது. காலையில ரெண்டரை லிட்டர், சாய்ந்தரத்தில ஒன்றரை லிட்டர் கறக்குது. கன்னுகுட்டிக்கு நல்லா பால விட்டுட்டு வீட்டுக்குக் குறைவாத்தான் எடுத்துக்கறோம். இதோட உடம்பு தினுசு, நாட்டுரகங்கள்லயே ரொம்ப உருட்டா தெரியும். இதை வெச்சே ரகத்தைக் கண்டுபிடிச்சிட முடியும்'' என்று தொழில்நுட்பம் சொன்னார்.

வாழ்க... நாட்டு மாடுகள்!

துரிஞ்சல் இலை மாடுகளைப் புதிதாக வாங்குவோருக்காக காளியப்பன் தரும் ஆலோசனைக் குறிப்புகள்: 'இந்த இன மாடுகள், பெரும்பாலும் பாய்ச்சல் காட்டாது. அப்படியே இருந்தாலும் பழகப்பழக பாய்ச்சலைக் குறைத்துவிடும். வெயிலுக்குத் தாங்காது. மழைக்கு நன்றாகத் தாங்கும். பட்டியிலிருந்து வாங்குகிற மாடுகள், புது ஆட்களைக் கண்டால் மிரளும்... வண்டிகளைப் பார்த்தால் தூரத்துக்கு ஓடிவிடும். வாங்கி வந்த உடனே, மூக்கணாங்கயிறு குத்தி கையில பிடித்து பழக்கப்படுத்த வேண்டும். பிறகு, வேலைகளில் கொஞ்சம் கொஞ்சமாக ஈடுபடுத்தலாம். ஆரம்பத்தில் இரண்டு மாடுகளையும் கலந்துகட்டி ஏர் ஓட்டும்போது ஒன்றுக்கு ஒன்று மாறி மாறிப்போகும். அதட்டி, உருட்டி ஒரு வழிக்கு கொண்டு வர வேண்டும். இப்படி பழக, ஒரு மாதம் கூட ஆகலாம். காட்டில் மேய்ந்து பழக்கப்பட்ட மாடுகள் என்பதால், வேலை முடிந்ததும் கொஞ்ச நேரம் காட்டில் மேயவிடுவது நல்லது.’

No comments:

Post a Comment