'ஒற்றை ஏர் கூட இல்லாதவன் வாழ வக்கற்றவன்' என்ற பழமொழிக்கு ஏற்ப தான் வசாயிகள் மந்தை மந்தையாக பாரம்பரிய மாடுகளை வைத்திருந்தனர். என்றைக்கு அதிக பால் மோகம் வந்ததோ… அன்றைக்கே உள்ளூர் மாடுகள் அழிப்பும், கலப்பின மாடுகள் இறக்குமதியும் பெருகி விட்டது. ஏர் ஓடிய நிலங்களில் எல்லாம் இப்போது டிராக்டர்களின் ஆட்சி நடக்கிறது. ஏரில் பூட்டப்பட்ட மாடுகள் எல்லாம்,… அடிமாடுகளாகி விட்டன. இப்போது எங்கு பார்த்தாலும் பெருகிக் கிடப்பது…
பாலுக்காகவே வளர்க்கப்படும் வெளிநாட்டுக் கலப்பின மாடுகள் தான். கால்நடைகளைப் போற்றிப் பாதுகாத்த… நிலக்கிழார்கள் தொடங்கி, அரை ஏக்கர் விவசாயி வரை… தான் எத்தனை ஜதை ஏர்களுக்கு சொந்தக்காரன் என்று சொல்லிக்கொள்வதிலே தான் பெருமைப்பட்டனர். அதற்காகவே, மாடுகளை பட்டிப்பட்டியாக தொழுவத்தில் அடைத்து வளர்த்தனர். அந்த மாடுகள், நிலத்திற்கு தேவையான எருவைக் கொடுத்து, உழவும் செய்தது. 1936-ம் ஆண்டு வேளாண் துறையின் கீழ் இயங்கிய கால்நடைத் துறையில் துணை இயக்குநராக வேலை பார்த்த ’கேப்டன் லிட்டில் உட்’ என்பவர், தான் எழுதிய ‘தென்னிந்திய கால்நடைகள்’ என்ற புத்தகத்தில் ‘தமிழர்கள் காளங் கன்றுகள் பிறந்தால் பால் முழுவதையும் கன்றுகளைக் குடிக்க விட்டும், பசுங் கன்றுகள் பிறந்தால் கவனிப்பாரற்றும் வளர்த்தனர். டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் அறுவடை முடிந்ததும், வயல்களில் முழுவதும் மண்டிக் கிடக்கும் புற்களையும், உயரமான நெல் தாளையும் மேய்வதற்கு முதலில்… காளங்கன்று ஈன்ற பசுவை தான் அனுமதித்தனர்.’ என்று சொல்லி இருக்கிறார். அதை மெய்ப்பிக்கும் வகையில் தான் நம்முடைய முன்னோர்கள் தரமான காளை மாடுகளை உருவாக்கினர். நிறம், கொம்பு அமைப்பு, கால் குளம்பு அமைப்பு, சுழி போன்றவற்றைப் பார்த்து சிறந்த குணாதிசயம் இருக்கும் காளங் கன்றுகளைதான் பொலி காளைகளாகத் தேர்வு செய்து கோவில் மாடுகளாகத் திரிய விட்டனர். பொலி காளையை பொதுத் சொத்தாகப் போற்றி பாதுகாத்தனர். இந்தக் காளைகள் யார் நிலத்தில் வேண்டுமானாலும், எவ்வளவு வேண்டுமானாலும் மேய்ந்து கொள்ளலாம். சேதங்கள் அனைத்தும், சமுதாய நலனைக் கருத்தில் கொண்டு பொறுத்துக் கொள்ளப்பட்டது. அதன் விளைவாக ஊர் முழுவதும் பருவத்திற்கு வரும் மாடுகளை மோப்பம் பிடித்து… கூடி, மனிதனின் உதவிகள் இன்றி ஊர் முழுவதும் தரமான காளைகள் உற்பத்தியாகின. அவை அதிகமான இழுவைத் திறன், நோய் எதிர்ப்பு சக்தி, குறியீட்டு ஒலிகளை எளிதில் புரிந்துகொள்ளும் சக்தி கொண்டவையாக இருந்தன. காளைகளில்… நோஞ்சான்கள், கொம்பு வளைந்தவை, அடர்த்தி குறைந்த வால் உள்ளவை, ஓடுகாலித்தனம் உள்ளவை, திருட்டுத்தனம் போன்ற குணாதிசயம் உள்ள காளைகளை இனப்பெருக்கம் செய்ய விடாமல் காயடித்து ’ஆண்மை நீக்கம்’ செய்து… உயிர்ம நேயத்துடன் வண்டி இழுவைக்கவும், உழவுக்கும் பயன்படுத்தினர். இதன் மூலம் பகுதிக்கு ஏற்ற தரமான காளை மாடுகள் உருவாகின. உதாரணமாக காங்கேயம் மற்றும் உம்பளாச்சேரி மாடுகளைப் பற்றிச் சொல்லலாம். காங்கேயம் ரக மாடுகளுக்கு நோய், நொடிகள் எளிதில் தாக்காது.
தீவனப் பற்றாக்குறை இருக்கும் நேரங்களில் பனை ஓலை, கொழுக்கட்டைப் புல் என்று கிடைத்ததை உண்டு, உழவு, இழுவை வேலைகளை சோர்வடையாமல் செய்யக்கூடிய ஒரு ரகம். காங்கேயம் பசு இரண்டு லிட்டருக்குக் குறையாமல் பால் கொடுக்கும். உம்பளாச்சேரி காளை டெல்டா பகுதியில் இருக்கக் கூடிய தொடைகால் சேற்றில் கூட தொடர்ச்சியாக 8 மணி நேரம் சோர்வில்லாமல் வேலை செய்ய வல்லது. இந்த மாட்டின் கால் குளம்பு, குதிரைக் குளம்பு போல இருக்கும் . காலை தரையில் வைத்து இழுக்காமல் தூக்கி வைத்து நடக்கும். ஒவ்வொரு பசு மாடும் சராசரியாக 7 ஈத்து வரைக்கும் ஈனக் கூடியது. இந்த ரக மாடும் தினமும் ரெண்டரை லிட்டருக்கு குறையாமல் பால் கொடுக்கக் கூடியது தான். இன்னும் பர்கூர் மலை மாடு, புலிக்குளம், மணப்பாறை, கண்ணாபுரம் என்று மாட்டினங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவ்வளவு பெருமைகளோடு, காலம் காலமாக போற்றி வளர்த்த மாடுகள் அனைத்தையும் ‘வெண்மைப் புரட்சிக்கு’ பலி கொடுக்க ஆரம்பித்ததன் விளைவு தான்… கால் காணி ( 33 சென்ட்) நிலத்திற்கு கூட டிராக்டர் இல்லாத விவசாயம் சாத்தியமில்லாத நிலை. பர்கூர் மாடு பர்கூர் மாடு இந்த வெண்மைப் புரட்சி (வெங்காயம்) வந்த பிறகு… நம் நாட்டில் சுற்றித் திரிந்த தரமான காளைகள் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக காயடித்து ஆண்மை நீக்கம் செய்யப்படுவதும்; ஊர் முழுவதும் சுற்றித் திரிந்து பசுக்களில் திருட்டுத் தனமாக சினை ஊசி செலுத்தும் செயல்களும் அரங்கேற ஆரம்பித்துள்ளன. இன்றைக்குக் காணுமிடமெல்லாம் கலப்பின மாடுகள் ராஜ்ஜியமாக மாறிப் போனது. இந்தக் கலப்பின மாட்டை உற்பத்திச் செய்வதில் தான் அரசு மிகுந்த கவனமாக இருந்ததே ஒழிய… உள்ளூர் மாட்டினங்களைப் பாதுக்காக்கவில்லை. கலப்பினப் பசுக்களால் பால் வளம் பெருகியது… காளைகள் குறைந்தன. கூடவே பலவிதமான நோய்களும் வரத் துவங்கின. இன்றைக்கு காளைகள் உழுத நிலத்தில் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களின் டிராக்டர்களது உழவு தான் நடக்கின்றன. காளைகள் மண்ணை செழிக்க வைக்க உரமிட்டது. ஆனால் டிராக்டர் டீசலைக் குடித்துவிட்டு புகையை விட்டது. கூடவே, ஆயிலையும் பீச்சியடிக்கிறது. மாடு சிறுநீர் கழித்தால் உரம்; டிராக்டரில் இருந்து வெளியேற்றப்படும் ஒரு லிட்டர் ஆயில் தண்ணீரில் கலந்தால்… 1.58 லட்சம் லிட்டர்கள் தண்ணீர் நாசம்.கூடவே, நிலத்தில் கலந்தால் மண் மலடாகும். ஒரு கலப்பின மாட்டை உருவாக்குவதற்காக சுமார் 50 ஆயிரம் ரூபாய்கள் வீதம், ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களைச் செலவு செய்கின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். அப்படி உற்பத்தி செய்யப்படும் மாடுகளில் பலவிதமான வியாதிகள்… சினை பிடிப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டு… இன்றைக்கு அனைத்து மாடுகளும் கேரளாவுக்கு அடி மாட்டுக்கு ஏற்றப்படுகிறது. ஒரு உயிரினத்தில் 67 சதவீத அளவு தான் கலப்பு செய்யலாம் என்ற சட்டம் இருக்கும் போது, மாடுகளில் மட்டும் இது வரையில் 90 சதவீதம் கலப்பின மாடுகள் உருவாக்கி இருக்கிறனர். கலப்பின மாடுகள் பெருக்கத்தால்… ரகத்திற்கு பெயர் தெரியாத நாட்டு மாடுகளை ND (none described) என்ற பெயர் வைத்து, கலப்பு செய்து விட்டனர். இதனால் இன்றைக்கு பல இனங்கள் இல்லாமல் போய் விட்டது. தற்பொழுது வரை, இந்தியா முழுவதும் 30 வகை மாட்டினங்கள் மட்டும்தான் வகைப்படுத்தப் பட்டிக்கிறது. வகைப்படுத்தப் படாமல் சுமார் 30 இனங்கள் இருக்கின்றன. தமிழ் நாட்டில் காங்கேயம், உம்பளாச்சேரி ரக மாடுகளைத் தவிர… திருவண்ணாமலை, பர்கூர், புலிக்குளம், மணப்பாறை, கிடை மாடுகள் என்று பலவகையான இனங்கள் இதுவரை வரையறை செய்யப்படாமலே இருக்கின்றன. 1972 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட பத்து ஆண்டுகளில் ‘வெண்மைப் புரட்சியின்’ விளைவால் 1.25 லட்சம் காளை மாடுகள் குறைந்துள்ளதாகவும், 1976 மற்றும் 1982-ஆம் ஆண்டுக்கு இடைப்பட்ட ஆறு ஆண்டுகளில் மட்டும் ’பர்கூர்’ இனக் காளைகள் 49 சதவீதமும், ’காங்கேயம்’ இனக் காளைகள் 18 சதவீதமும் அழிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் கால்நடைக் கணக்கெடுப்புப் புள்ளிவிபரம் சொல்கிறது. பொதுவாக பிறக்கும் கன்றின் எடையில் 10 சதவீதம் தான் தாய்ப்பால் சுரப்பு இருக்கும். அதன்படி 20 கிலோ எடை கொண்ட பசுங் கன்றின் எடையில் 1/10 பால் என்று 2 லிட்டர்கள் பால் தான் சுரக்கும். இந்தப் பால் குறைவாக சுரக்கிறது என்பது தான் அவர்களின் வாதம். அதற்காகத்தான் செயற்கை முறையில் குளிர் நாடுகளில் இருந்து உறை விந்துகளை இறக்குமதி செய்து செயற்கை முறையில் கருவூட்டலை அதிகப்படுத்தினார்கள். கன்று ஈன்ற 60 நாள் இடைவெளியில் பருவத்திற்கு வந்தவுடன் பசுவுக்கு கருவூட்டல் செய்யப்பட்டு, வருடம் முழுவதும் உள்ள 365 நாட்களில் பெரும்பாலான நாட்களும் இயந்திரத்தைப் போன்று பாலைக் கறப்பதிலேயே குறியாக இருந்தனர். பால் உற்பத்தியும் பெருகியது. பாலுக்கு பசு மாடு மட்டும் போதும், காளை தேவையில்லை என்று காளை அழிப்பு நடத்த நடத்த… வியாதிகளும் அதிகமாகியது. குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் ‘பாலுணர்வு மந்தமாகவே’ இருக்கும். அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில் கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டு மாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சினை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது… மாட்டின் ‘ஜீனில்’ மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர்கள் பாலைக் கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர்கள் பால் கறவை செய்கின்றனர். பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில் கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சினைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. ‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. தவழும் வரை தான் தாய்ப்பால். உலகத்தில் 4300 பாலுட்டிகள் இருக்கிறது. அவற்றில் மனித இனத்திற்கு மட்டும் தான் பால் சுரப்பதில் சிக்கல் இருக்கிறது. 15, 16 வயதில் பருவமடைந்த பெண் மக்கள் தற்போது விபரம் தெரியாத 10, 11 வயதிலே பருவமடைந்து விடுகிறனர். சிறு வயதில் ஆரம்பமாகும் மாத விலக்கு… நடுத்தர வயதிலே நின்று விடுகிறது. மேலும், குழந்தை பெற்றுக்கொள்ளும் போது, ‘சிசேரியன்’ முறையில் குழந்தை பிறக்கிறது. தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த மூன்று நாட்களுக்கு மேல்… தாய்ப் பால் சுரப்பு இல்லாமல் போய் விடுகிறது. ஆண்களுக்கு பால் தன்மை அதிகமாக தூண்டி விடுகிறது. இவ்வாறு ஒழுங்கற்ற ஹார்மோன் சுரப்பால் ஏழில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை உருவாகி இருக்கிறது.” என்கிறார் மருத்துவர் காசி.பிச்சை. பால்… குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2 என்று இரண்டு வகை இருக்கிறது. பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ் ( திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின் மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்… அது குடலில் செறிக்கப்படும் போது BCM7 (beta-caso-morpine-7) ஆக மாற்றமடைந்து, நீரிழிவு,நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ”ஏ2 கேசின் உள்ள பாலைக் குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது” என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட். ஏ1, ஏ2 பாலைப் பற்றி… 1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப் எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய் ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ’சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டு பிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சினை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார். தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும் மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1 பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது. நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் பேசிய கால்நடைத்துறை அமைச்சர் சின்னய்யா, தமிழ்நாட்டில் எல்லா மாடுகளும் ‘அம்மா… அம்மா…’ என்று கத்துவதாகச் சொல்லி இருக்கிறார். இந்த கால்நடைத்துறை மு(ம)ந்திரி கலப்பின கால்நடைகள் கத்துவதை கேட்டிருக்க மாட்டார் போலும். தற்பொழுது எந்த கலப்பின மாடும் ‘அம்மா’ என்று கூட கத்த திராணி இல்லாமல்… ‘ம்ம்ம்ம்ம்ம்ம்மா..ஆஆஆஆ’ என்று விநோதமாகத்தான் கத்துகிறது. தமிழக முதல்வர் அம்மையார் கோவில் கோவிலாக போய் நந்தியை வழிப்படுகிறாரே… காளைகளை அழித்து விட்டு ஏன் நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும். ‘தஞ்சை பெருவுடையார் கோவிலில் இருக்கும் நந்தியை எடுத்துவிட்டு, சிவனுக்கு டிராக்டரை பிரதிஷ்டையாக நிறுத்த வேண்டியது தானே! காளை மாடுகளின் அழிவு என்பது ஒரு கலாச்சாரத்தின் அழிவு தான். மாடு சுமந்த ஏர்க் கலப்பைகளின் மரணம் தான். கால்நடைகளை மட்டும் இழக்கவில்லை. நம்முடைய பாரம்பரியம்… அனுபவத்தில் முதிர்ந்த சான்றோர்களின் அறிவையும் உதாசீனப்படுத்தி விட்டோம். இனியாவது மண்ணுக்கு ஏற்ற மரபுக்கு ஏற்ற… பாரம்பரிய கால்நடை இனத்தைப் பாதுகாக்க வேண்டும். வெண்மைப் புரட்சி என்ற பெயரில் ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்து விட்டன. விவசாயிகள் பசுமைப் புரட்சியால் மலடாகிப் போன நிலத்தை உழுவதற்கு காளைகள் இல்லாமல் போகின்றன. புதிய பொருளாதாரக் கொள்கை ஆரம்பித்த இருபது ஆண்டுகளில் விதை உள்ளிட்ட இடுபொருட்களுக்கு பன்னாட்டுக் கம்பெனிகளை எதிர்பார்க்கிறோம் என்றால் உழவு செய்ய காளைகளையும் இறக்குமதி செய்ய நேரிடலாம்.
No comments:
Post a Comment